சிறப்புச் செய்திகள்

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலையும் வாழப்பாடி கொலையும்: மாறாத காவல் துறை!  

DIN


சாத்தான்குளம் தந்தை - மகன் கொலையின் முதலாண்டு நினைவு நாளிலேயே சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காவல் அதிகாரி தாக்கியதில் படுகாயமுற்று விவசாயி உயிரிழந்த கொடுமை  நேர்ந்திருக்கிறது.

கடந்தாண்டு ஜூன் 19-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடை அடைப்பது தொடர்பாக எழுந்த பிரச்னையில் ஜெயராஜ் (59) காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தந்தை அழைத்துச் செல்லப்பட்டதையறிந்த பென்னிக்ஸ் (31) காவல் நிலையம் சென்றார்.

ஆனால், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை காவலர்கள் விடுவிக்கவில்லை. இருவரும் அன்றிரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு கடுமையான தாக்குதலுக்குள்ளாகினர்.

ஜூன் 20 காலை 7 மணியிலிருந்து பகல் 12 மணி வரை இருவருக்கும் 7 முறை உடை மாற்றும் அளவுக்கு ரத்தக் கசிவுகள் ஏற்பட்டதாக பென்னிக்ஸ் நண்பர்கள் தெரிவித்தனர். இந்தக் கொடூரத்தின் விளைவு ஜூன் 22-ம் தேதி பென்னிக்ஸ் உயிரிழந்தார். சில மணி நேரங்களில் தந்தை ஜெயராஜும் ஜூன் 23-ம் தேதி உயிரிழந்தார்.இது தமிழகம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. இதன் ஓராண்டு நினைவு தினம் நேற்று (செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்பட்டது. இந்தத் துயர நினைவுகள் இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், முதலாம் ஆண்டு நினைவு தினத்தன்றே மீண்டும் ஒரு சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த இடையபட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் காவல் துறையினர் தாக்கியதில் இன்று (புதன்கிழமை) உயிரிழந்திருக்கிறார்.

இடையபட்டி-வாழப்பாடி சாலையில் மளிகை மற்றும் பழக்கடைகள் நடத்தி வந்தவர் முருகேசன். இவர் நேற்று நண்பர்களுடன் கல்வராயன்மலை வெள்ளிமலைப் பகுதியில் மது அருந்திவிட்டு திரும்பியுள்ளார். கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி வனத்துறை சோதனைச் சாவடி அருகே முருகேசன் மற்றும் நண்பர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். 

இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த காவலர்கள் முருகேசனைக் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் தவறி விழுந்த முருகேசனின் தலையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து, அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் உடல்நிலை மோசமடைந்ததால் முருகேசன் இன்று உயிரிழந்தார்.

இறந்த முருகேசனுக்கு மனைவியும், இரு மகள்களும், மகனும் உள்ளனர்.

காலங்கள் மாறினாலும் காட்சிகளும் காவல் துறையினரின் மனநிலையும் மாறாமல் இருப்பது இதுபோன்ற கொடூரச் சம்பவஙகளை அடுக்கிக்கொண்டே இருக்கிறது.

வழக்குகளும், விசாரணைகளும், தண்டனைகளும் தீர்வா..? இவற்றுக்கு முற்றுப்புள்ளி எப்போது..?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

SCROLL FOR NEXT