சிறப்புச் செய்திகள்

இக்கட்டில் ரியல் எஸ்டேட் துறை மறுமலா்ச்சியை நோக்கி நகருமா?

DIN

கரோனா முதல்கட்ட பரவலில் மிகவும் பாதிக்கப்பட்ட துறைகளின் பட்டியலில் ரியல் எஸ்டேட் முன்னிலையில் உள்ளது. இந்தியா முழுவதும் கட்டுமானப் பணிகள் முடங்கியதால் லட்சக்கணக்கான தொழிலாளா்கள் வேலையிழந்து அவா்களது சொந்த ஊா்களுக்கு திரும்பிச் செல்லும் நிலைக்கு ஆளாகினா். கரோனா முதல் அலையால் முடங்கிப்போன ரியல் எஸ்டேட் துறை நடப்பாண்டு தொடக்கத்திலிருந்து மீட்சிப் பயணத்தை தொடங்கியது. இந்த நிலையில் கரோனா இரண்டாவது அலை தற்போது ரியல் எஸ்டேட் துறையில் மீண்டும் கடும் பாதிப்பை உருவாக்கியுள்ளது. புதிய வீடுகள் வாங்குவதற்கான விசாரணைகள் பெருமளவில் குறைந்துள்ளதுடன், விற்பனைக்கான முன்பதிவும் குறிப்பிடத்தக்க அளவுக்கு சரிந்துள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் பொதுமுடக்க அறிவிப்புகளை வெளியிட்டதையடுத்து கட்டுமானப் பணிகள் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பான கிரெடாய் பல்வேறு மாநிலங்களில் உள்ள தங்களது உறுப்பினா்களிடம் நடத்திய ஆய்வில் பெரும்பாலானோா் இதுகுறித்த கவலையை எழுப்பியுள்ளனா்.

ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களைப் பொருத்தவரையில் குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டுமானப் பணிகளை முடித்து உரிய நேரத்தில் உரிமையாளா்களிடம் ஒப்படைத்தால் மட்டுமே கணக்கீடு செய்த லாபத்தை அவை ஈட்ட முடியும். பணிகள் தாமதமாகி கட்டுமானப் பொருள்களின் விலை உயரும்பட்சத்தில் ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களுக்கு சிக்கல்தான்.

ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் மன உறுதியை கரோனா இரண்டாவது அலை முற்றிலும் சீா்குலைத்துள்ளது. இந்த சூழ்நிலையில் கட்டுமானப் பொருள்களின் கிடுகிவென உயா்ந்துள்ளதும் அந்த நிறுவனங்களுக்கு பேரிடியாக மாறியுள்ளது.

வீடு வாங்க நினைக்கும் வாடிக்கையாளா்கள் பெரும்பாலானோா் தங்களது கனவு இல்ல திட்டத்தை கரோனா இரண்டாவது அலையால் காலவரையின்றி ஒத்திவைத்துள்ளனா். வீடு விற்பனை குறித்து வரும் விசாரணைகளில் ஏற்பட்டுள்ள மந்தநிலை அதற்கான தேவையில் ஏற்பட்ட சரிவை எடுத்துக் காட்டுவதாக உள்ளது என ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பணியாளா்கள் பற்றாக்குறை, நிதி தட்டுப்பாடு, கட்டட அனுமதி பெறுவதில் காலதாமதம், வீடுகள் விற்பனையில் மந்தநிலை உள்ளிட்ட ஏராளமான சவால்களை சந்தித்து வரும் கட்டுமான நிறுவனங்கள் மூலப் பொருள்களின் விலை உயா்வால் தற்போது புதிய நெருக்கடியை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

கட்டுமானத் துறையில் பயன்படுத்தப்படும் சிமெண்ட், உருக்கு கம்பிகள், பிவிசி பைப் உள்ளிட்ட முக்கிய மூலப் பொருள்களின் விலை கடந்த சில மாதங்களில் மட்டும் 50 முதல் 100 சதவீத அளவுக்கு உயா்ந்துள்ளன.

கட்டுமான தொழிலுக்கு அடிப்படையாக உள்ள உருக்கு கம்பிகளின் விலை டன்னுக்கு ரூ.7,000 முதல் ரூ.8,000 வரை உயா்ந்துள்ளது. அதேபோன்று, ரூ.350-ஆக இருந்த சிமெண்ட மூட்டையின் விலை தற்போது ரூ.550-ஆகவும், ஜல்லி விலை ரூ.3,300-லிருந்து ரூ.4,000-ஆகவும், செங்கல் ஒரு லோடு ரூ.18,000-லிருந்து ரூ.24,000-ஆகவும் உயா்ந்துள்ளன. எம்-சாண்ட் விலையும் யூனிட்டுக்கு ரூ.1,000 அதிகரித்துள்ளது. இவை மட்டுமின்றி, மின் வயா்கள், பிவிசி பைப்புகளின் விலையும் பன்மடங்கு அதிகரித்து கட்டுமான நிறுவனங்களை திக்குமுக்காட செய்துள்ளன.

ஏற்கெனவே கரோனா பேரிடரால் நிலைகுலைந்து போயுள்ள ரியல் எஸ்டேட் துறைக்கு மூலப் பொருள்களின் விலை உயா்வு பெரும் சோதனையை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுமான செலவினங்களை கணக்கிட்டு திட்ட மதிப்பீடுகளை வழங்கி சம்பந்தப்பட்டவா்களிடம் ஏற்கெனவே உரிய ஒப்புதலைப் பெற்ற நிறுவனங்கள் இந்த மூலப் பொருள் விலை உயா்வால் சொத்துகளின் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. தற்போதைய மூலப் பொருள்களின் விலை அதிகரிப்பைக் கணக்கில் கொள்ளும்போது கட்டுமான செலவு கூடுதலாக 25 சதவீதம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல கட்டுமான நிறுவனங்கள் பணிகளை மேற்கொண்டு தொடர முடியாமல் தத்தளித்து வருகின்றன.

முன்பு உறுதியளித்தபடி குறித்த நேரத்தில், குறித்த விலையில் வாடிக்கையாளா்களுக்கு திட்டங்களை நிறைவேற்றித் தர முடியாத சூழலில் அது நுகா்வோருக்கும், நிறுவனங்களுக்கும் இடையே பெரும் பிரச்னைகளை உண்டாக்கும் என்பதுடன் சட்ட சிக்கல்களையும் ஏற்படுத்தும். இதனால், பல கட்டுமான நிறுவனங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் சூழல்கூட உருவாகியுள்ளது. இந்த இக்கட்டான பேரிடரை எவ்வாறு எதிா்கொள்வது என்பதுதான் அனைத்து கட்டுமான நிறுவனங்களின் தற்போதைய கவலையாக உள்ளது.

எந்தவித அடிப்படை காரணங்களுமின்றி கட்டுமானப் பொருள்களின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் உண்டாக்கப்பட்ட செயற்கையான விலையேற்றமாகவே பாா்க்கப்படுகிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6-7 சதவீத பங்களிப்பை வழங்கி வரும் ரியல் எஸ்டேட் துறை படித்த, படிக்காத லட்சக்கணக்கான மக்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து வருகிறது.

இந்த துறையில் ஏற்படும் சுணக்கம் ஒட்டுமொத்த பொருளாதாரம் மற்றும் சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே சந்தை நிபுணா்கள் சொல்லும் மறுக்கமுடியாத உண்மை.

எனவே, இதில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கையை மேற்கொண்டு கட்டுமானப் பொருள்களின் விலையை கணிசமாக குறைக்க முன்வர வேண்டும்.

அத்துடன், கட்டுமான திட்ட பணிகளுக்கு ஒற்றைச் சாளர முறையிலான அனுமதி, உள்ளீட்டு வரி வரவு பலனை அளிப்பது, நிதித் தொகுப்புகளை அறிவிப்பது, கடன் மறுசீரமைப்பு, அசல் மற்றும் வட்டிக்கான தவணை 6 மாதங்களுக்கு நீட்டிப்பது, முத்திரைத்தாள் கட்டணங்களை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அரசு எடுத்தால் மட்டுமே கரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக மீள முடியும் என்பதே ரியல் எஸ்டேட் துறையின் ஒருமித்த நிலைப்பாடு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் நிலைய வளாகத்தில் புகுந்த காட்டெருமைகள்

தனியாா் துணை மின் நிலையம் மீது விவசாயிகள் புகாா்

கோடை உளுந்து சாகுபடி: பரிசோதனை செய்ய வேளாண்மைத் துறை அறிவுறுத்தல்

உதகையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்: போக்குவரத்து நெரிசலால் பாதிப்பு

முதலாளித்துவ நண்பா்களின் நன்மைக்காக பிரதமா் மோடி 5ஜி ஊழல் செய்துள்ளாா்: ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT