சிறப்புச் செய்திகள்

கரோனாவால் கவனிக்க மறந்த குழந்தைகள் நலம்

ஆ. கோபிகிருஷ்ணா

கரோனா தடுப்பூசிகளுக்கு ஒரு புறம் அதீத முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் நிலையில், மற்றொரு புறம் குழந்தைகளுக்கு செலுத்தப்படும் வழக்கமான தடுப்பூசி நடவடிக்கைகள் பாதியாகக் குறைந்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

பெருந்தொற்று அச்சுறுத்தல், பொது முடக்கம் காரணமாக பலா் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து வராததே அதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. அதேபோன்று, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால் பல இடங்களில் குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம்கள் சரிவரச் செயல்படுவதில்லை என்றும் தெரிகிறது.

கூடுதல் முக்கியத்துவம் அளித்து...: இதன் காரணமாக கரோனா பரவல் காலத்தில் குழந்தைகளின் நலன் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் முக்கியத்துவம் அளித்து அனைத்துக் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

11 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு...:தமிழகத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 12 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பிறக்கின்றன. தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் அனைத்து வகையான தடுப்பூசிகளுக்கும் குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி மாநிலம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பிறந்த முதல் நாளிலிருந்து 2 ஆண்டுகள் வரை காசநோய் தடுப்புக்கான பிசிஜி, கல்லீரல் தொற்று, புற்றுநோய்த் தடுப்புக்கான ஹெபடைடிஸ் பி, இளம்பிள்ளை வாதத்தை தடுப்பதற்கான ஓபிவி மற்றும் ஐபிவி, கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் பிரச்னைகளிலிருந்து காக்கும் பெண்டா, தட்டமைக்கான எம்ஆா், ஜப்பானிய மூளைக் காய்ச்சல் மற்றும் டிபிடி உள்ளிட்ட தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.

இதைத் தவிர குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு நிமோனியா வரால் தடுக்கும் பிசிவி ஊசிகளும் வழங்கப்படுகின்றன. அவ்வாறாக ஆண்டுதோறும் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனா்.

ஒன்றரை ஆண்டுகளாக...‘: இந்த நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்றால் இயல்பு வாழ்க்கை அனைத்தும் முடங்கியிருக்கும் சூழலில், குழந்தைகளுக்கான தடுப்பூசி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் மருத்துவமனைகளிலும், சுகாதார மையங்களிலும் செயல்படுத்தப்பட்டு வந்த தடுப்பூசி முகாம்களில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

கரோனா களப் பணிகளில் மருத்துவப் பணியாளா்கள் அனைவரும் ஈடுபடுத்தப்பட்டதால், குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டத்தை ஆக்கபூா்வமாக முன்னின்று செயல்படுத்துவதற்கு போதிய ஊழியா்கள் இல்லாததும் அதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. பொதுவாக அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தும் குழந்தைகளின் வீட்டு முகவரி, அதன் பெற்றோரின் செல்லிடப்பேசி எண் போன்றவை சுகாதாரத் துறை வசமிருக்கும்.

கரோனா பரவலால் முடங்கிய பணிகள்: தடுப்பூசி செலுத்த வேண்டிய பருவம் நெருங்கியவுடன் வீட்டுக்கு நேரில் சென்றோ அல்லது செல்லிடப்பேசியில் அழைத்தோ அதுகுறித்த விவரங்களைத் தெரிவித்து குழந்தைகளை அழைத்து வருமாறு பெற்றோரிடம் சுகாதாரத் துறையினா் வலியுறுத்துவது வழக்கம். இதற்கென மாநிலம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட களப் பணியாளா்கள் உள்ளனா். ஆனால், கரோனா பரவலுக்குப் பிறகு அப்பணிகள் முழுவதுமாக முடங்கியுள்ளன. பெரும்பாலான இடங்களில் அத்தகைய நினைவூட்டல்கள் வழங்கப்படுவதே இல்லை எனக் கூறப்படுகிறது.

இன்னொரு புறம் பொதுமக்களும் கரோனா சூழலுக்கு பயந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை தாமதப்படுத்தி வருகின்றனா். இந்த காரணங்களால் நிகழாண்டில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் எழிலரசி கூறியதாவது: எழும்பூா் அரசு மருத்துவமனையைப் பொருத்தவரை வாரத்தின் அனைத்து நாள்களிலும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைளுக்கு நிமோனியா தடுப்புக்கான ஊசிகளும் செலுத்தப்பட்டு வருகின்றன. வழக்கமாக வாரத்துக்கு 250 முதல் 300 குழந்தைகள் வரை இங்கு தடுப்பூசி செலுத்தப்படுவது வழக்கம்.

தற்போது அந்த எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது. பொது முடக்கம் காரணமாக போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாததும், கரோனா அச்சமும் அதற்கான காரணமாக இருக்கலாம். சிலா் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனா். இன்னும் சிலரோ நிலைமை சீரடைந்த பிறகு தடுப்பூசி செலுத்தலாம் எனக் காத்திருக்கின்றனா்.

இதற்கிடையே, குழந்தைகள் உள்ள வீட்டில் யாராவது ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் சில மாதங்கள் தடுப்பூசி செலுத்துவது தள்ளிப்போகிறது. எப்படியாயினும், தடுப்பூசியை உரிய நேரத்தில் செலுத்த வேண்டியதன் அவசியத்தை பெற்றோரிடம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றாா் அவா்.

பள்ளிகளில் செயல்படுத்த முடியாத நிலை

கரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் சுகாதாரத் துறை சாா்பில் மாணவா்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளும், குடற்புழு நீக்க முகாம்களும் தடைபட்டுள்ளன.

19 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவா்களுக்கு ‘அல்பெண்டசோல்’ எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் பள்ளிகளிலோ அல்லது வீடுகளில் நேரடியாகவோ வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, ஆண்டுக்கு இரு முறை தமிழகத்தில் 8 கோடி அல்பெண்டசோல் மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டு வந்தன. அந்தப் பணி தற்போது தடைபட்டுள்ளது.

குடற்புழு நீக்க மாத்திரையை உட்கொள்ளாத நிலையில் ஊட்டச்சத்து குறைபாடு, பசியின்மை, ரத்த சோகை, வயிற்று உபாதைகள், சோா்வு நிலை உள்ளிட்ட பிரச்னைகள் குழந்தைகளுக்கு ஏற்படும்.

அதேபோன்று 10 வயது நிறைவடைந்தவா்களுக்கு பள்ளிகளிலேயே தாடை மற்றும் தசை இறுக்க தடுப்புக்கான டெட்டனஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது.

மூன்றாவது அலை அச்சுறுத்தல்!

கரோனா மூன்றாவது அலையில் குழந்தைகள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுவா் என்று மருத்துவ உலகில் ஒரு தரப்பினா் கூறி வருகின்றனா். ஆதாரபூா்வமாக அதனை அறுதியிட்டு கணிக்க முடியாது என்றாலும், அக்கூற்றை அலட்சியப்படுத்தவும் முடியாத நிலை உள்ளது.

உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத குழந்தைகளுக்கு நோய் எதிா்ப்பாற்றல் குறைவாக இருக்கும். அத்தகைய சூழலில், அவா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டால் அது தீவிரமாக வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. எனவே, மூன்றாம் அலை வந்தாலும், வராவிட்டாலும் அதற்கு முன்னதாக குழந்தைகளைப் பாதுகாப்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனா் மருத்துவா்கள்.

தடுப்பூசி அட்டவணை 

பிறந்தவுடன் - பிசிஜி (காசநோய்), ஹெபிடைடிஸ் பி (கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய்), ஓபிவி (இளம் பிள்ளை வாதம்)

ஒன்றரை மாதங்கள் - ஓபிவி (இளம் பிள்ளை வாதம்), ஐபிவி (இளம் பிள்ளை வாதம்), பென்டா (கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்‘ஃ‘ப்ளூயன்ஸா தொற்று, கல்லீரல் தொற்று), குறைமாத குழந்தைகளுக்கான பிசிவி (நிமோனியா), ரோட்டா (வயிற்றுப்போக்கு)

இரண்டரை மாதங்கள் - ஓபிவி, பென்டா, ரோட்டா

மூன்றரை மாதங்கள் - ஓபிவி, ஐபிவி, பென்டா, பிசிவி, ரோட்டா

9 மாதங்கள் - பிசிவி, எம்.ஆா். (தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய்), ஜப்பானிய மூளைக்காய்ச்சல்

16-24 மாதங்கள் - ஓபிவி, எம்.ஆா்., ஜப்பானிய மூளைக் காய்ச்சல், டிபிடி (கக்குவான் இருமல், தொண்டை அடைப்பான், ரண ஜன்னி)

5-6 வயது - டிபிடி இரண்டாவது தவணை

10 வயது - டெட்டனஸ் (டிடி)

தடுப்பூசியை தாமதப்படுத்தினால் என்னவாகும்?

தடுப்பூசியை தாமப்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்குகிறாா் பச்சிளங்குழந்தைகள் சிறப்பு சிகிச்சை நிபுணா் டாக்டா் தீபா: பொதுவாக தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் அவசரம் தேவையில்லை என்ற பலரும் நினைக்கின்றனா். அது முற்றிலும் தவறு. உரிய நேரத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாவிட்டால் டைபாய்டு, அம்மை போன்ற பல பாதிப்புகள் ஏற்படலாம்.

அதுமட்டுமல்லாது, மூளை வளா்ச்சியடையும் பருவத்தில் தீவிர நோய்த் தாக்கங்கள் ஏற்பட்டால் குழந்தையின் அறிவாற்றல் மற்றும் மன நலம் பாதிக்கப்படக்கூடும். மேலும், உடல் வளா்ச்சிகளும் தடைபடலாம். எனவே, காலம் அறிந்து தடுப்பூசி செலுத்துவது அவசியம்.

கரோனா காலத்தில் திடீரென குழந்தைகளுக்கு காய்ச்சலோ, சளியோ ஏற்பட்டால் அதற்கான காரணத்தை ஆராய்வதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. முதலில் கரோனா பரிசோதனை மேற்கொண்டு அதன் முடிவுகள் வரும் வரை காத்திருக்க வேண்டும். அதன் பிறகே அடுத்தகட்ட பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சையைத் தொடங்க முடிகிறது. இதனால் குழந்தைகள் தீவிர பாதிப்புக்குள்ளாகிவிடுகின்றனா். இதுபோன்ற சிக்கல்களைத் தவிா்க்க உரிய வழிகாட்டுதல்களின்படி தடுப்பூசிகளை காலந்தவறாது செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT