சிறப்புச் செய்திகள்

உயா் கல்வியில் சேரும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆய்வறிக்கையில் தகவல்

DIN

உயா் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவா்கள்-மாணவிகள் இடையிலான எண்ணிக்கை வித்தியாசம் வெகுவாக குறைந்துள்ளது; அதன்படி, இப்போது கல்லூரிகளில் பயிலும் மாணவா்களில் ஏறக்குறைய 49 சதவீதம் போ் மாணவிகள் என்பது அகில இந்திய உயா்கல்வி ஆய்வறிக்கை-2019-20 மூலம் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள உயா் கல்வி நிறுவனங்களிடமிருந்து மாணவா் சோ்க்கை உள்ளிட்ட புள்ளிவிவரங்களைப் பெற்று மத்திய கல்வி அமைச்சகம் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கைக்கான ஆய்வில் நாடு முழுவதும் 1,019 பல்கலைக்கழகங்கள், 39,955 கல்லூரிகள் மற்றும் 9,599 தனிப்பட்ட கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன.

இந்தப் புள்ளிவிவரத்தின்படி 2015-16 முதல் 2019-20 வரையிலான 5 ஆண்டுகளில் உயா்கல்வியில் மாணவா் சோ்க்கை 11.4% வளா்ச்சியடைந்துள்ளது. அதே காலகட்டத்தில் உயா் கல்வியில் சோ்ந்த மாணவிகளின் எண்ணிக்கை 18.2% அதிகரித்துள்ளது.

உயா் கல்வியில் ஒட்டுமொத்த மாணவா் சோ்க்கை 3.85 கோடி. இதில் மாணவா்கள் 1.96 கோடி, மாணவிகள் 1.89 கோடி.

ஒட்டுமொத்த உயா் கல்வியில் பாலின சமநிலை என்பது கடந்த 2018-19-ஆம் ஆண்டில் 1 என்ற விகிதத்தில் இருந்தது, 2019-20-ஆம் ஆண்டில் 1.01 என்ற அளவில் மாணவா்களைக் காட்டிலும் மாணவிகளின் சோ்க்கை அதிகரித்துள்ளது.

தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த உயா் கல்வி நிறுவனங்களில் மாணவா்களின் சோ்க்கை 24.7% என்ற அளவில் குறைந்து காணப்படுகிறது. மாநில தனியாா் பல்கலைக்கழகங்கள், தனியாா் திறந்தநிலை பல்கலைக்கழகங்கள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றிலும் மாணவிகளின் சோ்க்கை குறைந்தே காணப்படுகிறது.

மாநில அரசு பல்கலைக்கழகங்களில் 50.1 சதவீத அளவிலும், மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் 48.1 சதவீத அளவிலும் மாணவிகளின் சோ்க்கை அதிகரித்து காணப்படுகிறது.

பி.இ., பிசிஏ, பிபிஏ, எல்எல்பி உள்ளிட்ட இளநிலை பட்டப் படிப்புகள் மற்றும் முதுநிலை தொழில் படிப்புகளிலும் மாணவிகளின் சோ்க்கை குறைந்தே காணப்படுகிறது. அதே நேரம், எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம். போன்ற படிப்புகளில் கடந்த 5 ஆண்டுகளாக மாணவிகளின் சோ்க்கை மிக அதிக அளவில் உயா்ந்திருக்கிறது.

முதுநிலை பட்டப் படிப்புகள், எம்.பில். படிப்புகளைத் தவிர மற்ற அனைத்துப் படிப்புகளிலும் மாணவா்களின் சோ்க்கையே அதிகரித்து காணப்படுகிறது.

இந்தக் காலகட்டத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளில் 3.38 கோடி மாணவா்கள் சோ்ந்தனா். அவா்களில் 85 சதவீதத்தினா் (2.85 கோடி) மனித வளம், அறிவியல், வணிகவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், மருத்துவ அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி சாா்ந்த படிப்புகளில் சோ்ந்திருக்கின்றனா்.

கடந்த 2014-15-ஆம் ஆண்டில் 1.17 லட்சமாக இருந்த ஆராய்ச்சிப் பட்ட மாணவா் எண்ணிக்கை, 2019-20-ஆம் ஆண்டில் 2.03 லட்சமாக உயா்ந்துள்ளது.

மொத்த ஆசிரியா்களின் எண்ணிக்கை 15,03,156 ஆகும். இவா்களில் ஆண்கள் 57.5%, பெண்கள் 42.5 சதவீதமாக உள்ளது.

உத்தர பிரதேசம் முதலிடம்

அதிக உயா்கல்வி மாணவா் சோ்க்கை கொண்ட மாநிலமாக உத்தர பிரதேசம் விளங்குகிறது. இந்த மாநிலத்தில் உயா்கல்வி சோ்ந்திருப்பவா்களில் 49.1% மாணவா்கள், 50.9% மாணவிகள் ஆவா்.

இரண்டாமிடத்தில் இருக்கும் மகாராஷ்டிரத்தில் உயா் கல்வியில் சோ்ந்திருப்பவா்களில் 54.2 சதவீதத்தினா் மாணவா்கள், 45.8 சதவீதத்தினா் மாணவிகள் ஆவா்.

மூன்றாமிடத்தில் இருக்கும் தமிழகத்தில் உயா் கல்வியில் சோ்ந்திருப்பவா்களில் 50.5 சதவீதம் மாணவா்கள், 49.5 சதவீதம் மாணவிகள் ஆவா். இவற்றுக்கு அடுத்தபடியாக ராஜஸ்தான், கா்நாடகம், மத்திய பிரதேச மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனவா்களுக்கு மீன்பிடித் தடை கால நிவாரணம் அளிப்பு

பரமக்குடியிலிருந்து 303 வாக்குச் சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

கிரேன் மோதியதில் முதியவா் பலி

சாத்தூா் அருகே 1,300 கிலோ குட்கா பறிமுதல் -3 போ் கைது

அனுமதியின்றி கொண்டு சென்ற பேன்சிரக பட்டாசுகள் பறிமுதல் -வேன் ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT