சிறப்புச் செய்திகள்

கேரளத்திற்கு ஏற்றுமதியாகும் நெல்லை ஏத்தன் வாழைக்கன்றுகள்!

8th Jun 2021 10:18 AM | கோ.முத்துக்குமார்

ADVERTISEMENT

திருநெல்வேலி: கரோனா பொதுமுடக்கத்தில் வேளாண் பணிகள் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து ஏத்தன் வாழைக்கன்றுகள் கேரளத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுவது அதிகரித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக பணப்பயிர்களில் ஒன்றான வாழை பயிரிடப்படுகிறது. நாட்டு வாழை,  ரோபஸ்டா, ரதகதளி, கதளி, கோழிக்கூடு, ஏத்தன் உள்ளிட்ட ரகங்கள் பயிரிடப்படுகின்றன.

ஏத்தன் ரகம் முன்னணியில் உள்ளது.  ஏத்தன் வாழைகளைப் பொருத்தமட்டில் அதில் இருந்து இலையை அறுவடை செய்து விற்பனை செய்ய இயலாது. காய்களை மட்டுமே விற்பனை செய்யமுடியும். 

உயர்ந்து வீழ்ந்த விலை:  இம்மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி வட்டாரத்திலும், திருநெல்வேலியில் சுத்தமல்லி, பழவூர், கொண்டாநகரம், கல்லூர், மானூர், ரஸ்தா சுற்றுவட்டார பகுதிகளிலும் தை, மாசிப்பட்டத்தில் அறுவடை செய்யும் வகையில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

காற்றுக் காலத்திற்கு பின்பு குலைதள்ளுவதால் இந்த வாழைகளுக்கு கம்பு கொடுக்கப்படுவதில்லை. களக்காடு, திருக்குறுங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பங்குனி, சித்திரை பட்டத்தில் அறுவடை செய்யும் வகையில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது.

அப் பகுதி மண் வளம் காரணமாக அங்கு விளையும் ஏத்தன் காய்கள் மிகவும் திரட்சியாகவும், குலைகள் எடை அதிகமாகவும் இருக்கும்.
நிகழாண்டில் தை-மாசி பட்டத்திற்கான அறுவடையில் போதிய விலை கிடைக்கவில்லை.

ஆனால், சித்திரை பட்டத்தில் அறுவடை தொடங்கிய முதல் இரு வாரத்தில் விலை அதிகரித்தது. ஏத்தன் ரகம் அதிகபட்சமாக கிலோ ரூ.45 வரை உயர்ந்தது. அதன்பின்பு பொதுமுடக்கம், பலத்த காற்று, மழை உள்ளிட்ட சில காரணங்களினால் விலை படிப்படியாக சரிந்து கிலோ ரூ.22 வரை குறைந்துவிட்டது.

இம்மாவட்ட  வாழைகள் அனைத்தும் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம், கொல்லம், திருச்சூர் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. முதல் தர வாழைக்காய்கள் அனைத்தும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மற்றவை சிப்ஸ்களாக தயாரித்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மீண்டும் தமிழகத்திற்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.


வாழைக்கன்றுகள் ஏற்றுமதி: இதுகுறித்து வாழை விவசாயியான ஆனந்த் சேதுராமலிங்கம் கூறியது:

கடந்த 20 ஆண்டுகளாக வாழை விவசாயம் செய்து வருகிறோம்.  வயலில் கன்று போடுவதில் இருந்து உரம், வறட்சிகாலத்தில் விலை கொடுத்து கிணற்று நீர் பாய்ச்சுவது உள்பட ஒரு வாழைக்கு குறைந்தபட்சம் ரூ.100 வரை ஆகிறது.

விலை வீழ்ச்சியால் சில நேரங்களில் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. களக்காடு - திருக்குறுங்குடி வட்டாரத்தில் இருந்து வாழைக்கன்றுகள் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது.

வாழை வயலில் இருக்கும் பக்கு கன்றுகளை நடுவதற்கு ஏற்றார் போல சீவி பதப்படுத்தி அதனை லாரிகளில் ஏற்றி செல்வார்கள். வழக்கமாக உள்ளூர் விவசாயிகளுக்கு கன்றுகள் இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

கேரளத்திற்கு ஒரு கன்று ரூ.2 முதல் ரூ.8 வரை விற்பனையாகிறது.  இதற்காக மொத்த குத்தகைதாரர்களும் உள்ளனர். வயலில் மண் பரிசோதனை செய்து வாழைக்கன்று வாங்கும் கேரள விவசாயிகளும் உள்ளனர்.

இங்கிருந்து கன்று எடுத்துச் செல்லப்படும் 4 நாள்களுக்குள் வயில்களில் நடவு பணி செய்து விடுகிறார்கள். ஆண்டு ஒன்றுக்கு சுமார் 5 லட்சம் வாழைக்கன்றுகள் கேரளத்திற்கு ஏற்றுமதியாகின்றன.

தோட்டக்கலைத்துறையினர் இதனை ஊக்கப்படுத்தினால் பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

கிட்டங்கி அவசியம்: விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறுகையில்,  

திருநெல்வேலி மாவட்டத்தில் மேம்படுத்தப்பட்ட வாழைக்காய் சந்தை, குளிர்பதன கிட்டங்கி வசதிகள் போதிய அளவில் இல்லை. கேரள மொத்த வியாபாரிகளை மட்டுமே நம்பி வாழை சாகுபடி உள்ளதால் அடிக்கடி நஷ்டத்தைச் சந்திக்கும் நிலை உள்ளது.

இப்போது கரோனாவுக்காக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் கோயில் விழாக்கள், சுபமுகூர்த்த நிகழ்வுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனை நம்பி பயிரிடப்பட்டிருந்த ரதகதளி வாழை ரகங்கள் போதிய விலையின்றி வயல்களிலேயே பழுத்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

வாழைக்காய் ஏற்றுமதி குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தவும், அரசு கொள்முதல் நிலையங்களை அமைத்து நஷ்டத்தைத் தடுக்க வேண்டும். அதேபோல ஏத்தன் வகை வாழைப்பழங்கள்  அழுகாமல் கூடுதல் நாள்கள் தாக்குப்பிடிக்கும்.

ஆகவே, அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சிறப்பு மையங்களை மத்திய அரசு துணையோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : திருநெல்வேலி வாழை அறுவடை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT