சிறப்புச் செய்திகள்

ஆசிரியர் அடித்ததால் பார்வையிழந்த மேட்டூர் மாணவி தனம் என்ன செய்கிறார்? - கால் நூற்றாண்டுக் கதை

கு. இராசசேகரன்

மேட்டூர்: கால் நூற்றாண்டைக் கடந்தும் கண்ணில் பட்டாம்பூச்சி பறக்குது... மகிழ்ச்சியில் அல்ல, முதல் வகுப்பு மாணவியாக இருந்தபோது நேரிட்ட ஆறாத வடுவால்...

மேட்டூர் அருகே 25 ஆண்டுகளுக்கு முன் பள்ளியிலிருந்த பானையில் தண்ணீர் எடுத்துக் குடித்ததற்காக ஆசிரியர் அடித்ததில் கண் பார்வையைப் பறிகொடுத்த முதல் வகுப்பு மாணவி, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரான தனம். அன்று இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த தனத்தின் இன்றைய வேதனைதான் இது... தனம், இப்போது எப்படி இருக்கிறார்?

சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் அருகே உள்ளது கட்டிநாய்கன்பட்டி. அப்போது குக்கிராமமாக இருந்தது. அங்குள்ள அரசு துவக்கப் பள்ளியில் முதல் வகுப்பில் படித்தவர் செங்கல் சூளைத் தொழிலாளிகள் மாரி - காவேரி தம்பதியின் மகள் தனம். 

1995 ஜூலை 31, தினமணி நாளிதழில் வெளியான செய்தி

பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தனத்திற்குத் தாகம் எடுக்க பள்ளியில் வைத்திருந்த பானையிலிருந்த தண்ணீரைக் குவளையில் எடுத்து குடித்துவிட்டார். தண்ணீர் குடித்ததுதான் குற்றம்... ஆசிரியர் சுப்ரமணியம் பிரம்பால் அடித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கண்ணில் பிரம்பு படவும் தனத்தின் வலது கண் பார்வை பறிபோனது. 

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவி தனம் என்பதால், அவர் சக மாணவ மாணவியர் பயன்படுத்தும் பானையில் தண்ணீர் எடுத்துக் குடித்ததால் ஆசிரியர் அடித்ததாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி 1995 ஆம் ஆண்டு ஜூலை மாத இறுதியில் அப்போதைய சேலம் மாவட்ட ஆட்சியர் ஹன்ஸ்ராஜ் வர்மாவிடம் தனத்திற்காக மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இதுபற்றிய செய்தி 1995 ஜூலை 31, தினமணி நாளிதழில் விரிவாகவும் முதன்முதலாகவும் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டது.

ஓமலூரில் முதல் நாள் மனு வாங்குவதற்காக மணிக்கணக்கில் காத்திருக்க வைத்த மாவட்ட ஆட்சியர், செய்தி வெளியான நாள் காலையே அனைத்து அதிகாரிகளுடன் கட்டிநாய்கன்பட்டியில் ஆஜரானார்.

தொடர்ந்து, தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியானார் தனம். உதவிகள் குவிந்தன, கண் பார்வை மீண்டும் ஓரளவு கிடைத்தது. யாருக்கும் தெரியாமல் கிடந்த கட்டிநாய்கன்பட்டி குக்கிராமம் உலகளவில் பேசுபொருளானது.

தனத்தை அடித்த ஆசிரியரை ஜலகண்டபுரம் காவல்துறையினர் கைது செய்தனர். வழக்கு விசாரணை, மன உளைச்சல் போன்ற காரணங்களால் அடுத்த ஓரிரு ஆண்டுகளிலேயே அவரும் இறந்துவிட்டார். 

அந்தச் சிறுமி  தனம்?

கால் நூற்றாண்டுக்குப் பிறகு, தனத்தை விசாரித்துத் தேடி, சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள பூமிநாயக்கன்பட்டியில் சந்தித்தோம்.

... சார், இன்னும் நினைவிருக்கிறதா... என்றவரிடம் தற்போதைய வாழ்க்கை பற்றிக் கேட்டறிந்தோம்.

பாதிக்கப்பட்ட சூட்டோடு சூடாக சென்னையில் ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்தாலும் கிராமத்திலிருந்த அவருக்கு சென்னைவாசமும் ஆங்கிலப் படிப்பும் ஒத்துவராத காரணத்தினால் மீண்டும் கட்டிநாய்கன்பட்டி பள்ளிக்கே திரும்பி எட்டாம் வகுப்பு வரையிலும் படித்திருக்கிறார். 

பின்னர் ஜலகண்டபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்  2 வரையிலும் படித்தார். முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் உதவியால் பல முறை கண்ணுக்குச் சிகிச்சை செய்துகொண்டார்.

பிளஸ் 2 முடித்ததும் ஜெயலலிதாவைச் சந்தித்துத் தனக்கு  பார்வை பாதித்த பள்ளியிலேயே ஆசிரியராகப் பணியாற்ற ஆசை எனக் கூற, அவருடைய  உதவியாலேயே ஆசிரியர் பயிற்சியும் முடித்தார். தொடர்ந்து பி.ஏ. ஆங்கிலம் முடித்தார். ஏழு ஆண்டுகளுக்கு முன், தன்னுடைய மாமா வெங்கடேஷை திருமணம் செய்துகொண்டு பட்ட மேற்படிப்பு படிக்க ஆயத்தமாகி வருகிறார்.

இவருடைய கணவர் வெங்கடேஷ் (30) ஐடிஐ டர்னர், இவரும் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். பலரிடமும் தனது மனைவிக்கு ஆசிரியர் வேலை வாங்க வேண்டும் என்று பணத்தைக் கொடுத்து ஏமாந்ததுதான் மிச்சம்.  வேலை கிடைக்கவில்லை. இருப்பினும், தன் தனத்தின் படிப்புக்குப் பச்சைக் கொடி காட்டி சொற்ப வருமானத்தில் படிக்க வைத்து வருகிறார். 

கணவர் வெங்கடேஷுடன் தனம்

கணவருடன் தனம் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தினாலும் வேலை கிடைக்காத வேதனை இருக்கிறது.

முதல் வகுப்பில் நேர்ந்த கொடுமையால் தனது வலது கண்ணில் தற்போதும் பட்டாம் பூச்சி பறப்பது போல இருக்கிறது என்றும் இன்னமும் கண் அடிக்கடி வலிக்கிறது என்றும் யாரேனும் சிகிச்சைக்கு உதவினால் வலி போகும், துயரம் நீங்கும் என்றும் குறிப்பிடுகிறார் தனம்.

தீண்டாமைக் கொடுமையால் பாதிக்கப்பட்ட தனம் அன்று தொடங்கி இன்று வரை தனது வாழ்வில் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருப்பது என்னவோ பாராட்டக் கூடியதுதான் என்றாலும் இன்னமும் நல்லவிதமாக வாழ்க்கையில் விடியல் கிடைக்காதது பெரும் வேதனையே என்கிறார்கள் தனத்தைப் பற்றி அறிந்தவர்கள்.

தீ(ண்டா)மையால் பாதிக்கப்பட்ட கண்ணுக்கு மீண்டும் தெளிவான பார்வை கிடைக்குமா? காலவெள்ளத்தில் மறக்கப்பட்டுவிட்ட நிலையில் இனியேனும் நிம்மதியான வாழ்வு கிடைக்குமா? கால் நூற்றாண்டாகக் காத்திருக்கும் தனத்தின் எதிர்பார்ப்பு இதுதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT