சிறப்புச் செய்திகள்

பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறந்தும் சாகுபடி செய்ய முடியாத நிலை: விவசாயிகள் கவலை

DIN

அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டம் மன்னார்கோவில் பகுதியில் தாமிரவருணி பாசனம் வடக்குக் கோடை மேலழகியான் கால்வாய் பாசனத்திற்குள்பட்ட கடைமடை குளங்களுக்குத் தண்ணீர் வராததால் கார் சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் தாமிரவருணி பாசனத்தில் கார் சாகுபடிக்கு ஜூன் 1- இல் தண்ணீர் திறப்பது வழக்கம். கடந்த பத்து ஆண்டுகளாக ஜூன் 1-இல் தண்ணீர் திறக்காததால் கார் சாகுபடி பொய்த்துப் போனது. இந்நிலையில் நிகழாண்டு ஜூன் 1-இல் கார் சாகுபடிக்கு பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தாமிரவருணி ஆற்றின் முதல் கால்வாய் வடக்குக் கோடை மேலழகியான் கால்வாயாகும். பாபநாசம் தலையணையிலிருந்து பிரியும் இந்தக் கால்வாய் மூலம் விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், கோடாரங்குளம், வாகைக்குளம், மன்னார்கோவில் கிராமங்களிலுள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 

ஜூன் 1-இல் கார் சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில் இந்தக் கால்வாயின் கடைமடைப் பகுதியான மன்னார்கோவில், பிரம்மதேசம் பகுதியில் உள்ள குளங்களான சீர்பாதம்குளம், சுமைதாங்கிக் குளம், ஞானப்பட்டர் குளம், புதுக்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை. இந்தக் குளங்களின் மூலம் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில் குளங்களுக்குத் தண்ணீர் வராததால் பல விவசாயிகள் கார் சாகுபடி பணிகளைத் தொடங்கவில்லை. சில விவசாயிகள் நாற்று நட்ட நிலையில் மேலும் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் காய்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

கணபதி | சுரேஷ்

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலர் கணபதி கூறியது; தாமிரவருணி பாசனத்தில் முதல் கால்வாய் பாசனம் வடக்குக் கோடை மேலழகியான் கால்வாய் பாசனமாகும். இந்தக் கால்வாயில் உரிய வகையில் மராமத்துப் பணிகள் நடைபெறாததால் கடை மடை குளங்களான சீர்பாதம் குளம், சுமைதாங்கிக் குளம், ஞானப்பட்டர் குளம், புதுக்குளம் ஆகிய குளங்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. கடந்த பல ஆண்டுகளாக உரிய காலத்தில் கார் சாகுபடிக்குத் தண்ணீர் திறந்துவிடப்படாததால் கார் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. நிகழாண்டு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்தும் கார் சாகுபடிப் பணிகளைத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிலர் தண்ணீர் வரும் நம்பிக்கையில் நட்டுள்ள நாற்றுகள் தண்ணீர் இன்றி வாடும் நிலையில் உள்ளன. தொடர்ந்தும் இதே நிலை நீடித்தால் இந்தப் பகுதியில் உள்ள சுமார் 200 விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்றார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலர் சுரேஷ் கூறியது: நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் உள்ள நிலையில் விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கான சூழலை அரசும், அதிகாரிகளும் ஏற்படுத்திக் கொடுப்பதில்லை. இதனால் விவசாய குடும்பங்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளன. கால்வாய்களை உரிய முறையில் தூர்வாராததாலும் மராமத்துப் பணிகளை மேற்கொள்ளாததாலும் கடை மடை பகுதிக்குத் தண்ணீர் வருவதில்லை. எனவே, கால்வாயில் சிமெண்ட் தளங்கள் அமைத்து கடை மடை வரை தண்ணீர் செல்வதை உறுதிப்படுத்தும் வகையில் மராமத்துப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். கால்வாயில் நகர்ப்புறங்களில் கழிவுகளைக் கொட்டாமல் தடுப்பதோடு ஆங்காங்கே அமலைச் செடிகளால் நீரோட்டத்தில் ஏற்படும் தடைகளை சரி செய்ய வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT