சிறப்புச் செய்திகள்

இரு பெண்கள், இரு நம்பிக்கை துரோகங்கள்: எங்கே செல்கிறது சமுதாயம்?

தத்து

இரு பெண்கள், இரு நம்பிக்கை துரோகங்கள் - இது ஏதோவொரு அந்தக் கால மலையாளத் திரைப்படத்தின் டைட்டில் அல்ல. அடுத்தது, ஒரு கொலை, ஒரு கைது!

தமிழ்நாட்டில் திருவள்ளூர் அருகே அடுத்தடுத்த நாள்களில் நடந்த இரு சம்பவங்கள்தான் இவை. இரண்டிலுமே அதிர்ச்சியளிக்கிற விஷயம் சம்பந்தப்பட்டவர்கள் நீதிக்காக வாதாட வேண்டியவர்களான வழக்குரைஞர்கள் என்பதுதான்.

இரண்டு சம்பவங்களிலுமே பாதிக்கப்பட்ட பெண்கள், தங்கள் வழக்குகளுக்காக வழக்குரைஞர்களை நாடிச் செல்கின்றனர். ஆனால், அவர்களுடைய நடத்தைதான் விளைவுகளை விபரீதமாக மாற்றிவிட்டிருக்கிறது.

சென்னையில் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த பெண் சத்யா (30).  இவருக்குத் திருமணமாகி 3 மகள்கள் இருக்கின்றனர். கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த இரு ஆண்டுகளாகப் பிரிந்து தனியே வாழ்ந்துவந்தார்.

கணவரிடமிருந்து விவாகரத்து பெறுவதற்காக திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்குச் சென்றிருக்கிறார். புகார், வழக்கு தொடர்பாகச் சென்றுவரும்போது உதவுவதாக வந்த, திருவள்ளூர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகச் செயல்பட்ட வெள்ளேரித்தாங்கலைச் சேர்ந்த வெங்கடேசன் (37) என்பவருடன்  பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

வழக்கு தொடர்பாக இவர்கள் அடிக்கடி சந்திக்க நேரிட்டது தவறான உறவுக்கு வழிவகுத்திருக்கிறது. இவர்களுடைய முறையற்ற தொடர்பு பற்றி அறிந்த சத்யாவின் குடும்பத்தினர் ஆத்திரப்பட்டதுடன் இந்த உறவைக் கைவிடும்படியும் அவரை வற்புறுத்தினர்.

ஆனால், நடந்ததோ நேர்மாறாக. நெருக்கமான பழக்கத்தில் இருந்த இருவரும் திருவள்ளூா் அருகேயுள்ள காக்களூா் ஆஞ்சனேயபுரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தனிக்குடித்தனம் நடத்தத் தொடங்கிவிட்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த வீட்டிலிருந்து ஜூலை 19 அதிகாலை 3 மணிக்கு அலறல் சப்தம் கேட்பதாக, காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் அங்கே சென்றுபாா்த்தபோது, வெங்கடேசன் பலத்த வெட்டுக் காயங்களுடன் இறந்துகிடந்திருக்கிறார். வெட்டுக்காயங்களுடன் சத்யா, மயக்கமுற்றுக் கிடந்திருக்கிறார்.

காவல்துறையின் விசாரணையின்போதுதான் நடந்தவை அனைத்தும் தெரிய வந்திருக்கிறது.

தவறான உறவு வைத்திருந்த தங்கள் மகள் சத்யாவும் வழக்குரைஞர் வெங்கடேசனும் தனியாக வீடு எடுத்து இருப்பது பற்றித் தகவலறிந்த சத்யாவின் உறவினர்கள், அன்றிரவு அங்கே தேடி வந்திருக்கின்றனர்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து நடந்த சண்டையில் சத்யாவையும் வெங்கடேசனையும் அவர்கள் வெட்டியதாகக்  கூறப்படுகிறது. இருவருமே இறந்துவிட்டதாகக் கருதி வீட்டை வெளியே பூட்டிவிட்டு அவர்கள் சென்றுவிட்டிருக்கின்றனர்.

ஆனால் உயிர் தப்பிய சத்யா, மயக்கம் தெளிந்த நிலையில் கூச்சலிட்டதில் இந்தத் தாக்குதல் சம்பவம் வெளியே தெரியவந்திருக்கிறது.

திருவள்ளூர் கிராமிய காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து, சத்யாவின் பெற்றோா் சங்கா் (59), செல்லம்மாள் (52), சகோதரா் வினோத் (25), சகோதரி சங்கீதா (23), அவரது கணவா் வெங்கடேசன் (32), சித்தி தேவி (46) ஆகிய 6 பேரைக் கைது செய்துள்ளனர்.

சில நாள்களிலேயே இதே திருவள்ளூரில்தான் இன்னொரு சம்பவமும்.

விவகாரத்து வழக்கிற்காக வந்த பெண்ணுக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக, வழக்குரைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் அருகே மணவாள நகர் பகுதியைச் சேர்ந்த 43 வயதுப் பெண் ஒருவர், கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் கணவரிடமிருந்து விவாகரத்து பெறுவதற்காக இதே பகுதியைச் சேர்ந்த வழக்குரைஞர் டார்ஜன் என்பவரை அணுகியுள்ளார்.  வழக்கைத் தாம் நடத்துவதாக உறுதியளித்த டார்ஜன், அப்போது, விவாகரத்து வழக்கு தொடர்பான ஆவணங்களை வீட்டுக்குக் கொண்டு வருமாறு கூறினாராம்.

வீட்டிற்கு வந்த பெண்ணுக்கு ஏதோ மயக்கப் பொருள் கலந்த  குளிர்பானத்தைக் கொடுத்ததாகவும் அதை அருந்திய சிறிது நேரத்தில் அந்தப் பெண் மயங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணை ஆபாசமாகப் புகைப்படங்கள் எடுத்ததாகக் கூறப்படும் டார்ஜன், பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

பிரச்னை இத்துடன் முடிவுக்கு வரவில்லை. இதன் பிறகுதான் மேலும் சிக்கலாகியிருக்கிறது. இந்தப் படங்களை வைத்துக்கொண்டு அடிக்கடி மிரட்டியதாகக் கூறப்படும் டார்ஜன்,  ரூ.3 லட்சம் கேட்டதாகவும்  இல்லை என்றால் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு வழக்குரைஞர் டார்ஜனின் மனைவியும் உடந்தையாக இருந்ததாகவும், வழக்குரைஞர் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், அந்தப் பெண் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

காவல் ஆய்வாளர் ராஜாமணி வழக்குப் பதிந்து, விசாரணை செய்ததில் அந்தப் பெண்ணை ஆபாச படம் எடுத்ததோடு, அதை வைத்து மிரட்டி ரூ. 3 லட்சம் வரையில் பணம் பெற்றுள்ளதும், மேலும் ரொக்கம் கேட்டும் அடிக்கடி தகாத உறவுக்கு அழைத்து மிரட்டியதாகவும் வழக்குரைஞர் டார்ஜனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இவ்விரு சம்பவங்களிலுமே, அவர்களுடைய தனிப்பட்ட  வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருந்தபோதிலும், பாதிக்கப்பட்ட பெண்கள் இருவருமே உதவிக்காக - தங்களுக்காக நீதிமன்றத்தில் வழக்காடி  தீர்வைத் தேடித் தருவார்கள் என்ற நம்பிக்கையில்தான் வழக்குரைஞர்களை அணுகியிருக்க வேண்டும்.

இரண்டு சம்பவங்களிலும் இந்தப் பெண்களின் நம்பிக்கை பொய்த்துப் போனது மட்டுமல்ல, புதிதாக வேறு பிரச்னைகளும் முளைத்துவிட்டன.

ஒரு வழக்குரைஞர் கொல்லப்பட்டுவிட்டார். அவருடைய குடும்பம் - மனைவி, மகன், மகள் - ஆதரவற்றதாகிவிட்டது. சத்யாவின் பிறந்த வீட்டில் பெரும்பாலோர் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருக்கின்றனர். இனி வழக்கு போகிறபோக்கில்தான் வாழ்க்கை. எவ்வளவை இழக்க வேண்டியிருக்குமோ? மற்றொரு வழக்குரைஞர் சிறையில், ஏற்கெனவே இருக்கும் பிரச்னைகளுடன் புதிய சிக்கலில் கணவரைப் பிரிந்த பெண்.

எங்கே செல்கிறார்கள் மனிதர்கள்? எங்கே செல்கிறது சமுதாயம்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT