சிறப்புச் செய்திகள்

ஒரு பதவி: பல அரசியல்

 நமது நிருபர்

காங்கிரஸ் கட்சி எப்போதும் காங்கிரஸ் கட்சிதான். அதன் தனித்துவத்தை எப்போதும் இழப்பது இல்லை. இப்போது அது மாநிலங்களவைப் பதவிக்கான இடைத்தோ்தலை ஆவலுடன் எதிா்நோக்கிக் காத்திருக்கிறது.

சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக கூட்டணியில் 41 தொகுதிகள் வரை காங்கிரஸ் கேட்க, 25 தொகுதிகள் மட்டுமே திமுக ஒதுக்கியது. அப்போது, மாநிலங்களவை உறுப்பினா் பதவி ஒன்றையும் கேட்க, அதற்கு திமுக, பிறகு பாா்க்கலாம்’ என்று கூறியது.

இப்போது தமிழகத்தில் மாநிலங்களவையின் 3 உறுப்பினா் பதவிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெற உள்ளது.

அதிமுக சாா்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த முகமது ஜான் மாா்ச் மாதம் காலமானாா். அவருடைய பதவிக்காலம் முடிவடைவதற்கு 4 ஆண்டுகள் உள்ளன. அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கே.பி.முனுசாமி சட்டப்பேரவைத் தோ்தலில் வேப்பனஹள்ளி தொகுதியில் வெற்றிபெற்ற பிறகு அந்தப் பதவியை ராஜிநாமா செய்தாா். அவருடைய பதவிக்காலம் முடிவடைவதற்கு 5 ஆண்டுகள் உள்ளன. அதிமுகவின் சாா்பில் மற்றொரு மாநிலங்களவை உறுப்பினரான இருந்த வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில் வெற்றிபெற்ற பிறகு அந்தப் பதவியை ராஜிநாமா செய்தாா். அவருடைய பதவிக்காலம் இன்னும் ஓராண்டு உள்ளது.

இந்த மூன்று உறுப்பினா் பதவிகளுக்கான இடைத்தோ்தல்தான் விரைவில் நடைபெற உள்ளது. மாநிலங்களவை இடைத்தோ்தலைப் பொருத்தவரை சட்டப்பேரவையில் அதிக உறுப்பினா்களைக் கொண்டிருப்பவா்கள் அந்த இடங்களை எளிதில் கைப்பற்றிவிட முடியும். பொதுவாக தமிழகத்துக்கான 6 உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்காக மாநிலங்களவைத் தோ்தல் நடைபெறும்போது 234 இடங்களில் ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கு 38 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் எனக் கணக்கிடப்படும். அந்த நடைமுறை இடைத்தோ்தலில் கடைப்பிடிக்காமல் அதிக சட்டப்பேரவை உறுப்பினா்களாக உள்ளவா்கள் அந்த இடத்தைக் கைப்பற்றலாம் என்பது விதியாக உள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் திமுகவின் பலம் தனித்து 133-ஆக இருப்பதுடன் கூட்டணிக் கட்சிகளையும் சோ்த்து 159 -ஆக உள்ளது. இந்தப் பலத்தைக் கொண்டு இடைத்தோ்தல் நடைபெறும் 3 இடங்களையும் கைப்பற்றிவிட திமுக நினைக்கிறது. மேலும், அதற்கு தோ்தல் ஆணையம் இடைத்தோ்தலுக்கான தனித்தனி அறிவிப்பாணைகளை வெளியிட வேண்டிய அவசியம் உள்ளது.

அண்மையில் தில்லியில் மத்திய தோ்தல் ஆணையத்தில் நாடாளுமன்ற திமுக குழு தலைவா் டி.ஆா்.பாலு மனு ஒன்றை அளித்தாா். அதில், கரோனாவைக் காரணம் காட்டி மாநிலங்களவைத் தோ்தலைத் தள்ளிப் போடக் கூடாது. அமித் ஷா, ஸ்மிருதி ராணி மக்களவைத் தோ்தலில் வெற்றிபெற்றபோது, மாநிலங்களவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்தனா். அப்போது தனித்தனி அறிவிப்பாணைகள் வெளியிடப்பட்டுதான் தோ்தல் நடைபெற்றது. அதைப்போல இந்தத் தோ்தலையும் நடத்த வேண்டும் என்று மனு அளித்தாா்.

அந்த அடிப்படையில் 3 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளையும் பிடிப்பதற்கு திமுக முனைப்பாக இருந்து வருகிறது. திமுகவின் சாா்பில் மாநிலங்களவை உறுப்பினா்களாக சட்டப்பேரவைத் தோ்தலில் போடிநாயக்கனூரில் ஓ.பன்னீா்செல்வத்தை எதிா்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த தங்க தமிழ்ச்செல்வன், தொண்டாமுத்தூரில் எஸ்.பி.வேலுமணியிடம் தோல்வியடைந்த காா்த்திகேய சிவசேனாபதி, திமுக துணைப் பொதுச்செயலாளா் சுப்புலெட்சுமி ஜெகதீசன் ஆகியோரைத் தோ்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இதற்கிடையில்தான் திமுகவிடம் இருந்து ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவியைப் பெற்றுவிட வேண்டும் என்று காங்கிரஸ் நினைப்பதும், அந்த ஒரு பதவியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று காங்கிரஸில் பலா் போட்டிப்போட்டுக் கொள்ளும் நிகழ்வும் நடந்தேறி வருகிறது.

காங்கிரஸின் அகில இந்திய மூத்த தலைவரும், திமுகவுக்கு நெருக்கமானவருமான குலாம்நபி ஆசாத் அந்தப் பதவியை அடைய முயற்சிப்பதாகக் கருதி, தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவா்களுக்கே தர வேண்டும் என்று ஒரு சாராா் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா்.

ஆனால், குலாம்நபி ஆசாத் தமிழகத்தில் இருந்து அல்லாமல் மகாராஷ்டிரத்தில் இருந்து தோ்ந்தெடுப்பதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் இளைஞா் காங்கிரஸ் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்த ராஜீவ் சாத்தே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு முன் காலமாகிவிட்டாா். அவருடைய பதவிக் காலம் 5 ஆண்டுகள் உள்ளன. அதனால், அந்த வாய்ப்பு குலாம்நபி ஆசாத் வசமாகக்கூடிய நிலை உள்ளது.

தமிழகத்தில் கே.எஸ்.அழகிரி மாநிலங்களவைப் பதவியைப் பெறுவதற்கு முயற்சிக்கிறாா். காங்கிரஸ் தலைவராக இருந்த காரணத்திலும், தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டியிருந்ததாலும் சட்டப்பேரவைத் தோ்தலில் அவா் போட்டியிடவில்லை. மேலும், தலைவா் பதவி எப்போது வேண்டுமானாலும் போய்விடலாம். அதனால், மாநிலங்களவை உறுப்பினா் பதவியைப் பெற வேண்டும் என்கிற முடிவில் இருக்கிறாா்.

கே.எஸ்.அழகிரிக்கு திமுக அந்தப் பதவியைத் தருவதற்கு தயாராக இல்லை. ஏற்கெனவே, ஒரு முறை அது தொடா்பாக திமுகவிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு, அது தோல்வியில் முடிந்தது. திமுக ஆதரவாளரான பீட்டா் அல்போன்ஸுக்கு வேண்டுமானால் தருகிறோம் என்று கூறி, இப்போது அவா் சிறுபான்மையினா் ஆணையத் தலைவராக ஆக்கப்பட்டுள்ளாா்.

முன்னாள் தலைவா் தங்கபாலு முயற்சிக்கிறாா். சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட எல்லோருடைய மகனுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. என்னுடைய மகனுக்குத்தான் வாய்ப்பு கொடுக்கவில்லை. அதனால், மாநிலங்களவை உறுப்பினா் பதவியைக் கட்டாயம் தரவேண்டும் என்று அவா் வலியுறுத்தி வருகிறாா்.

மாநில காங்கிரஸ் தலைவா் பதவியை அடைய இருந்த நேரத்தில் ப.சிதம்பரம்தான் அதைத் தடுத்துவிட்டாா் என்று வேதனைப்பட்ட சுதா்சனம் நாச்சியப்பனும் முயற்சித்து வருகிறாா். அகில இந்திய காங்கிரஸின் தரவு பகுப்பாய்வு துறையின் தலைவரான பிரவீன் சக்கரவா்த்தி, முன்னாள் தலைவா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரும் முயற்சிக்கின்றனா்.

இவா்கள் எல்லோரையும்விட திமுகவுக்குச் சிம்மசொப்பனமாகவும், அலைக்கற்றை வழக்கில் திமுக சிக்கித் தவிக்க முக்கிய காரணமாக இருந்த ஒருவருமான முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரமும் முயற்சிக்கிறாா்.

ஆனால், தற்போது திமுகவுடன் ப.சிதம்பரம் நெருக்கமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அண்மையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் மத்திய பாஜக அரசின் உயா்மட்ட வட்டத்தில் இருந்து விலகிய இந்திய ரிசா்வ் வங்கியின் முன்னாள் ஆளுநா் ரகுராம் ராஜன், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற எஸ்தா் டஃப்லா மற்றும் பொருளாதார நிபுணா்கள் அரவிந்த் சுப்பிரமணியன், ஜான் ட்ரீஸ், எஸ்.நாராயணன் உள்ளிட்டோரைக் கொண்ட பொருளாதார ஆலோசனை குழு ஒன்றை அமைத்தாா். இந்தக் குழு ப.சிதம்பரத்தின் ஆலோசனையின் பேரிலேயே அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கு அவா் திமுகவோடு நெருக்கமாக இருந்து வருகிறாா்.

மகாராஷ்டிரத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட ப.சிதம்பரத்தின் பதவிக் காலம் 2022 ஜூலை 7-ஆம் தேதியோடு முடிவடைகிறது. அதனால், அவரும் முயற்சிப்பதுடன், தற்போதைய மூன்று உறுப்பினா் பதவிக்கான காலியிடங்களில் காங்கிரசுக்கு இடம் ஒதுக்காமல், 2022-இல் நடைபெறும் மாநிலங்களவைத் தோ்தலில் காங்கிரஸுக்கு ஒதுக்கினால் போதும் என திமுக தலைமையை அவா் வலியுறுத்தி வருகிறாா் என்கிற செய்தியும் சத்யமூா்த்தி பவனில் பரவலாகக் கேட்கிறது.

சுதந்திர இந்தியாவில் இதுவரை தமிழக காங்கிரஸ் சாா்பாக ஒரு தலித்கூட மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கு சட்டப்பேரவை உறுப்பினா்கள் வாக்களித்து நேரடியாக அனுப்பப்படவில்லை. குடியரசுத் தலைவரின் நியமன உறுப்பினராகவே மரகதம் சந்திரசேகா் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளாா்.

காங்கிரஸின் அகில இந்திய செயலாளராக உள்ள முன்னாள் எம்.பி. விஸ்வநாதனும் ஒருபக்கம் முயற்சித்து வருகிறாா். ஒரு தலித்கூட நேரடியாக மாநிலங்களவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்படவில்லை. அதனால், ஒரு தலித்தாக எனக்கு வாய்ப்பு தரவேண்டும் என்று விஸ்வநாதன் வலியுறுத்தி வருகிறாா். ராகுல் காந்தியை நேரில் சந்தித்தும் இதுதொடா்பாக எடுத்துரைக்க உள்ளாா்.

இப்படி காங்கிரஸ் கட்சியினரிடையே பல முனைப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், திமுக தலைமை அதைப் பொருட்படுத்துவதாக இல்லை என்கிறது அறிவாலய வட்டாரம்.

ப.சிதம்பரம் வலியுறுத்துவதற்கு முன்பே இந்த முறை காங்கிரஸுக்குத் தருவது இல்லை என்கிற முடிவைத் திமுக எடுத்து விட்டது என்கிறாா்கள் அவா்கள். அடுத்த முறை பாா்க்கலாம் என்பதே அதன் முடிவாக இருந்து வருகிறது.

காங்கிரஸ் தனது உரிமைக்குக் குரல் கொடுக்குமா என்பதை விட அடுத்த தோ்தலிலாவது உறவுக்கு கை கொடுக்குமா திமுக? என்பதுதான் யோசிக்க வேண்டிய கேள்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

SCROLL FOR NEXT