சிறப்புச் செய்திகள்

ஒரு கணவர், மூன்று காதலர்கள்: கருவிலிருந்த குழந்தைக்குத் தந்தை யார்? முடிவு: பெண் தற்கொலை!

7th Jul 2021 01:30 PM | ததாகத்

ADVERTISEMENT

 

பிழைப்புக்காகவும் பணத்துக்காகவும் வேறுவழியில்லாமல் ஆண்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல, இயல்பான பாலியல் உணர்வுகளால்  தெரிந்தோ, தெரியாமலோ சீரழிந்துபோகின்றனர் சில பெண்கள்.

இத்தகைய சம்பவங்களில் யார் பாவம், யாருக்காகப் பரிதாபப்படுவது என்பதுகூட  புரிவதில்லை.

தமிழ்நாட்டின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில்  கிராமங்களைச் சேர்ந்த  ஆண்கள் பெருமளவில்  வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்கின்றனர்.

ADVERTISEMENT

காவிரி டெல்டா மாவட்டங்களிலிருந்தும் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்தும் பெருமளவிலான இளைஞர்கள், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு வேலைக்குக் கூட்டம்கூட்டமாகச் செல்கின்றனர்.

மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களிலிருந்தும் அதிக அளவிலானோர் வளைகுடா நாடுகளுக்கும்  ஓரளவு சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளுக்கும் வேலைக்குச் செல்கின்றனர்.

வேலையில்லா நிலையில் வெளிநாடு செல்லும் இவர்கள், தங்கள் வருவாயை நம்பி, தாங்கள் சம்பாதித்த பணத்திலும் கடன்களை வாங்கியும், உள்ளூரில் நிலங்களை வாங்குகின்றனர். வீடுகளைக் கட்டுகின்றனர். ஆனால், வாழ்க்கை?

திருமண காலங்களில் ஊர் திரும்பித் (பெரும்பாலும் தாமதமாகத்) திருமணம் செய்துகொள்ளும் இவர்களால் தொடர்ந்து இங்கே இருக்க முடிவதில்லை. வேலை, பணத் தேவை காரணமாக மனைவி, மக்களைப் பிரிந்து  மீண்டும் வெளிநாடுகளுக்கே சென்றுவிடுகின்றனர்.

இவர்களிடமிருந்து கிடைக்கும் வருவாய் காரணமாகக் குடும்பத்தினரும் வேறுவழியில்லாமல் எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டு வாழ்கின்றனர்.

கணவன் - மனைவி பிரிந்துகிடக்கும் இத்தகைய வாழ்க்கைச் சூழலில்தான் சிலர் வெவ்வேறு விதமான சிக்கல்களில் மாட்டிக் கொண்டுவிடுகின்றனர்.

அண்மையில் டெல்டா மாவட்டங்களில் ஒரு கிராமத்தில் நேரிட்ட ஒரு பெண்ணின் தற்கொலை மிகவும் சிக்கலானது. பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.

இதையும் படிங்க 

ஓரளவு படித்த இந்தப் பெண்ணுக்கும் வெளிநாடு ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த இளைஞருக்கும் சில ஆண்டுகள் முன் திருமணம் நடந்திருக்கிறது.

திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே மீண்டும் வெளிநாட்டுக்குப்  புறப்பட்டுச் சென்றுவிட்டிருக்கிறார் கணவர். வேலை, வேலை என்றிருந்த அவர் ஊருக்கு வரவேயில்லை எனக் கூறப்படுகிறது.

மகன் திருமணம் முடிந்ததும் மகனையும் மருமகளையும் தங்கள் வீட்டுக்கு அருகிலேயே குடிவைத்திருக்கின்றனர் பெற்றோர். சில மாதங்களிலேயே மகன் வெளிநாட்டுக்குப் புறப்பட்டுப் போய்விட அந்தப் பெண் மட்டும் தனியே இருந்திருக்கிறார். குழந்தை இல்லை.

இந்த நிலையில்தான் இந்தப் பெண்ணின் வாழ்க்கையில் சில ஆண்களால் விதி விளையாடத் தொடங்கியிருக்கிறது.

இதே கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்களுடன்  இந்தப் பெண்ணுக்குப்  பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் பெண்ணின் பாலியல் பலவீனத்தை இவர்கள் பயன்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இவர்களில் ஒருவன்  பதினெட்டு வயதுகூட நிரம்பாதவன் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த விஷயங்கள் எல்லாம் யாருக்கேனும் தெரியுமோ, இல்லையோ? இவ்வளவு காலமாகப் பிரச்னை என்று எதுவுமில்லாமல்தான் இருந்திருக்கிறது.

ஏதோவொரு தருணத்தில் இந்தப் பெண் கருவுற்றதாகவும் மூன்று  மாதங்களாகிவிட்ட நிலையில் இதனால் பெரும் இக்கட்டில் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

பிறக்கப் போகும் குழந்தைக்குத் தந்தை யார்? வெளிநாட்டிலிருக்கும் கணவரையும் குடும்பத்தினரையும் எதிர்கொள்வது எவ்வாறு? என்றெல்லாம் யோசித்துப் பெரும் மன நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார் அந்தப் பெண்.

பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் இளைஞர்களில் ஒருவரும்  அவரை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை, கழற்றிக்கொண்டுவிட்டிருக்கின்றனர். விபரீதமான இந்த உறவுச் சிக்கலில் யார்தான் என்ன முடிவு எடுப்பார்கள்?

இந்த நிலையில் பெண்ணுக்குத் தெரிந்த ஒரே தீர்வு - தற்கொலை.

இதையும் படிக்க |  நிஜத்தில் ஒரு பாரதி கண்ணம்மா கதை! 46 ஆண்டுகளுக்குப் பின் குழந்தையின் தந்தை என உறுதி

தற்கொலை தொடர்பாக வீட்டில் எந்தக் கடிதமும் யாருக்கும்  எழுதிவைக்கவில்லை இந்தப் பெண். காரணம் தெரியாமல் தவித்தனர் குடும்பத்தினர்.

பெண்ணுடைய உறவுக்காரர்கள் எல்லாரும் திரண்டுவந்து, சந்தேகத்தின் அடிப்படையில் வரதட்சிணைக்  கொடுமையால்தான் பெண் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார், எனவே குற்றவாளிகளைக் கைது செய்யாமல் உடலைப் பெறப் போவதில்லை எனத் தகராறு செய்திருக்கின்றனர்.

உடல் கூறாய்வின்போதுதான் இந்தத் தற்கொலைக்கான கொடிவழி பிடிபட்டது. தன்னுயிரை மாய்த்துக்கொண்ட பெண், தன் ஆடைக்குள் ஒரு துண்டுச்சீட்டில் தன் சாவுக்குக் காரணமென அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு எழுதிவைத்திருக்கிறார்.

விசாரணைக்குப்  பின் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இப்போதைக்குத் துண்டுச்சீட்டைத் தவிர எந்த ஆதாரமும் இல்லை. உடல் கூறாய்வு அறிக்கை வந்த பிறகுதான் பெண் கருவுற்றிருந்ததாகக் கூறப்படுவது பற்றியோ அதற்குக் காரணம் யார் என்பது பற்றியோ தெரியவரும். அதன்  பிறகுதான் வழக்கின் திசைவழி தெரியும். பிறகு வழக்கு விசாரணை எல்லாம் நடைபெறும். ஒருவேளை யாரேனும் தண்டிக்கப்படலாம்.

இந்த இளம்பெண்ணின் தற்கொலையில் - சட்டப்படி அல்லாமல் -  யார் யாரெல்லாம் குற்றவாளிகள்?

மணமாகி சில மாதங்களிலேயே மனைவியை விட்டுவிட்டு வெளிநாடு சென்றுவிட்டு ஆண்டுக்கணக்கில் ஊருக்கு வராத கணவனா?

வெளிநாடு சென்ற கணவனைக் குறிப்பிட்ட காலஇடைவெளியிலேனும் ஊருக்குத் திரும்ப வரச்செய்யாத இளம்பெண்ணா?

பெண்ணைத் திருமணம் செய்துகொண்டுவந்தோமே, கணவன் - மனைவியாக அவர்கள் குடும்பம் நடத்தும் வழிவகை கண்டோமா? எனக் கருதாத தம்பதிகளின் பெற்றோர்களா?

தவறு செய்கிறோம் எனத் தெரிந்தே நடந்துகொண்ட இளைஞர்களா? அவர்களை அனுமதித்த பெண்ணா?

அல்லது இவற்றுக்கெல்லாம் காரணமான பொருளாதார - வாழ்க்கைச் சூழலா?

ADVERTISEMENT
ADVERTISEMENT