சிறப்புச் செய்திகள்

பாமக நிபந்தனை: ஏற்குமா அதிமுக?

31st Jan 2021 11:31 AM | பீ. ஜெபலின் ஜான்

ADVERTISEMENTபுதுச்சேரி: வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற பாமக நிபந்தனைக்குப் பின்னால் இருக்கும் அரசியல் லாப, நஷ்ட கணக்குகளை அதிமுக துல்லியமாகக் கணக்குப் போட்டு, காய் நகர்த்தி வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க  வேண்டும் என்ற நிபந்தனையை அதிமுகவுக்கு வைத்து,  கடந்த டிசம்பர் மாதம் ராமதாஸ் போராட்டத்தை அறிவித்தார். ஆனால்,  தமிழக அரசியலில் ராஜதந்திரியாக வளர்ந்து நிற்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு, அதனடிப்படையில் அனைத்து சமூகத்தினருக்கும் இடஒதுக்கீடு அளவை நிர்ணயிக்கலாம் என முடிவெடுத்து, வன்னிய சமூகத்தைச் சேர்ந்த ஓய்வு  பெற்ற நீதிபதி குலசேகரனை ஆணையத் தலைவராக அறிவித்து ராமதாஸின் நிபந்தனையை மட்டுப்படுத்தினார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு மேல் ஆகும். அது தேர்தலுக்குப் பின்னர்தான் சாத்தியமாகும் என்பது எடப்பாடி பழனிசாமியின் வியூகம். இந்த வியூகத்தால் பாமகவின் போராட்டம், 1980 ஆண்டைய கட்டங்களில் இருந்தது போல வீரியம் பெறவில்லை. இதை அறிந்த ராமதாஸ், சற்று இறங்கிவந்து எம்பிசி தொகுப்பில் வன்னியர்களுக்கு 12 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, தனது நிபந்தனையைத் தளர்த்தி ஜன.31-க்குள் நிறைவேற்ற கெடு விதித்துள்ளார். ராமதாஸின் உள்ஒதுக்கீட்டு கோரிக்கையை ஏற்பதிலும் அதிமுகவுக்கு சில நெருடல்கள் காத்திருக்கின்றன. ராமதாஸ் நிபந்தனையை ஏற்றால், அதனால் லாபம் அதிமுகவுக்கு வருமா;  பாமகவுக்கு வருமா;  பாமகவுக்கு லாபம் கிடைத்து, அதிமுகவுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவனத்துடன் அரசியல் நகர்வை மேற்கொண்டு வருகிறார்.

1931-இல் பிரிட்டிஷ் காலத்தில் எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி வன்னியர்கள் 17 சதவீதம் உள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 1989-இல் திமுக ஆட்சிக் காலத்தில் அம்பா சங்கர் மற்றும் சட்டநாதன் ஆணையம் அறிக்கையின்படி 13 சதவீதம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை மையமாக வைத்தே மருத்துவர் ராமதாஸ்  உள்ஒதுக்கீடு கோரிக்கையை கையில் எடுத்துள்ளார்.

ADVERTISEMENT

அதிமுகவைப் பொருத்தவரை, 2019 மக்களவைத் தேர்தலில் பாமகவின் தேவை மிக அதிகமாக இருந்தது. அதிமுகவுக்குப் போட்டியாக இருந்த டி.டி.வி. தினகரனின் வளர்ச்சியை மட்டுப்படுத்த பாமக தேவைப்பட்டது. 

அப்போது, அதிமுக-பாமக கூட்டணி அமையாமல் இருந்திருந்தால் பாமக-அமமுக கூட்டணி உருவாகி, வட மாவட்டங்களில் மும்முனைப் போட்டி ஏற்பட்டு அது அதிமுகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.
இதனால்தான் பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை எம்.பி.யையும் அதிமுக ஒதுக்கியது. தமிழகத்தின் மூத்த தலைவர் என்ற மரியாதை கொடுத்து, தைலாபுரம் தோட்டத்துக்கே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்று கூட்டணியை உறுதி செய்தனர். தினகரனை மட்டுப்படுத்தும் அதிமுகவின் நோக்கம் நிறைவேறினாலும், கூட்டணியில் பாமக இருந்தது அதிமுக கூட்டணிக்கு சில எதிர்விளைவுகளை ஏற்படுத்தியது.

விடுதலைச் சிறுத்தைகள், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய சிறிய கட்சிகளைப் பயன்படுத்தி பாமகவுக்கு எதிராக பிற சமூக வாக்குகளை (தலித்-பிற்படுத்தப்பட்டோர்) திமுக அள்ளிக் குவித்தது. அது வட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் 10 முதல் 15 சதவீத வாக்குகள் திமுகவுக்கு கூடுதல் இலவச வாக்குகளாகக் கிடைத்தன.  2019 மக்களவைத் தேர்தலைப் போன்று, பாமகவின் தேவை 2021 பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு இல்லை. ஓரணியில் பயணிப்பதில் இரு கட்சிகளுக்கும் சில தயக்கங்கள் இருக்கின்றன. 

திமுகவின் அதிகாரபூர்வ கட்சிப் பத்திரிகையில் கடந்த இரு மாதங்களாகவே ராமதாஸை கடும் விமர்சனம் செய்து கட்டுரைகளும், கேலிச் சித்திரங்களும் தொடர்ந்து வருவது திமுக கூட்டணியில் பாமகவுக்கான கதவு முழுவதுமாக அடைக்கப்பட்டு விட்டதையே உணர்த்துகிறது.  இதனால், பாமகவின் பேர வலிமை எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இந்த முறை மிகவும் குறைந்துவிட்டது.

இப்போதைய நிலையில், பாமகவின் அளவு உயரத்துக்கு ஏற்ற குறைந்த எண்ணிக்கையில்தான் தொகுதிகள் ஒதுக்க வேண்டிய நிர்பந்தம் அதிமுகவுக்கு உள்ளது. பாமகவுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கினால், பாஜகவும் அதே எண்ணிக்கையில் தொகுதிகள் கேட்கக்கூடும்.  

பாமக எண்ணிக்கையைக் குறைத்தால், பாஜகவின் எண்ணிக்கையையும் குறைக்கலாம். பாமக, பாஜகவின் தொகுதிகளின் எண்ணிக்கை 60-க்கு மேல் உயர்ந்தால், அது எடப்பாடி பழனிசாமியின் வலிமையான முதல்வர் வேட்பாளர் என்ற பிம்பத்தைப் பாதிக்கக்கூடும். இதையெல்லாம் கணக்குப் போட்டுதான் அதிமுகவும், பாமகவும் தங்களது அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

தனது பேர வலிமையை உயர்த்த ராமதாஸ், தற்போது உள்ஒதுக்கீடு பிரச்னையை விரைவுபடுத்தியுள்ளார். இடஒதுக்கீடு பிரச்னையை ஒரு முதல்வராக இருப்பவர் கையாளுவது என்பது இரு பக்கமும் கருக்கு பட்டயத்தைக் கையாளுவதற்குச் சமம். இதற்கு இடஒதுக்கீடு பிரச்னையை காமராஜர், கருணாநிதி ஆகியோர் கையாண்ட அனுபவம், இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நிச்சயமாகக் கைகொடுக்கும்.

 காமராஜரின் ராஜதந்திரம் வெற்றி பெற்ற இடமும், கருணாநிதியின் ராஜதந்திரம் தோல்வி அடைந்த இடமும் இதுதான். இதை மையமாக வைத்துத்தான் பாமகவின் நிபந்தனையைக் கையாள வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ஆலோசனை வழங்குவோர் தெளிவாக எடுத்துச் சொல்லியுள்ளனர். 

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை உருவாக்கி, வன்னியர்களுக்கு கல்விச் சலுகை வழங்க வேண்டும் என 1954-இல் எஸ். எஸ்.ராமசாமி படையாச்சி  கோரிக்கை எழுப்பினார். அதைக் காமராஜர் நிறைவேற்றியதுடன் 19 பேரவைத் தொகுதிகள்,  4 மக்களவைத் தொகுதிகளுடன் அரசியல் சக்தியாக இருந்த அவரது  உழைப்பாளர் பொதுநல கட்சியை காங்கிரஸில் இணைக்கும்படி செய்தார்.  ராமசாமி படையாச்சியை தனி அடையாளமாக உருவெடுக்க முடியாமல் தடுத்து, காமராஜர் எடுத்த ராஜதந்திர நடவடிக்கை காங்கிரஸூக்குப் பெருத்த லாபத்தைக் கொடுத்தது.

ஆனால், 1989-இல் ராமதாஸ் இட ஒதுக்கீடு பிரச்னையை கையில் எடுத்தபோது, கருணாநிதி இட ஒதுக்கீட்டையும் கொடுத்து, பாமக என்ற உருவத்தில் ராமதாஸை அரசியல் சக்தியாக உருவெடுக்க வைத்துவிட்டார். இதனால் கருணாநிதிக்கு நஷ்டமும், ராமதாஸூக்கு மிகப்பெரிய லாபமும் கிடைத்தது.

 இந்த நடவடிக்கையால், 1989 பேரவைத் தேர்தலில் திமுக பெற்ற 34 சதவீத வாக்குகளைவிட,  அதே ஆண்டு இடஒதுக்கீடு வழங்கிய பிறகு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 26.6 சதவீத வாக்குகளை, அதாவது 8 சதவீத வாக்குகளை திமுக குறைவாகப் பெற்றது. அண்ணா காலம் முதல் அதுவரை திமுகவுக்கு பாரம்பரியமாக வாக்களித்துவந்த பெரும்பாலான வன்னியர்களில், ஒரு குறிப்பிட்ட அதாவது 5 சதவீதம் பேர் பாமகவின் வாக்கு வங்கியாகத் திரண்டுவிட்டனர்.

மேலும், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதால் பாதிக்கப்பட்ட கொங்கு வேளாளர்கள், உடையார் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்டோர் சமூக வாக்குகளிலும் சேதாரம் ஏற்பட்டதால், மேலும் 3 சதவீத வாக்குகளையும் திமுக இழந்தது. இடஒதுக்கீட்டையும் கொடுத்து, மொத்தமாக சுமார் 8 சதவீத திமுக வாக்குகளை இழந்தது. கருணாநிதியின் ராஜதந்திரம் வீழ்ந்த இடமாகவே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

அதனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு கிடைக்கும்  லாப, நஷ்டத்தைக் கணக்கிட்டுத்தான் எந்த முடிவையும் எடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.  ராமதாஸின் நிபந்தனையை அதிமுக ஏற்றாலும்கூட,  பாமக குறைந்த எண்ணிக்கை தொகுதியை ஒப்புக்கொண்டு கூட்டணியில் தொடருமா என்பது சந்தேகம்தான். அதிக தொகுதிகளையும் பாமகவுக்கு விட்டுக்கொடுத்து, ராமதாஸின் நிபந்தனையையும் ஏற்றால் "அதனால் பாமக வளரும், அதிமுகவுக்கு என்ன லாபம்?' என்பது அதிமுகவினரின் கேள்வி.

அதேவேளையில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு பட்டியலைத் திருத்தும்போது, அதனால் பாதிப்பை சந்திக்கும் வலையர், வண்ணார், நாவிதர், குயவர், தொட்டிய நாயக்கர் போன்ற சமூகங்களின் எதிர்ப்பை எடப்பாடி பழனிசாமி சம்பாதிக்க நேரிடும்.  இது தேன்கூட்டில் கை வைக்கும் முயற்சி என்பதால், ஜன.31-க்குள் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் அதிமுக வர இயலாது என்றுதான் தோன்றுகிறது. 

பாமகவின் எதிர்ப்பு வாக்குகள் எதிரணிக்கு குவிந்துவிடுவதால் கடந்த பத்தாண்டு காலமாக எந்தக் கூட்டணியில் இடம்பெற்றாலும், தனித்துப் போட்டியிட்டாலும் பாமக பின்னடைவையே சந்தித்து வருகிறது.  தோல்வியில் துவண்டு கிடக்கும் பாமகவை மீண்டும் எப்படி நிலைநிறுத்தப் போகிறார் மருத்துவர் ராமதாஸ் என்பதை 2021 தமிழக பேரவைத் தேர்தல் முடிவு வெளிப்படுத்தும்.

ஒருவேளை பாமக தனித்து சென்றாலோ அல்லது அதிமுக,  திமுகவை தவிர்த்து மூன்றாவது அணி அமைத்தாலோ, பலமுனை போட்டியில் பாமகவின் எதிர்ப்பு  வாக்குகள் சிதறி 1996 பேரவைத் தேர்தலில் 4 தொகுதிகள், 2014 மக்களவைத் தேர்தலில் தருமபுரியில் வெற்றிபெற்றதுபோல சில தொகுதிகளில் வெற்றி பெறுவதுடன் குறைந்தபட்சம் 5 சதவீத வாக்கு வங்கியை பெற்று திமுக-அதிமுகவுக்கு அடுத்த கட்சியாக பாமக, தன்னை நிலைநிறுத்திக்கொள்ளக் கூடும்.

கூட்டணியில் பாமக தொடருமா,  மீண்டும் "மாற்றம், முன்னேற்றம், அன்புமணி' என முழக்கமிட்டு தனித்துக் களம் இறங்குமா?

ADVERTISEMENT
ADVERTISEMENT