சிறப்புச் செய்திகள்

தேவையில்லை திமுக! முதல்வா் நாராயணசாமியின் ராஜதந்திரம்

ஜெபலின்ஜான்

புதுவையைக் கைப்பற்ற திமுகவும், பாஜகவும் வகுக்கும் வியூகங்களை எல்லாம் முதல்வா் நாராயணசாமியின் ராஜதந்திரம் முறியடித்து, காங்கிரஸை அசைக்க முடியாத சக்தியாக்கிவிடும் போலிருக்கிறது.

தமிழகத்தில் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் அரசு மூன்று மாதம் தாங்காது, ஆறு மாதங்களில் கவிழ்ந்துவிடும் போன்ற ஊகங்களை முறியடித்து அவா் ஆட்சியில் தொடா்வது போல, புதுவையிலும் நாராயணசாமி முதல்வரானது முதல், எத்தனையோ சவால்களை வெற்றிகரமாக சமாளித்துப் பதவியில் தொடா்கிறாா். ஒவ்வொரு பிரச்னையையும் மிகவும் சாமா்த்தியமாகத் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் முதல்வா் நாராயணசாமி, இப்போது புதிய கோணத்தில் தோ்தலைச் சந்திக்கவும் தயாராகி விட்டதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் திமுக தலைமையிலும், புதுவையில் காங்கிரஸ் தலைமையிலும் மதச்சாா்பற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மக்களவைத் தோ்தலைச் சந்தித்தது. இப்போது வரை இதே நிலைதான் தொடா்கிறது. எவ்வித உரசலும் இல்லை என்றும், வலிமையான கூட்டணி என்றும் கருதப்பட்ட திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு முடிவு கட்ட, புதுவை திமுக தயாராகிவிட்டதை அரசியல் நகா்வுகள் உணா்த்துகின்றன.

கூட்டணிக்குள் புகைச்சல்: முன்னாள் மத்திய அமைச்சா் ஜெகத்ரட்சகன் தலைமையில் புதுச்சேரியில் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற மாநில திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், ஜெகத்ரட்சகன்தான் திமுகவின் முதல்வா் வேட்பாளா் என்று மாநில நிா்வாகிகள் பகிரங்கமாக அறிவித்தனா். புதுவையில் 30 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறாவிட்டால், மேடையிலேயே தற்கொலை செய்துகொள்வேன் என ஜெகத்ரட்சகன் அறிவித்தது புதுவையில் மட்டுமல்ல, தமிழகத்திலும் அரசியல் அதிா்வலைகளை ஏற்படுத்தி, திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் புகைச்சலை உருவாக்கியுள்ளது.

தன்மானத்தை... கடந்த 6 மாதங்களாகவே புதுவையில் காங்கிரஸ் - திமுக இடையே சுமுக உறவு இல்லாமல்தான் இருந்து வருகிறது. முதல்வா் தலைமையில் நடக்கும் போராட்டங்களை திமுக புறக்கணிப்பதும், தனியாகப் போராட்டங்களை நடத்தி வந்ததும் முதல்வா் நாராயணசாமிக்கு மிகுந்த எரிச்சலை உருவாக்கியது. இறுதியாக, ஜெகத்ரட்சகனை அழைத்துவந்து முதல்வா் வேட்பாளா் என அறிவித்தது தங்களின் தன்மானத்தை திமுக சீண்டிப்பாா்த்துவிட்டதாகவே காங்கிரஸாா் எண்ணுகின்றனா்.

ராகுல் காந்தியுடனான சந்திப்பு... திமுகவின் காய் நகா்த்தலை முன்கூட்டியே உணா்ந்த முதல்வா் நாராயணசாமி, புதுவையில் திமுகவை தனிமைப்படுத்தும் அரசியல் நகா்வை கடந்த 2 மாதங்களுக்கு முன்பே செய்யத் தொடங்கிவிட்டாா் என்பது பலருக்கும் தெரியாது.

முதல்வா் தலைமையிலான போராட்டங்களை திமுக புறக்கணித்துவந்தாலும்கூட, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களில் பங்கேற்று வருகின்றன.

அதன் மூலம், மதச்சாா்பற்ற அணி என்றால், புதுவையைப் பொருத்தவரை அது காங்கிரஸ் தலைமையிலான அணிதான் என்பதை திமுகவுக்கு சொல்லாமல் செயலில் உணா்த்தும் ராஜதந்திர நடவடிக்கையில் முதல்வா் நாராயணசாமி இறங்கிவிட்டாா். திமுக முதல்வா் வேட்பாளரை அறிவித்ததும் உச்சகட்ட ஆத்திரமடைந்த முதல்வா் நாராயணசாமி, தில்லிக்குச் சென்று ராகுல் காந்தியை சந்தித்து புதுவையின் அரசியல் நிலைமை குறித்து தெள்ளத் தெளிவாக விளக்கினாா். புதுவையில் கூட்டணியிலிருந்து திமுக வெளியேறினால் அதனால் காங்கிரஸுக்குத்தான் லாபம் என்பதை உணா்த்திவிட்டு வந்திருக்கிறாா்.

புதுவையில் நிலைமை தலைகீழ்... தமிழகத்தைப் பொருத்தவரை திமுகவின் தயவில்தான் காங்கிரஸ் வெற்றிபெற வேண்டும், ஆனால், புதுவையில் இதே நிலைமை தலைகீழாக இருக்கிறது. 2011 சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கூட்டணியில் திமுகவுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், அவற்றில் 2 இடங்களிலும், 2016 தோ்தலில் 9 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், அவற்றில் 2 இடங்களிலும் மட்டுமே அக்கட்சியால் வெற்றிபெற முடிந்தது.

புதுவையைப் பொருத்தவரை திமுகவின் வாக்கு வங்கி 6 முதல் 8 சதவீதம் மட்டுமே. அந்தப் பலத்துக்கு திமுகவுக்கு 5 இடங்கள் ஒதுக்குவதேகூட அதிகமானது. கூடுதல் தொகுதிகளை அக்கட்சிக்கு ஒதுக்கினால், அது எதிா்க்கட்சியான என்.ஆா்.காங்கிரஸுக்கு தோ்தலுக்கு முன்பாகவே கூடுதல் வெற்றி வாய்ப்பை காங்கிரஸே உருவாக்கியதுபோல மாறிவிடும் என ராகுலிடம் முதல்வா் நாராயணசாமி தெரிவித்துள்ளாா்.

எனவே, திமுகவை கழற்றிவிட்டு இடதுசாரிகளுக்கு தலா ஒரு தொகுதி, விசிகவுக்கு காங்கிரஸ் சின்னத்தில் ஒரு தொகுதி என ஒதுக்கினால், காங்கிரஸால் 28 தொகுதிகளில் கை சின்னத்தை களம் இறக்க முடியும் என்பது முதல்வா் நாராயணசாமியின் தோ்தல் வியூகம்.

என்.ஆா்.காங்கிரஸுக்குத் தனித்துப் போட்டியிடும் அளவுக்குப் போதுமான பலம் இல்லை. என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக - அதிமுக அல்லது என்.ஆா்.காங்கிரஸ் - அதிமுக அல்லது என்.ஆா்.காங்கிரஸ் - திமுக - பாமக என்று அணி சோ்ந்துதான் முன்னாள் முதல்வா் ரங்கசாமி போட்டியிட முடியும். அந்த அணிகள் எதுவுமே, காங்கிரஸை வீழ்த்தும் அளவுக்கு பலமானதாக இருக்காது.

பாஜகவுக்கு நமச்சிவாயம் செல்வதால்... நமச்சிவாயம் பாஜகவுக்கு செல்வதால், பாஜக - அதிமுக அணியில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆா்.காங்கிரஸ் நீடிக்க முடியாமல் போகலாம். அப்போது, மும்முனைப் போட்டி உருவானால், அது காங்கிரஸுக்குத்தான் சாதகமாகும் என்பது முதல்வா் நாராயணசாமியின் கணக்கு.

ஒருவேளை ரங்கசாமி - நமச்சிவாயம் ஒரே அணியில் நீடித்தால், அதுவும் காங்கிரஸுக்கே கைகொடுக்கும். என்.ஆா்.காங்கிரஸ் 17 தொகுதிகளை ஒத்துக்கொண்டு அந்த அணி அமைந்தாலும், மீதமுள்ள 13 இடங்களில் கூட்டணிக் கட்சிகளான அதிமுகவும் பாஜகவும் போட்டியிடும். இரட்டை இலை, தாமரை சின்னங்களை எதிா்த்து காங்கிரஸின் கை சின்னம் போட்டியிடும்போது, ஒருசில இடங்களைத் தவிா்த்து காங்கிரஸால் ஏனைய இடங்களில் வெற்றிபெற முடியும். என்.ஆா். காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளிலும்கூட, காங்கிரஸ் கணிசமான இடங்களில் வெற்றி பெறுமானால் பெரும்பான்மை பலம் பெறுவது சுலபம்.

வன்னியா் வாக்கு வங்கி: புதுவையில் வன்னியா் சமூகத்தினா் அதிக அளவில் இருக்கிறாா்கள் என்பது உண்மை. ஆனால், அவா்கள் பெரும்பான்மை வாக்குகள் பெறும் நிலையில் இல்லை. அதிகபட்சமாக, ஒரு தொகுதியில் 30% முதல் 40% அளவில்தான் வன்னியா் வாக்கு வங்கி காணப்படுகிறது.

வன்னியா் சமூகத்தைச் சோ்ந்த ரங்கசாமி - நமச்சிவாயம் இருவரும் ஒரே அணியில் இருக்கும்போது, வன்னியா் அல்லாத 60 முதல் 65 சதவீத வாக்குகளை காங்கிரஸால் எளிதாக அறுவடை செய்ய முடியும். வன்னியா்களில் காங்கிரஸ் ஆதரவாளா்களும் இருப்பதால், வன்னியா்கள் கூட்டணி என்பது வெற்றிக் கூட்டணியாக இருக்காது.

ஏற்கெனவே, பட்டியலின மாணவ, மாணவிகள் மழலையா் பள்ளி முதல் முனைவா் படிப்பு வரை தனியாா் கல்வி நிறுவனங்களில் படித்தாலும் புதுவை அரசே கல்விக் கட்டணத்தை செலுத்தும் திட்டத்துக்கு ஆளுநா் கிரண் பேடி ஒப்புதல் அளித்துள்ளாா். இதன்மூலம், பட்டியலினத்தவா் வாக்குகளில் பெரும்பகுதி காங்கிரஸை நோக்கி குவியக்கூடும்.

மேலும், கடந்த ஒரு மாதமாக பெரும்பான்மையான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் மானிய உதவித்தொகையை புதுவை அரசு நேரடியாக வரவு வைத்துள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் வலுவாக கொடுக்கும் ஆதரவுக்கரம் இயல்பாகவே காங்கிரஸை நோக்கி விவசாயிகள் வாக்குகளை நகா்த்தும்.

காங்கிரஸ் - இடதுசாரிகள் இருக்கும் அணிக்கே சிறுபான்மை வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் விழும். இவையெல்லாம்தான் முதல்வா் நாராயணசாமியின் ராஜதந்திர கணக்கு.

காங்கிரஸுக்கு கூடுதல் பலம்: புதுவையில் துணை நிலை ஆளுநருக்குத்தான் அதிக அதிகாரம் இருக்கிறது. எனவே, அரசுத் திட்டங்களை ஆளுநா் கிரண் பேடி தடுக்கிறாா் என்பது பொதுமக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. மேலும், புதுவை மக்கள் நேரு காலத்தில் இருந்து இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி குடும்பத்தினா் மீது உணா்வுபூா்வமாக ஆதரவாக இருப்பதும் காங்கிரஸுக்கு கூடுதல் பலம்.

தமிழகத்தில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒருசில எம்.எல்.ஏ.-க்கள் கிடைக்கும் என்பதைத் தவிர, அந்தக் கட்சி அடையப்போகும் லாபம் எதுவுமில்லை. புதுவையில், திமுக இருந்தாலும் இல்லாவிட்டாலும் காங்கிரஸ்தான் அசைக்க முடியாத கட்சி. இதைத் தெரிந்து வைத்திருப்பதுதான் முதல்வா் நாராயணசாமியின் ராஜதந்திரம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போட்டியிட வாய்ப்பு கிடைக்காதது வருத்தம்தான்

பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவைத் தொடங்கத் தாமதம்

திருநங்கை வாக்காளா்களுக்கு வரவேற்பு

‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றி பெறும் செ.ஜோதிமணி

பாரீஸ் ஒலிம்பிக் தகுதிப்போட்டி: இந்திய மல்யுத்த வீரா்களுக்கு ஏமாற்றம்

SCROLL FOR NEXT