சிறப்புச் செய்திகள்

சாத்தியமாகுமா அதிமுக - அமமுக இணைப்பு?

ஜெபலின்ஜான்

எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக), அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) இணைப்பு சாத்தியமாகுமா என்ற கேள்வி தமிழக அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

தமிழக தேர்தல் களத்தில், குறிப்பாக காவிரி டெல்டா, தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் (பிறமலைக் கள்ளர், மறவர், அகமுடையார்) வாக்கு வங்கி கடந்த பல தேர்தல்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாகவே இருந்து வந்திருக்கிறது. திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, சிவகங்கை,  மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி,  தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 50 முதல் 60 தொகுதிகளில் முக்குலத்தோர் வாக்குகள் வெற்றி-தோல்வியை நிர்ணயம் செய்யும் அளவுக்கு அடர்த்தியாக உள்ளன.

தமிழகத்தில் பார்வர்டு பிளாக் கட்சி யை வழிநடத்திய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1957-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் 1.3 சதவீத வாக்குகளையும், 1984-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் நமது கழகத்தை தோற்றுவித்த முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் 2 சதவீத வாக்குகளையும் முக்குலத்தோர் அடர்த்தியாக உள்ள பகுதிகளில் பெற்றனர். 2001 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பு வரை முக்குலத்தோர் வாக்குகள் திமுக, அதிமுகவுக்கு பிரிந்தே பதிவாகின.

ஆனால், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் நிழல் அதிகார மையமாக சசிகலா உருவெடுத்த பின்னர், 2001 சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு படிப்படியாக முக்குலத்தோர் வாக்குகளில் பெரும் பகுதி அதிமுகவுக்கு ஆதரவாக விழுந்தது. சசிகலா சிறைக்குச் சென்றதும், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தன.

அப்போது எழுந்த கருத்துவேறுபாட்டால், சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி.தினகரன் தலைமையில் அமமுக உருவானது. ஜெயலலிதா தலைமையில் சசிகலா ஒருங்கிணைப்பில் ஒற்றுமையாகத் திரண்ட முக்குலத்தோர் மத்தியில் அமமுகவுக்கு செல்வாக்கு பெருகியது. இது மக்களவைத் தேர்தல் முடிவில் தெளிவாகப் பிரதிபலித்தது.

மக்களவைத் தேர்தல் முடிவுகளின்படி, வட தமிழகம், கொங்கு மண்டலத்தில் அமமுகவுக்கு போதிய ஆதரவு இல்லை என்பதும், தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டுமே இந்தக் கட்சிக்கு ஆதரவாக வாக்குகள் விழுந்துள்ளன என்பதும் தெளிவாகிறது.

அதிலும் குறிப்பாக முக்குலத்தோரில் கள்ளர், மறவர் அடர்த்தியாக வாழும் தொகுதிகளில் மட்டுமே கணிசமான வாக்குகளை அமமுக பெற்றது. அதன்படி, தஞ்சாவூர் (9.7%), திருச்சி (9.6%), மதுரை (8.4%), சிவகங்கை (11.3%), தேனி (12.2%), தூத்துக்குடி (7.7%), திருநெல்வேலி (5.98%), திண்டுக்கல் (5.4%), மயிலாடுதுறை (6.2%), நாகை (7%), ராமநாதபுரம் (13.3%), விருதுநகர் (10%), தென்காசி (9%) ஆகிய 13 மக்களவைத் தொகுதிகளில் மட்டுமே கணிசமான வாக்குகளைப் பெற்றது.

இவற்றை வைத்து கணக்கிடும்போது, முக்குலத்தோர் அதிகமாக வசிக்கும் 55 சட்டப் பேரவைத் தொகுதிகளில் சுமார் 50 தொகுதிகளில் மட்டுமே அமமுகவுக்கு செல்வாக்கு உள்ளது. இந்த சட்டப் பேரவைத் தொகுதிகளில் 7 முதல் 20 சதவீதம் வரை இந்தக் கட்சி வாக்குகளைப் பெற்றது. அதிலும் 10 சதவீதத்துக்கும் மேல் 24 தொகுதிகளில் மட்டுமே பெற்றுள்ளது. இவை தவிர, தமிழகத்தில் பிற பகுதிகளில் பாப்பிரெட்டிப்பட்டி (7.1%), வீரபாண்டி (8.1%), செய்யாறு (7.6%), விருத்தாசலம் (7.6%), கும்பகோணம் (7.6%) ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் மட்டுமே கணிசமான வாக்குகளைப் பெற்றது.

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தையும் மீறி, தினகரன் - சசிகலா மீதான தீவிர பற்றுதல் காரணமாக விழுந்தவைதான் இந்த வாக்குகள். சசிகலா அதிகாரத்தை இழந்தது, தங்களின் சமூகமே அதிகாரத்தை இழந்துவிட்டதாகக் கருதும் மனநிலை கொண்டவர்கள் ஒன்று திரண்டு வாக்களித்ததால் உருவானதுதான் அமமுக வாக்கு வங்கி.

கடந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்தால், அமமுக கணிசமாக வாக்குகளைப் பெற்ற மக்களவைத் தொகுதிகளில் மட்டும்தான் பிற தொகுதிகளைவிட திமுக குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அமமுக போட்டியிடாமல் இருந்திருந்தால், அந்தத் தொகுதிகளில் அமமுக பெற்ற வாக்குகள் திமுகவுக்கே சென்று வெற்றி வித்தியாசம் அதிகரித்திருக்கும்.

கொங்கு மண்டலம், வட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் 50 முதல் 60 சதவீத வாக்குகளைப் பெற்று திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அமமுக போட்டியிட்ட தென் மாவட்ட தொகுதிகளில் 40 முதல் 50 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று திமுக கூட்டணி வெற்றி பெற முடிந்தது. குறிப்பாக, தேனி, ராமநாதபுரம், மதுரை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்தது.

மோடி - எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்ய திமுக - காங்கிரஸ் கூட்டணியுடன், அமமுகவும் இந்தத் தொகுதிகளில் பங்குதாரராக இருந்ததால்தான், திமுக கூட்டணியின் வாக்கு வித்தியாசம் இவற்றில் குறைந்துள்ளது என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.

அதிமுக கூட்டணியில் தேனி தொகுதியில்கூட ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றதற்கு ஓ.பன்னீர்செல்வத்தின் சசிகலா எதிர்ப்பு அரசியல்தான் காரணம். பெரும்பான்மையான முக்குலத்தோர் வாக்குகளை அமமுக பிரித்த நிலையில்,  பிரதமர் மோடி, ஜான் பாண்டியன், புதிய தமிழகம் நிறுவனர் கிருஷ்ணசாமி, நடிகர் சரத்குமார், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரை தேனி தொகுதியில் பலமுறை பிரசாரம் செய்ய வைத்து சிறிய எண்ணிக்கை ஜாதிய வாக்குகளை ஒன்று திரட்டிய பன்னீர்செல்வத்தின் நுட்பமான அரசியல் திறமையால்தான் அந்தத் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது.

மக்களவைத் தேர்தலின்போது எந்த மனநிலையில் இந்த வாக்கு வங்கி திரண்டதோ, அதைவிடச் சற்று கூடுதலாக எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அமமுக வாக்கு வங்கி நிச்சயம் மீண்டும் திரளக்கூடும். சசிகலா விடுதலையாகி வருவது அமமுகவின் வாக்கு வங்கியை மேலும் உயர்த்தக்கூடும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்து.

சுமார் 55 தொகுதிகளில் அமமுக வாக்கு வங்கி அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அதிமுக - அமமுக இணைப்புக்கு பாஜக முயற்சி செய்வதாகவும், விடுதலைக்குப் பின்னர் அதிமுகவில் சசிகலா இணைவார் என்றும் தொடர்ந்து ஊகங்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும், தில்லிக்குச் சென்றிருந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, இந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

சசிகலா அதிமுக உறுப்பினரே இல்லை என்றும், அவர் அதிமுகவில் இணைய 100 சதவீதம் வாய்ப்பில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்தார். பிரதமர் மோடி, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்தித்த பின்னர் இவ்வாறு திட்டவட்டமாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வரின் அறிவிப்புக்குப் பின்னால் நுட்பமான அரசியல் இருப்பதாகத் தெரிகிறது. தொண்டராக, கிளைச் செயலராக, மாவட்டச் செயலராக,  மாநில நிர்வாகியாக, முதல்வராக வளர்ந்து நிற்கும் எடப்பாடி கே.பழனிசாமிக்கு களத்தில் சமூக ரீதியாக வாக்குகள் எவ்வாறு நகரும், பரிமாற்றமாகும் என்பது மிகத் துல்லியமாகத் தெரிந்திருப்பதால்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.

கடந்த மக்களவைத் தேர்தலில் அமமுகவுக்கு செல்வாக்கு மிகுந்த தொகுதிகளில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு விழுந்த வாக்குகளின் தன்மை முற்றிலும் வேறுபாடானது. குறிப்பாக, அதிமுகவுக்கு டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் முக்குலத்தோருக்கு எதிர்த்தன்மை கொண்ட முத்தரையர்கள், முத்துராஜா, தென் மாவட்டங்களில் மறவர்களுக்கு எதிர்நிலை கொண்ட இந்து தேவேந்திரகுல வேளாளர்கள், நாடார், வலையர் சமுதாயங்களைச் சேர்ந்தவர்களில் பெரும் பகுதியினர் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர் என்பது மக்களவைத் தேர்தல் முடிவை ஆய்வு செய்தால் தெரியும். 

தற்போது இந்த இரு கட்சிகளும் இணைந்தால், அமமுக வாக்குகள் அதிமுகவுக்கு முழுமையாகப் பரிமாற்றம் ஆகுமா?, அமமுகவை இணைத்தால் 2019-இல் அதிமுகவுக்கு தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் விழுந்த முத்தரையர், தேவேந்திரகுல வேளாளர், நாடார் சமுதாய வாக்குகள் அப்படியே தங்குமா? அல்லது வெளியேறிவிடுமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகிவிடும்.

தற்போதைய அதிமுக வாக்கு வங்கியைவிட, அதிமுக - அமமுக இணைப்பால் வாக்கு வங்கி உயர்ந்தால் லாபம், குறைந்துவிட்டால் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு மிகப் பெரிய இழப்பாகிவிடும். அரசியலில் இரண்டும், இரண்டும் ஐந்தாகவும் உயரும், மூன்றாகவும் குறையும் என்பது கட்சியின் அடிமட்டத்தில் இருந்து முதல்வராக உயர்ந்து நிற்கும் எடப்பாடி கே.பழனிசாமிக்கு மிகவும் நுட்பமாகத் தெரிந்திருக்கும். முதல்வரின் அதிரடி அறிவிப்புக்குப் பின்னர் இருக்கும் அரசியல் சூட்சுமம் இதுதான்.

இந்தத் தேர்தலைப் பொருத்தவரை அதிமுக, அமமுக தனித்தனிப் பாதைகளில் பயணிப்பதுதான் இருவருக்கும் கைகொடுக்கும். ஆனால், எதிர்காலத்தில் சோனியா காந்தி - சரத் பவார், சோனியா காந்தி - மம்தா பானர்ஜி, கருணாநிதி - வைகோ போல கூட்டணியாகச் செயல்படும் அரசியல் சூழ்நிலை உருவாகலாம். அதுவும் ஒருசில தேர்தல்களை தனித்தனியாகச் சந்தித்த பின்னர்தான் கூட்டணி என்பது சாத்தியமாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் அளவில் மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் கொலை?

தக் லைஃப் படப்பிடிப்பில் சிம்பு!

SCROLL FOR NEXT