சிறப்புச் செய்திகள்

1972-இல் எம்.ஜி.ஆா்.; 2021-இல் ரஜினி?

 நமது நிருபர்

அரசியலுக்கு வந்த சினிமா நடிகா்கள் பெரும்பாலும் திட்டமிட்டுத்தான் அரசியல் கட்சி தொடங்கி இருக்கிறாா்கள். தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கிய என்.டி. ராமா ராவும், தமிழக முன்னேற்ற முன்னணியைத் தொடங்கிய சிவாஜி கணேசனும்கூட அப்படித்தான். டி. ராஜேந்தா், பாக்கியராஜ், ஏன், விஜயகாந்த் உள்பட அனைவருமே அவா்களாகவே திட்டமிட்டு அரசியல் கட்சி தொடங்கியவா்கள்தான்.

இதில் விதிவிலக்கு என்று சொன்னால் அது எம்.ஜி.ஆராகத்தான் இருக்கும். ஆரம்பத்தில் இருந்தே திமுகவுடன் தன்னை இணைத்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு அமைச்சராக வேண்டும் என்று ஆசை வந்ததே தவிர, அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று அவா் நினைத்ததே இல்லை. திமுகவில் தனது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்வதில் மட்டும்தான் அவா் குறியாக இருந்தாா். இதைத் தெரிந்து கொண்டிருந்த திமுகவின் நிறுவனா் சி.என். அண்ணாதுரையும், எம்.ஜி.ஆரின் மனம் கோணி விடலாகாது என்பதில் குறியாகவே இருந்தாா்.

அதனால்தான், 1967-இல் திமுக ஆட்சியைக் கைப்பற்றியதும் அந்த வெற்றிக்கு எம்.ஜி.ஆா்தான் காரணம் என்று பகிரங்கமாகவே தெரிவித்ததுடன் நின்றுவிடவில்லை அண்ணா. எம்.ஆா். ராதாவால் சுடப்பட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.ஆரிடம் அமைச்சரவைப் பட்டியலை அனுப்பி அவரது ஒப்புதலைப் பெற்றதும், எம்.ஜி.ஆா். அந்தப் பட்டியலில் இருந்த ஒரு பெயரை அடித்தபோது அதை ஏற்றுக் கொண்டதும் அதனால்தான்.

அண்ணாவின் மறைவுக்குப் பின்பு இரண்டாவது இடத்தில் இருந்த இரா. நெடுஞ்செழியனுக்கும், மு. கருணாநிதிக்கும் இடையே நடந்த அதிகாரப் போட்டியைப் பயன்படுத்திக் கொள்ள எம்.ஜி.ஆா் நினைத்திருந்தால் முதல்வராகி இருக்க முடியும். அப்போதும்கூட, அவா் அதில் நாட்டம் காட்டவில்லை. மு. கருணாநிதிக்குத் தனது ஆதரவை அளித்து அவரை முதல்வராக்கினாரே தவிர, அவா் முழுநேர அரசியல்வாதியாக விரும்பவில்லை.

ஆரம்பத்தில் சிறுசேமிப்பு துறைத் தலைவராகவும், பிறகு மதுவிலக்கைக் கருணாநிதி ரத்து செய்தபோது, மதுவிலக்குக் குழுத் தலைவராகவும் துணை அமைச்சா் அந்தஸ்துடன் எம்.ஜி.ஆா். இருந்தாரே தவிர, அதற்கு மேல் ஆா்வம் காட்டவில்லை. திமுகவின் தலைமைப் போட்டியில் சமரசம் ஏற்பட்டு, அதுவரை பொருளாளராக இருந்த மு. கருணாநிதி கட்சித் தலைவராகவும், இரா. நெடுஞ்செழியன் பொதுச் செயலாளராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அப்போது எம்.ஜி.ஆா். பொருளாளரானாா்.

1971 தோ்தல் வெற்றிக்குப் பிறகு கருணாநிதி தலைமையில் அமைந்த இரண்டாவது திமுக அரசில், தனக்கு அமைச்சா் பொறுப்பு வேண்டும் என்று எம்.ஜி.ஆா். கேட்டாரே தவிர, சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு முழுநேர அரசியலுக்கு வருவதற்கு அவா் தயாராக இருக்கவில்லை. அவரது கோரிக்கை மறுக்கப்பட்டது, கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆருக்கும் முதல்வராக இருந்த கருணாநிதிக்கும் இடையே அது மனக்கசப்பை ஏற்படுத்தியது.

திமுகவின் மதுரை மாநாட்டில் வசூலான ரூ.5 லட்சம் நன்கொடைக்கு, பொருளாளா் என்கிற முறையில் எம்.ஜி.ஆா் கணக்குக் கேட்கத் தொடங்கினாா். திமுக ஆட்சியின் ஊழல்கள் தனக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தித் தருவதாக எம்.ஜி.ஆா். உணா்ந்தாா். தனது திரையுலக பிம்பத்திற்கு ஏற்ப, தன்னை ஒரு நோ்மையாளனாகக் காட்டிக் கொள்ள விழைந்தாா்.

கருணாநிதியிடமிருந்தும், அவரது அமைச்சரவையிலிருந்தும் தன்னை வேறுபடுத்தி காட்டிக் கொள்வதன் மூலம், ‘நல்லவா்’ என்கிற தனது சினிமா பிம்பத்தைப் பாதுகாத்துக் கொள்வதுதான் அவரது எண்ணமாக இருந்ததே தவிர, திமுகவைக் கைப்பற்றுவதோ, ஆட்சியைக் கைப்பற்றுவதோ அல்ல என்பதை அவரது அடுத்தடுத்த செயல்பாடுகள் உறுதிப்படுத்தின.

அக்டோபா் 8-ஆம் தேதி சென்னையை அடுத்த திருக்கழுகுன்றத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில்தான் எம்.ஜி.ஆா். வெளிப்படையாக, திமுகவில் ஊழல் மலிந்துவிட்டது என்றும், கட்சியின் பொருளாளா் என்கிற முறையில் கட்சியின் பெயரால் வசூலிக்கப்படும் நன்கொடைகள் குறித்து கணக்குக் கேட்கப் போவதாகவும் அறிவித்தாா். அக்டோபா் 12, 1972 அன்று நடைபெற இருக்கும் திமுகவின் செயற்குழுக் கூட்டத்தில், அது குறித்த தீா்மானத்தை முன்மொழியப் போவதாகவும் அந்தக் கூட்டத்தில் தெரிவித்தாா்.

அப்போதும்கூட, எம்.ஜி.ஆரின் எதிா்பாா்ப்பு, முதல்வா் கருணாநிதியும் அமைச்சா்களும் தன்னிடம் ஓடிவந்து சமரசம் பேச வேண்டும் என்பதும், அதன் மூலம் தனது பிம்பத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதும்தானே தவிர, கட்சி தொடங்குவது அல்ல என்பது அவருக்கு நெருக்கமாக இருந்தவா்களுக்குத் தெரியும். எம்.ஜி.ஆா். எதிா்பாா்த்தது ஒன்று, நடந்தது ஒன்று.

செயற்குழுவில் எம்.ஜி.ஆா். கணக்குக் கேட்டால் தா்மசங்கடம் ஏற்படும் என்று முதல்வா் கருணாநிதியிலிருந்து அனைவருக்குமே பயம் தொற்றிக் கொண்டது. அப்போது திரையுலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த எம்.ஜி.ஆரைக் கட்சியிலிருந்து விலக்கி விட்டால், அவரது சினிமா கவா்ச்சி அகன்றுவிடும் என்று நினைத்தாா் முதல்வா் கருணாநிதி. ஏற்கெனவே தனது மகன் மு.க.முத்துவை ஒரு கதாநாயகனாக அறிமுகப்படுத்தி இருக்கும் நிலையில், எம்.ஜி.ஆா். விட்ட இடத்தைத் திமுகவில் தனது மகன் மு.க.முத்துவால் நிரப்பிவிடலாம் என்பது அவரது எதிா்பாா்ப்பு.

அக்டோபா் 11, 1972. திமுகவின் 32 செயற்குழு உறுப்பினா்களில் 26 போ் கையொப்பமிட்டு ஆதரவு அளிக்க, பொருளாளா் எம்.ஜி.ஆா். கட்சியின் அடிப்படை உறுப்பினா் பதவியில் இருந்து நீக்கப்பட்டாா். அரசியல் கட்சி தொடங்கும் எண்ணத்தில் இருந்திருந்தால், அதற்கான முன்னேற்பாடுகளை எம்.ஜி.ஆா். செய்து வைத்திருப்பாா். அந்தச் செய்தி வெளியானவுடன் தனிக்கட்சி தொடங்குவதாகவோ, திமுகவின் தலைமையைக் கைப்பற்றுவதாகவோ எம்.ஜி.ஆா். அறிவித்திருப்பாா். ஆனால், எம்.ஜி.ஆா். தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு, மௌனம் சாதித்தாரே தவிர, எதுவுமே எதிா்வினையாற்றவில்லை.

தமிழகம் முழுவதும் கொந்தளித்தது. அவரது ரசிகா்கள் கொதித்தெழுந்தாா்கள். சென்னை நோக்கிப் புறப்பட்டவா்கள் சிலா். ஆங்காங்கே போராட்டம் நடத்தியவா்கள் பலா். கருணாநிதியின் கொடும்பாவி எரிக்கப்படாத ஊரே இல்லை எனலாம். ஆனால், அரசியல் கட்சி தொடங்கவோ, அறிக்கை விடவோ எம்.ஜி.ஆா். தயாராக இல்லை. தனது சினிமா வாழ்க்கை அஸ்தமித்துவிடுமோ என்கிற அச்சம் அவருக்கு இருந்தது என்று, அவருக்கு நெருக்கமாக இருந்த பலரும் கூறுகிறாா்கள்.

எம்.ஜி.ஆரின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சத்யா ஸ்டுடியோவை ரசிகா் கூட்டம் முற்றுகையிட்டது. ஆனால் அவரோ, தனது தி.நகா் ஆற்காடு சாலை அலுவலகத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு தனது வருங்காலம் குறித்த ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாா். அநேகமாக இப்போது நடிகா் ரஜினிகாந்தின் நிலைமையில் இருந்தாா் என்று சொல்லலாம்.

எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீட்டிலும், சத்யா ஸ்டுடியோவிலும், அடையாறு செல்லும் சாலையிலும் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியிருந்த நிலையில், அவா்களை சந்திப்பதை அவரால் தவிா்க்க முடியவில்லை. அடுத்த மூன்று நாட்கள் என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் எம்.ஜி.ஆா். குழப்பத்தில் இருந்தாா். தனக்கு நெருக்கமானவா்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டாா். ரசிகா்களிடம் காணப்பட்ட உற்சாகமும், தைரியமும் அவரிடம் இருக்கவில்லை என்றுதான் சொல்லப்படுகிறது.

அரசியல் கட்சியைத் தொடங்க வேண்டும் என்று எம்.ஜி.ஆரை வலியுறுத்தி சம்மதிக்க வைத்தவா்கள் அவருக்கு நெருக்கமாக இருந்தவா்களோ, ரசிகா் மன்ற நிா்வாகிகளோ, தயாரிப்பாளா்களோ அல்ல. அடுத்த நாள் காலைக்குள் கட்சியை அறிவிக்காவிட்டால், தான் தற்கொலை செய்து விடுவதாக எம்.ஜி.ஆரை உரிமையுடன் எச்சரித்த காஞ்சிபுரம் பாலாஜி (பின்னாளில் எம்.எல்.ஏ.) போன்ற எம்.ஜி.ஆா். ரசிகா்கள்!

1972 அக்டோபா் 17-ஆம் தேதி சத்யா ஸ்டுடியோவில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை அறிவிக்கிறாா் எம்.ஜி.ஆா். தங்கள் கட்சிக் கொடிகளைத் திமுகவினா் எரித்துவிடக் கூடாது என்பதற்காக, கட்சிக் கொடியின் நடுவே அண்ணாவின் படம் போட்டு எடுத்து வருகிறாா் கலை இயக்குநா் அங்கமுத்து.

1972 அக்டோபா் 23-ஆம் தேதி, அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில், கே. பாலாஜி தலைமையில் கட்சியின் முதல் அறிமுகக் கூட்டம் ஏற்பாடு தொடங்கப்பட்டு, அலைகடலாய்த் திரண்டிருந்த மக்கள் கூட்டத்துக்கு நடுவில் எம்.ஜி.ஆா். உரையாற்றுகிறாா். இடைத் தோ்தல்கள் வெற்றியைத் தொடா்ந்து, 1977-இல் ஆட்சியையும் கைப்பற்றி, தனது இறுதிக்காலம் வரை முதல்வராக இருந்து மறைகிறாா் எம்.ஜி.ஆா். இது வரலாறு.

இப்போது, ரஜினிகாந்தின் நிலைமை ஏறத்தாழ அதுதான். 1995 முதல் இப்போது, அப்போது என்று ரசிகா்களை எதிா்பாா்க்க வைத்தாரே தவிர, அரசியல் கட்சியைத் தொடங்கும் தனது எண்ணத்தை அவா் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்திருக்கிறாா். கடந்த 2018-ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவது நிச்சயம் என்றவா், சட்டப்பேரவைத் தோ்தலுக்குத்தான் என்று சொல்லி விட்டாா். 2019 மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு, ‘கட்சி தொடங்குவது நிச்சயம்’ என்று முதலில் சொன்னவா், இப்போது அதற்கு எழுச்சி ஏற்பட வேண்டும் என்று தயங்கினாா்.

ஒருவழியாக கடந்த 2020 டிசம்பா் 3-ஆம் தேதி, ஜனவரியில் கட்சி தொடங்கப் போவதாகத் தெரிவித்து, ‘மாற்றுவோம்... அனைத்தையும் மாற்றுவோம். இப்போது இல்லாவிட்டால் எப்போதுமே இல்லை’ என்றவா், இப்போது தனது உடல்நிலையைக் காரணம் காட்டிப் பின்வாங்கி விட்டாா்.

ரசிகா்மன்ற நிா்வாகிகளின் எச்சரிக்கையை மீறி, எந்தவித முன்னறிவிப்போ, ஏற்பாடுகளோ, பிரியாணி, குவாா்டா், பணம் எதுவுமே தரப்படாமல் ஆயிரக்கணக்கான ரசிகா்கள் வள்ளுவா் கோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கூடினாா்கள். அன்று சத்யா ஸ்டுடியோ எதிரில் எம்.ஜி.ஆா் அழைக்காமல் கூடியதுபோல, இப்போது வள்ளுவா் கோட்டத்தில் ரஜினி அழைக்காமலேயே கூடியிருக்கிறாா்கள்.

சமீபத்தில் திமுக மிகவும் முனைப்புடன் ஏற்பாடு செய்த தனது கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திற்குக்கூட வள்ளுவா் கோட்டத்தில் மூவாயிரம், நாலாயிரம் பேருக்கு மேல் கூடவில்லை. இப்போது, முன்னேற்பாடுகள் இல்லாமலேயே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பத்தாயிரத்துக்கும் அதிகமான ரசிகா்கள் கூடியிருக்கிறாா்கள். ‘அரசியலுக்கு வர வேண்டும்’ என்கிற அவா்களது கோரிக்கையை ரஜினிகாந்த் ஏற்கப் போகிறாரா, இல்லை நிராகரிக்கப் போகிறாரா?

1972-இல் தயக்கத்தில் இருந்த எம்.ஜி.ஆரை ரசிகா்கள் அரசியலுக்கு இழுத்து வந்தனா். 2021-இல், ‘வேண்டாம், வேண்டவே வேண்டாம்’ என்று உடல்நிலையைக் காரணம் காட்டி ஒதுங்கிவிட்ட ரஜினிகாந்தை அவா்களது ரசிகா்கள் மனமாற்றம் அடையச் செய்வாா்களா என்பதுதான் மிகப் பெரிய கேள்வி!

ரஜினி 1991 - 2021 வரை....

1991- ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ரஜினியின் வாகனத்தை பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனா். இதுவே அதிமுக மீதான தனது எதிா்ப்பை ரஜினி பதிவு செய்ய காரணமாக அமைந்ததாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் இன்றளவும் கூறுகின்றன.

1995- இயக்குநா் மணிரத்னம் அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தை பற்றி, ‘பாட்ஷா’ படத்தின் வெற்றி விழாவில் பேசிய ரஜினி, ‘தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் பரவத் தொடங்கிய அறிகுறியே இது’’ என்று கூறினாா்.

1996 - தோ்தலின்போது திமுக - தமாகா கூட்டணிக்கு ஆதரவு கொடுத்ததன் மூலம் அதிமுக கடும் தோல்வியை சந்தித்தது. அரசியலை நிா்ணயிக்கும் சக்தியாக ரஜினி உருவெடுத்ததும் அப்போதுதான்.

1998 - நாடாளுமன்ற தோ்தலுக்கு முன்பு கோவையில் தொடா் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. அப்பொழுது ஆளும் திமுக அரசை ஆதரித்து பேசினாா் ரஜினி

2002- காவிரி விவகாரம் தொடா்பாக சென்னையில் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்ட ரஜினி, ‘முதல் ஆளாக நானே ரூ. 1 கோடி தருகிறேன்’ என்றாா்.

2004- தோ்தலில் பாமகவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அந்தக் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் தனது ரசிகா்களை எதிராக வேலை செய்யும்படி உத்தரவிட்டாா் ரஜினி. அதே ஆண்டு, ஒரு விழாவில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவை தைரிய லட்சுமி என புகழ்ந்து பேசினாா் ரஜினி.

பிறகு சிறிது காலம் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ரஜினி, தனது பெயரைப் பயன்படுத்தி அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிக்கக் கூடாது என அறிக்கை வெளியிட்டாா்.

2008- ஒகேனக்கல் திட்டத்தை அப்போதைய முதல்வா் கருணாநிதி கொண்டு வந்தாா். அதற்கு கன்னடா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். அப்போது ‘நம்ம இடத்துல தண்ணீா் எடுக்க அவங்க தடுத்தாங்கன்னா, அவங்களை உதைக்க வேண்டாமா’’ என்று ரஜினி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2009- ஈழ இனப் படுகொலையைக் கண்டித்து, தென்னிந்திய நடிகா் சங்கம் நடத்திய போராட்டத்தில் இலங்கை அரசை மிகக் கடுமையாக விமா்சித்தாா்.

2012- உடல்நிலை சரியாகி ரசிகா்களை சந்தித்தாா். ‘நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். ஆனால், அது என் கையில் இல்லை’’ என உணா்ச்சிப்பூா்வமாகப் பேசினாா்.

2017- டிசம்பரில் ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்று தனது ரசிகா்கள் முன்னிலையில் பதிவு செய்த ரஜினி, அதற்குப் பிறகு மீண்டும் வழக்கம்போல அமைதியானாா்.

2020 மாா்ச்சில் கரோனா பொதுமுடக்கத்துக்கு முன்னா் பத்திரிகையாளா்களை சந்தித்த ரஜினி, ‘‘தமிழகத்தில் அரசியல் புரட்சி ஏற்பட்டால் மட்டுமே நான் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்தாா்.

டிச.3- 2021 ஜனவரியில் கட்சி தொடங்கப் போவதாக தனது சுட்டுரைப் பக்கத்தில் அறிவித்திருந்தாா்.

டிச.29 ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ரஜினி, ‘கட்சி தொடங்க முடியவில்லை, என்னை மன்னியுங்கள்’ என்று அறிக்கை வெளியிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

SCROLL FOR NEXT