சிறப்புச் செய்திகள்

நவீன காலத்திலும் மவுசு குறையாத பலூன்கள்: தற்கால சிறுவர்களுக்கும் சிறந்த விளையாட்டுப் பொருளாக திகழ்கிறது

2nd Jan 2021 11:37 AM | பெரியார்மன்னன்

ADVERTISEMENT


வாழப்பாடி: அதிநவீன விளையாட்டு சாதனங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் எளிமையாக கிடைக்கின்ற இக்காலத்திலும்,  பழமையான விளையாட்டு பொருள்களில் ஒன்றான பலூன்களை வாங்கி ஊதி விளையாடி பொழுது போக்குவதில்  தற்கால சிறுவர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பொங்கல், தீபாவளி, புத்தாண்டு கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகை தினங்கள், கோவில் திருவிழாக்கள் என்றாலே, அனைத்து குழந்தைகளுக்கும் முதலில் நினைவுக்கு வந்தது பலூன்கள் என்றால் மிகையல்ல.

மிக மலிவான விலையில், அனைத்துப் பகுதிகளிலும் எளிதாகக் கிடைக்கும் பல வண்ண பலூன்களை வாங்கி,  வாயில் வைத்து காற்று ஊதி வைத்துக் கொண்டு ஆடிப்பாடி சிறுவர்-சிறுமியர் பொழுதுபோக்கி மகிழ்ந்தனர். 

தற்போது நவீன கணிப்பொறி காலத்தில், மின் கலன்களில் இயங்கும் ரிமோட் கண்ட்ரோல் பொம்மைகள்,  விளையாட்டு பொருள்கள், வீடியோ கேம்கள், செல்லிடப்பேசி இணையவழி விளையாட்டு சாதனங்களும் பயன்பாட்டிற்கு வந்திருந்தாலும், இன்றளவிலும் பலூன்களை கண்டால் வாங்கி  காற்று ஊதி வைத்துக் கொண்டு, ஆடிப்பாடி மகிழ்ந்து பொழுதுபோக்குவதில் தற்கால சிறுவர்களும் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

ADVERTISEMENT

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் இத்தருணத்தில், சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி கிராமங்களில்,  ஏராளமான வியாபாரிகள் பலூன்களை  வாங்கி காற்று ஊதி தெருத்தெருவாக சென்று கூவி கூவி விற்பனை செய்து வருகின்றனர்.

கிராமப்புற சிறுவர்-சிறுமியர் பலூன்களை காசு கொடுத்து வாங்கி காற்று ஊதி ஆடிப்பாடி மகிழ்ந்து வருகின்றனர்.

இதனால் பழமையான விளையாட்டு பொருட்களில் ஒன்றான பலூன்கள், வாழப்பாடி பகுதி கிராமங்களில் இன்றளவும் மவுசு குறையாமல் விற்பனையாகி வருகிறது.

இதுகுறித்து அயோத்தியா பட்டணத்தைச் சேர்ந்த பலூன் வியாபாரி  முருகன் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளாக பலூன் விற்பனை செய்து வருகிறேன். சேலத்தில் பலூன்களை மொத்தமாக கொள்முதல் செய்து, வாயில் ஊதி காற்று நிரப்பி, கிராமப்புறங்களில் தெருத்தெருவாக சென்று விற்பனை செய்து வருகிறேன்.

தற்போது பல்வேறு நவீன விளையாட்டு சாதனங்கள் குழந்தைகளுக்கு எளிதாக கிடைத்து வரும் நிலையிலும், தற்கால குழந்தைகளும் பலூன்களை விரும்பி வாங்கி காற்று ஊதி விளையாடி மகிழ்வது தொடர்ந்து வருவதால், இன்றளவிலும் மவுசு குறையாமல் பலூன்கள் விற்பனையாகி வருகிறது.

நாள் ஒன்றுக்கு ரூ.500 வரை வருவாய் கிடைத்து வருவதால் மாற்றுத் தொழில் தேடாமல் பலூன் விற்பனையை தொடர்ந்து வருகிறேன் என்றார்.

 

Tags : balloons modern times
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT