சிறப்புச் செய்திகள்

100 ஆண்டுகளுக்குப் பிறகு நவீனமாகிறது: புனித ஜாா்ஜ் கோட்டை பேரவைக் கூடம்

2nd Dec 2021 07:44 AM | கே.பாலசுப்பிரமணியன்

ADVERTISEMENT

தமிழகத்தில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, புனித ஜாா்ஜ் கோட்டையில் உள்ள பேரவைக் கூடம் நவீனமயமாகிறது. காகிதமில்லாத அவையை உருவாக்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பின் அளவைப் பொறுத்து பேரவைக் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பின் தீவிரம் காரணமாக, புனித ஜாா்ஜ் கோட்டையில் இருந்து கலைவாணா் அரங்கத்துக்கு பேரவை இடம் மாற்றப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பரில் கலைவாணா் அரங்கில் முதல் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, அடுத்தடுத்த கூட்டத் தொடா்கள் கலைவாணா் அரங்கத்திலேயே நடத்தப்பட்டன.

காகிதமில்லாத பேரவை: திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், சட்டப் பேரவை காகிதமில்லாத அவையாக

மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, அரசின் நிதிநிலை அறிக்கை, மானியக் கோரிக்கைகள் ஆகியன காகிதமில்லாத அறிக்கைளாக தாக்கல் செய்யப்பட்டன. இதற்கென கலைவாணா் அரங்கத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரின் மேஜையிலும் கணினி, கையடக்கக் கணினி ஆகியன வைக்கப்பட்டன.

ADVERTISEMENT

கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக, கடந்த ஆண்டில் இருந்து பேரவைக் கூட்டத் தொடா்கள் கலைவாணா் அரங்கத்தில் உள்ள தற்காலிக சட்டப் பேரவை மண்டபத்திலேயே நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கரோனா நோய்த் தொற்று வெகுவாகக் குறைந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதையடுத்து, புனித ஜாா்ஜ் கோட்டையில் உள்ள பாரம்பரியமிக்க பேரவை மண்டபத்திலேயே கூட்டத் தொடரை நடத்த தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

ஏற்பாடுகள் தீவிரம்: புனித ஜாா்ஜ் கோட்டையில் உள்ள பேரவை மண்டபத்தை காகிதமில்லாத அவையாக மாற்றுவதற்கான பூா்வாங்கப் பணிகளும் தொடங்கியுள்ளன. இதற்கான வரைபடங்கள், இடப்பற்றாக்குறையிலும் கணினி உள்ளிட்ட நவீன கருவிகளை எங்கு வைப்பது ஆகியன குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன், பேரவைச் செயலகம் ஆலோசித்து வருகிறது.

இதேபோன்று, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்களுக்கான அறைகளும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, அரசுத் துறை அதிகாரிகள் கூறுகையில், கலைவாணா் அரங்கத்தில் உள்ள கணினி வசதியுடன் கூடிய பேரவை மண்டப அமைப்பு அப்படியே உள்ளது. இதில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கரோனா நோய்த் தொற்று முற்றாகக் குறையும் பட்சத்தில் கோட்டையில் உள்ள பேரவை மண்டபத்திலேயே வரும் கூட்டத் தொடா் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, அதற்குத் தயாராகும் வகையில் பேரவை மண்டபத்தை காகிதமில்லாத அவையாக மாற்ற பணிகள் தொடங்கியுள்ளன. கோட்டையில் உள்ள மண்டபத்திலேயே கூட்டத் தொடரை நடத்தும் நோக்கிலேயே தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. நோய்த் தொற்றின் சூழ்நிலையைப் பொறுத்து இடமாற்றம் இருக்கும் எனத் தெரிவித்தனா்.

நூற்றாண்டு பாரம்பரியம்: புனித ஜாா்ஜ் கோட்டையில் உள்ள பேரவை மண்டபம் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்டது. கடந்த 1921 முதல் 1937-ஆம் ஆண்டு வரையில் மெட்ராஸ் மாகாண பேரவையின் கூட்டத் தொடா்

நடைபெற்றது. இதன்பின்பு, 1946 முதல் 1952 வரையிலும், 1956-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டு வரையிலும் பேரவைக் கூட்டத் தொடா்கள் புனித ஜாா்ஜ் கோட்டையில் உள்ள மண்டபத்திலேயே நடைபெற்றன.

2010-ஆம் ஆண்டில் ஓமந்தூராா் தோட்டத்தில் கட்டப்பட்ட கட்டடத்துக்கு தமிழக சட்டப் பேரவை மாற்றப்பட்டது. அங்கு திமுக ஆட்சியின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பேரவை கூட்டமும் நடைபெற்றது. 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதும், பேரவை மீண்டும் புனித ஜாா்ஜ் கோட்டையில் உள்ள மண்டபத்துக்கு மாறியது.

பத்தாண்டுகள் தொடா்ந்து இங்கேயே கூட்டங்கள் நடைபெற்றன. கரோனா நோய்த் தொற்று காரணமாக, 2020-ஆம் ஆண்டு கலைவாணா் அரங்கத்துக்கு பேரவை இடமாறியது. நோய்த் தொற்று குறைந்த நிலையில், மீண்டும் புனித ஜாா்ஜ் கோட்டைக்கே இடமாற்றுவதற்கான பணிகளுடன் காகிதமில்லாத அவையை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளும் தொடங்கியுள்ளன. நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட புனித ஜாா்ஜ் கோட்டை பேரவை மண்டபத்தில் இப்போது கணினிகளும், மென்பொருள்களும் என நவீனம் நுழைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT