சிறப்புச் செய்திகள்

சுகம் தரும் சித்த மருத்துவம்: கொழுத்த உடலுக்கு உதவுமா ‘கொள்ளு’?

1st Dec 2021 12:52 PM | மரு.சோ.தில்லைவாணன், அரசு சித்த மருத்துவர்

ADVERTISEMENT

 

காலையில் அரை மணி நேரம் நடை பயிற்சி, மாலையில் அரை மணி நேரம் நடைபயிற்சி என்று இவ்வாறு நடையாய் நடப்பது உடல் பருமனை குறைக்கவே. உணவு கட்டுப்பாடு, பேலியோ போன்ற பல்வேறு உணவு முறை மாற்றங்கள், இவற்றோடு ‘உடல் பருமனை குறைக்க’ என்று பார்க்கும் விளம்பர பொருள்கள், மருந்து பொருள்கள் அனைத்தையும் முயற்சி செய்து சட்டைப்பையில் வைத்திருக்கும் பணப்பை இளைக்குமே தவிர, உடல் இளைத்தவாறு பலருக்கு தெரியாது.

உடல் பருமனுக்கு ஏன் இவ்வளவு மெனக்கெடல்? என்று எண்ணிப் பார்த்தால், பல்வேறு தொற்றா நோய்களான சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம், மாரடைப்பு, இருதய நோய்கள் போன்ற பல நோய்களை நட்பாக்கி நம்மிடையே கொண்டு வந்து சேர்க்கும் ஆபத்தான காரணி தான் இந்த உடல் பருமன். 

மாறி வரும் உணவு பழக்க வழக்கமும், வாழ்வியல் நெறி முறைகளும் இந்த உடல் பருமன் என்ற தொற்றா நோயை அழையா விருந்தாளியாக்கி வரவேற்கும்.

ADVERTISEMENT

இரவில் முன்னதாக படுக்கைக்கு செல்வதும், அதிகாலையில் எழுவதுமாக பழகி வந்த நம் முன்னோர்கள் உடல் பருமனுக்கும், பிற தொற்றா நோய்களுக்கும் இடம் கொடுக்காமல் வாழும் வரை ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். 

டாக்டர் நான் இரவு பணிக்கு செல்கிறேன், நான் சாப்பிடறதே நடு இரவு 12 மணிக்கு மேல் தான் என்பவருக்கும், என் தூக்கமே பகலில் மட்டும் தான் என்பவருக்கும் உடலில் இயல்பாக இயங்கும் சர்கேடியன் ரிதம் மாறி, தூக்க கோளாறு காரணமாகவும் ஏற்படும் உடல் பருமன், டிஎன்ஏ பாதிப்பையும் ஏற்படுத்தி, அதனை நம் உடல் சரி செய்யும் காலத்தை தாமதமாக்கும். இது பல்வேறு தொற்றா நோய்களுக்கு முக்கியமாக மாரடைப்புக்கும், நீரிழிவுக்கும் காரணமாகும்.

இதையும் படிக்க | சுகம் தரும் சித்த மருத்துவம்: முடக்கும் மூட்டு வலியை சரி செய்யுமா 'நொச்சி'?

உடல் பருமன், ரத்தத்தில் அதிக கொலஸ்டீரால் இவற்றை குறைக்கும் தன்மை உடையது கொள்ளு (அ) உளுவல். இது நாம் அன்றாடம் பயன்படுத்த மறந்த, பாரம்பரிய, சித்த மருத்துவ மூலிகை உணவுப்பொருள். 'கொழுத்தவனுக்கு கொள்ளு' என்ற பழமொழி யாவரும் அறிந்ததே. கொள்ளும் அரிசியும் சேர்ந்த கஞ்சி நல்ல உடல்பலத்தை அதாவது 'எள்ளை நசுக்கி பிழிபலமும்'  தரும் என்று சித்த  மருத்துவம் கூறுகின்றது. 

கொள்ளுவில் உள்ள பல்வேறு வேதிப்பொருள்கள் பல்வேறு மருத்துவ தன்மை உடையதாக உள்ளன. 

கொள்ளுவில் உள்ள நார்சத்து தன்மை, நம் செரிமானத்தை தூண்டுவதோடு உட்கொள்ளும் உணவில் உள்ள கொழுப்பு உடலில் சேராமல் தடுக்கிறது. இதன் விதை உறையில் உள்ள பினோலிக் அமிலம் என்ற வேதிப்பொருள் இருதய நோய்களை தடுக்கும் தன்மையை உடையது. பல்வேறு நோய்களை தடுக்கும் ஆன்டி- ஆக்ஸிடண்ட் செய்கையும் உடையது. 

கொள்ளுவில் உள்ள மருத்துவ குணம் வாய்ந்த வேதிப்பொருள்கள் உடல் பருமன், சர்க்கரை நோய் போன்ற வளர்ச்சிதை மாற்ற நோய்களுக்கு காரணமான  இன்சுலின் எதிர்ப்பை (ரெஸிஸ்டன்ஸ்) நீக்கி இந்நோய்களை அணுகாமல் இருக்க உதவும். 

இதையும் படிக்க | சுகம் தரும் சித்த மருத்துவம்: குளிர்கால ஒவ்வாமையை ஓட்டும் 'மஞ்சள்'

கொள்ளு சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் மிக சிறந்த உணவு. அதிக அளவு புரசத்தினை உடையது. இதில் உள்ள சாக்கரைட் வேதிப்பொருள் ரத்தத்தில் சர்க்கரை நோய் வரவிடாமல் தடுக்கும் தன்மையும்  உடையது.  இதில் உள்ள வைட்டமின்களும், தாது உப்புக்களும் பல்வேறு உடல் வளர்ச்சிக்கும் உதவும். 

கொள்ளு உடல் பருமன் உள்ளவர்களுக்கும் ஏற்படும் பித்தப்பை கற்களை கரைக்கும். சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மையும் உடையது. மாதம் மாதம் தீட்டு சரியாக ஆகாத பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்.

இதில் உள்ள ஒலிகோசாக்ரைட் வகையான சர்க்கரைசத்து குடல் மற்றும் மலக்குடல் புற்று நோய் வரவிடாமல் தடுப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றது. 

தினசரி மாலை வேளையில் எடுக்கும் ‘கொள்ளு சுண்டல்’ இத்தனை மருத்துவ குணங்களும் நமக்கு தரும். 

அதாவது, லேசாக வறுத்த கொள்ளுவினை பொடித்து, வஅதன் அளவிற்கு 10 பங்கு நீர் சேர்த்து கஷாயமாக்கி குடித்து வர உடல் பருமன் குறையும் என சித்த மருத்துவம் கூறுகின்றது. அதனை காலையில் வெறும் வயிற்றில் எடுத்தால் இன்னும் சிறப்பு.

இதையும் படிக்க | சுகம் தரும் சித்த மருத்துவம்: ஆஸ்துமாவை அடிபணியச் செய்யுமா ‘துளசி’?

பிட்சா, பர்கர் தான் நாகரிகம் என்று ஆடம்பரத்தை எண்ணி, பாரம்பரியத்தை மறந்த பலரும், கொள்ளு மிக எளிமையான உணவு என்று ஏளனமாக பார்க்காமல் கொள்ளுவை அன்றாடம் பயன்படுத்த தொடங்கினால், உடல் பருமனை அணுகவிடாமல் ஆரோக்கியமாக வாழ முடியும். இது நம் பாரம்பரிய உணவு என்பதை மறப்பதும் நன்றன்று.

இதையும் படிக்க | சுகம் தரும் சித்த மருத்துவம்: சர்க்கரை நோய்க்கு குட்பை சொல்லுமா 'பாகற்காய்'?

மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டிய மெயில் இ-மெயில் ஐடி: drthillai.mdsiddha@gmail.com

Tags : fat body siddha medicine horsegram கொள்ளு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT