சிறப்புச் செய்திகள்

'கரோனாவிற்காக கண்டறியப்படும் நவீன கருவிகள்'

எஸ். மணிவண்ணன்

ஒருமணி நேரத்திற்குள் கரோனா தொற்றை கண்டறியும் வகையில் நவீன துரித பரிசோதனைக் கருவியை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

குறைந்தபட்ச உபகரணங்களை பயன்படுத்தி நிலையான கரோனா நோயறிதலை கண்டறிய இயலும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதற்கு ஸ்டாப் கொவிட் (STOPCovid) என்று பெயரிட்டுள்ளனர். 

மக்கள் அடிக்கடி அல்லது அன்றாடம் கரோனா பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும் என்பதை இலக்காக கொண்டு மிகக்குறைந்த விலையில் இதனை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

இது தொடர்பாக நியூ இங்கிலாந்து மருத்துவ பத்திரிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வழக்கமான கரோனா பரிசோதனைகளை விட 93 சதவிகிதம் துல்லியமான தொற்று அறிகுறிகளை இதன் மூலம் கண்டறியமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவலை முழுமையாக கட்டுப்படுத்தும் வகையில்  கரோனா பரிசோதனைகளை துரிதப்படுத்த வேண்டும். அதற்காக உடனடியாக கரோனா முடிவுகளை கண்டறியும் கருவிகளை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால், இத்தகைய நவீன பரிசோதனைக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாள்தோறும் கூட கரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம் என்று ஆராய்ச்சியாளர் ஒமர் அபுதாய் தெரிவித்துள்ளார்.

இந்த கருவி முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் போக்குவரத்து மற்றும் கல்வி நிலையங்களில் மிகப்பெரிய அளவில் உதவும்.

சி.ஆர்.ஐ.எஸ்.பி.ஆர். (CRISPR) என்ற டி.என்.ஏ.வை பரிசோதனை செய்யும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பிற சோதனைகள் கூட வைரஸ் நோய்க்கிருமிகளை கண்டறியும் என்றாலும், இவற்றின் செயல்முறையும் அதற்காக எடுத்துக்கொள்ளும் நேரமும் கூடுதலானது. தற்போதைய கரோனா பரிசோதனைகள் இந்த முறையை பயன்படுத்தியே செய்யப்படுகிறது.

மேலும் இத்தகைய பரிசோதனைகள் ஆர்.என்.ஏ. பிளவு மற்றும் திரவங்களை கையாலும் முறைகளை கொண்டுள்ளதால், தொற்று பரவும் அபாயத்தை அதிகரிக்கும்.

இதனை தவிர்க்கும் வகையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள ஸ்டாப் கொவிட் என்ற நவீன துரித பரிசோதனைக் கருவி அபாயகரமான செயல்முறைகளை கடந்து எளிமையான முறையில் பரிசோதனை முடிவுகளை வழங்குகிறது என்று எம்.ஐ.டி தெரிவித்துள்ளது.

இந்த ஸ்டாப் கொவிட் பரிசோதனை முறையில் ஆர்.என்.ஏவை ஈர்க்கும் காந்த மணிகளை ஆராய்ச்சியாளர்கள் சேர்த்துள்ளனர். இதன் மூலம் நோய்த்தொற்றுக்கு காரணமாக வைரஸ் கிருமிகளை ஒருசேர குவிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். 

இந்த நடவடிக்கை அதிக நேரம் செலவழிக்கக்கூடிய விலையுயர்ந்த சுத்திகரிப்பு கருவிகளின் தேவையை நீக்குகிறது. இதன் மூலம் பரிசோதனையின் உணர்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதால், துரித பரிசோதனை கருவிகளின் முன்மாதிரியாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இந்த கருவியின் ஆரம்ப கட்ட சோதனையில், வைரஸ் மரபணுக்கள் காந்த மணிகளில் அதிக அளவு சேர்வது கண்டறியப்பட்டது. இது வைரஸ் மரபணுக்கள் மீதான கருவியின் உணர்திறனை வெளிப்படுத்துவதாக ஆராய்ச்சியாளர் ஜோனதன் கூட்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.

இந்த ஸ்டாப் கொவிட் என்ற நவீன துரித பரிசோதனைக் கருவி மூலம் சோதனை அடிப்படையில் 402 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 202 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 200 பேருக்கு தொற்று இல்லை என்று தெரியவந்தது. 

இது அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நிறுவனம் நடத்திவரும் பரிசோதனையுடன் 93 சதவிகிதம் பொருந்தியுள்ளது. 

நாசி துளைகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளுக்கும் ஸ்டாப் கொவிட் என்ற நவீன துரித பரிசோதனை கருவியை பயன்படுத்தி முடிவுகளை கண்டறிய இயலும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உமிழ்நீரை கொண்டும் பரிசோதனை செய்து முடிவுகளை தெரிந்துகொள்ள இயலும் என்பதால் மற்ற முறைகளை விட இம்முறை பரிசோதனை எளிமையானதாக கருதப்படுகிறது.

கரோனா பரிசோதனைகளை எளிமையாக்க வேண்டும், அதேவேளையில் அதிகமாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே நவீன துரித பரிசோதனைக் கருவிகள் கண்டறியப்படுகின்றன.

அந்தவகையில் அமெரிக்காவுடன் சென்னை ஐ.ஐ.டி.-யும் இணைந்து கரோனா பரிசோதனை முடிவுகளை உடனடியாக தெரிந்துகொள்ளும் வகையில் புதிய கருவியை கண்டறிந்துள்ளது. 

இந்த கருவியும் உமிழ்நீரை கொண்டே வைரஸ் தொற்றை கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கருவி மூலம் 5 நிமிடங்களில் பரிசோதனை முடிவுகளை தெரிந்துகொள்ள இயலும் என்று ஐ.ஐ.டி. தெரிவித்துள்ளது.

இந்த கருவியை பெரிய அளவில் சந்தைப்படுத்த சம்பந்தப்பட்ட அமெரிக்க நிறுவனமும், சென்னை ஐ.ஐ.டி.-யும் இணைந்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கரோனா வைரஸ் தொற்றை முழுவதுமாக அழிக்கும் வகையில் தடுப்பு மருந்துகள் கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் ஒருபுறம் ஈடுபட்டு வந்தாலும், தொற்று பரவலை தடுக்கும் வகையில் நவீன கருவிகளின் கண்டுபிடிப்பிலும் ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர் என்பதற்கு இத்தகைய கருவிகளே சாட்சிகளாக அமைகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க முடியவில்லை: நடிகர் சூரி வேதனை

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

வேகப்பந்து வீச்சு குறித்து பிஎச்டி வகுப்பெடுக்கலாம்: பும்ராவை புகழ்ந்த முன்னாள் வீரர்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

SCROLL FOR NEXT