சிறப்புச் செய்திகள்

இவர்கள் செய்த பிழை என்ன?

10th Sep 2020 10:21 AM | சா. ஜெயப்பிரகாஷ்

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வல்லம்பக்காடு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் அபிஷேக், அவனது 12 வயது தம்பி அபிரித் ஆகியோர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். செப்டம்பர் 9 ஆம் தேதி இரவு இச்சம்பவம் நடந்திருக்கிறது.

நான்கு மாதங்களுக்கு முன்பு ஜூன் 11ஆம் தேதி இரவு, நமணசமுத்திரத்தில் 20 வயதான விக்னேஸ்வரனும், 18 வயதான அவனது தம்பி யோகேஸ்வரனும் தூக்கில் தொங்கி இறந்தார்கள். தனது தாயின் சேலையில் தூக்கிட்டுக் கொண்டு தங்களை விடுவித்துக் கொண்டார்கள்.

இவ்விரு துயரங்களுக்கும் காரணம் இவர்களின் பெற்றோர் எடுத்த முடிவு. வல்லம்பக்காட்டில் அபிஷேக்கையும், அபிரித்தையும் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றவர் இவர்களின் தாய் ராதா.

ADVERTISEMENT

தனது கணவர் முத்து, வேறொரு இளம் பெண்ணுடன் வீட்டை விட்டுச் சென்றுவிட்டார் என்று தெரிந்த பிறகு ராதா எடுத்த முடிவு அத்தனைக் கொடூரமானது. வீட்டில் மகன்களுக்கு தூக்க மாத்திரை கலந்து உணவு கொடுத்துவிட்டு, பின்னர் தயாராக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி எரித்திருக்கிறார். தொடர்ந்து தானும் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு பற்ற வைத்திருக்கிறார்.

அலறல் சப்தம் ஊரையே கூட்டிவிட, இவர்களைக் காப்பாற்ற வீட்டுக்குள் வந்த பக்கத்துவீட்டுக்காரர்களுக்கும் காயம். 'தீ வலியது'. ராதாவும், இளைய மகன் அபிரித்தும் அந்த இடத்திலேயே கரிக்கட்டையானார்கள்.

அபிஷேக் மட்டும் குற்றுயிரும் குலை உயிருமாக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தான்.

கணவர் இன்னொரு பெண்ணுடன் சென்றுவிட்டார் என்ற துயரத்தில் மனைவி எடுத்த முடிவு. ஆனால், எரிந்து போன மகன்களுக்கு அப்படி என்ன சம்பவம் அது? என்று கூடத் தெரியாது. புரிந்து கொள்ளவே முடியாத வயது! தீப்பிழம்புகள் இரு சிறாரின் உயிரைக் குடித்துவிட்டன.

நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் கொஞ்சம் வித்தியாசமானது.

தாய் வேறொரு ஆணுடன் சென்றுவிட்டார். விரக்தியடைந்த மகன்கள், விவரம் அறிந்த கல்லூரி மாணவர்கள். 'தாயின் சேலையைக் கொண்டே', வீட்டில் தூக்கிட்டுத் தொங்கினர். எத்தனை வலியிருந்திருக்கும்?

ஊரே கூடி அழுத குரல் அந்தத் தாயின் செவிகளை எட்டியிருக்குமா, தெரியவில்லை.

கழுத்தை இறுக்கிக் கொன்ற அந்தத் தாயின் சேலையின் கொடூரமும், எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தனது முடிவைச் செயல்படுத்திய அவரின் செயலும் ஒன்றா?

இளம் சிறார்களைக் கருக்கிக் கொன்ற தீயின் சூடும், மகன்களின் நினைவுகளின்றி றெக்கை கட்டிப் பறந்த தந்தையின் செயலும் ஒன்றா?

காலம் எல்லாவற்றையும் கணக்கெடுத்துக் கொண்டே இருக்கிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT