சிறப்புச் செய்திகள்

10 ஆண்டுகளில் 100 இலவச மருத்துவ முகாம்கள்: பழங்குடியின மக்களை நோக்கிய மருத்துவ சேவை

கே.விஜயபாஸ்கா்

ஈரோடு: சமவெளிப் பகுதியோடு அவ்வளவாக தொடர்பு இல்லாத மலைக் கிராமங்களில், கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 100 இலவச மருத்துவ முகாம்களை நடத்தி பழங்குடியின மக்களுக்கு மருத்துவ சேவை செய்து வருகிறார் ஈரோட்டை சேர்ந்த தொழிலதிபர் எஸ்.சிவானந்தன்.  
 நகரங்களில் இப்போதெல்லாம் மளிகைக் கடையைவிட மருந்துக் கடைகள் அதிகமாகத் தென்படுகின்றன. தெருவுக்குத் தெரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் வானுயர ஓங்கி நிற்கின்றன. ஆனால் பழங்குடியின கிராமங்களில் மக்களுக்கான மருத்துவ சிகிச்சை என்பது எட்டாத தொலைவில்தான் உள்ளது.

ஈரோடு டிரஸ்ட் மருத்துவமனை செயலாளர் எஸ்.சிவானந்தன்.

 இந்தியா முழுவதும் பல ஆயிரம் பழங்குடியின கிராமங்கள் இருக்கின்றன. அவற்றில் பல இன்று வரை வெளியுலகுடன் தொடர்பற்ற நிலையில்தான் இருக்கிறது. அதாவது அந்த ஊர்களுக்குச் செல்ல சாலை வசதி இருக்காது. அடிப்படை வசதிகள் இருக்காது. கல்வி, மருத்துவம் போன்றவை அங்குள்ள மக்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கும். ஒருசில பழங்குடியின கிராமங்களில் தொண்டு நிறுவனங்களின் முயற்சியால் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. அரசும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைப்பதில் மும்முரம் காட்டி வருகிறது.

மலைகளின் மீது பிரியம்: இந்தச் சூழலில் மலைக் கிராமங்களைத் தேடிப்பிடித்து மருத்துவ சேவை வழங்கி வருகிறார், ஈரோட்டை சேர்ந்த டெக்ஸ்டைல் தொழிலதிபர் எஸ். சிவானந்தன்.

ஈரோடு டிரஸ்ட் மருத்துமனையின் செயலாளராகவும் உள்ள இவர், இந்த சேவையை கடந்த 10 ஆண்டுகளாக செய்து வருகிறார்.

மருத்துவம் மிகப் பெரிய வியாபாரமாக மாறிக் கொண்டிருக்கும் இந்தக்  காலகட்டத்தில் பழங்குடி கிராம மக்களுக்கான சேவை பற்றிய எண்ணம் எவ்வாறு ஏற்பட்டது என்பது பற்றி அவர் கூறுகிறார்:

"என்னுடைய தொழில் ஜவுளி சார்ந்தது. இருப்பினும் மலைப்பயணம் என்றால் எனக்கு அலாதி பிரியம். இதனால் கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர் மலைக்  கிராமங்களுக்கு அடிக்கடி சென்று வருவேன். அப்போது மருத்துவத்துக்காக மலைக் கிராம மக்கள் படும் சிரமத்தை நேரில் பார்த்துள்ளோன்.
பொருளாதார சூழல் காரணமாக மலைக் கிராம மக்கள் மருத்துவமனைகளை நோக்கி வரத் தயங்குகின்றனர்.

முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்ற மலை கிராம பழங்குடியின மக்கள்.

பல மலைக் கிராமங்களில் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை, பிறக்கும் 10 குழந்தைகளில் 2 குழந்தைகள் 5 வயதைத் தாண்டுவதற்கு முன்னரே இறந்துவிடுவார்கள். அங்குள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி வாந்தி, வயிற்றுப் போக்கு, காய்ச்சல் வந்துவிடும். இவர்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நண்பர்களுடன் சேர்ந்து சாலை, கல்வி, பொருளாதார வசதி இல்லாத மலைக் கிராமங்களில் ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ முகாம்களை நடத்தினோம்.

10 ஆண்டுகளில் 100 முகாம்கள்:
இதன் பிறகு கடந்த 2010 ஆம் ஆண்டில் ஈரோடு டிரஸ்ட் மருத்துவமனையை ஈரோட்டில் தொடங்கினோம். இப்போது அதன் செயலாளராக நான் இருக்கிறேன். அப்போது முதல் மாதம் ஒரு முகாமை மலைக் கிராமங்களில் நடத்துவது என நிர்வாகத்தில் முடிவு செய்தோம். அந்த அடிப்படையில் இப்போது வரை கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 100 மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளோம்.

ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கியுள்ள மலைக் கிராமங்களான அந்தியூர் வட்டத்தில் பர்கூர், சோளகனை, கொங்கடை, கடம்பூர் வனப் பகுதியில் குன்றி, மார்க்கம்பாளையம், தெங்குமரஹடா வனப்பகுதியில் அல்லி மோயாறு, கள்ளம்பாளையம் ஆகிய 7 பழங்குடியின கிராமங்களைத் தேர்வு செய்து, மாதம் ஒரு கிராமம் என்ற அடிப்படையில் முகாம்களை நடத்தி வருகிறோம்.

இங்கு மருத்துவம் செய்வது மட்டுமின்றி மக்களுக்குத் தேவையான உணவு முறை குறித்த விழிப்புணர்வையும் வழங்கி வருகிறோம்.  பழங்குடியின மக்களை அணுகுவது தொடக்கத்தில் மிகவும் கடினமாக இருந்தது. அப்போது பழங்குடியின மக்களுக்கு கல்வி, சமூக விழிப்புணர்வு சேவைகளை செய்து வரும் சத்தியமங்கலம் சுடர் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் எஸ்.சி.நடராஜ் எங்களுக்கு உதவினார்.  அப்போது முதல் இப்போது வரை அவரிடன் இணைந்தே இப்பணியை செய்து வருகிறோம்.

பணி கஷ்டம்தான், ஆனால் மனதுக்கு நிம்மதி:

தொடக்கத்தில் போதுமான பண வசதி இல்லை. நாம் செய்துகொண்டிருப்பது சரியா, தவறா என்னும் குழப்பம் இருந்தது.  இருப்பினும் ஒவ்வொரு முறையும் சிகிச்சைக்கு வரும்  மலைக் கிராம மக்களின் வாழ்க்கைச் சூழலை பார்த்துவிட்டால்,  இந்த பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு விடுகிறது.

முகாம்களில் சின்னச் சின்ன பிரச்னைகளுடன் வருபவர்களுக்குச் சிகிச்சை அளித்து அனுப்பிவைப்போம். ஆனால் சிலருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். எங்களிடம் போதுமான பண வசதி இருக்காது. இப்படித் தவித்த காலங்களும் உண்டு. ஆனால் ஈரோடு டிரஸ்ட் மருத்துவமனை தொடங்கிய பிறகு இந்த நிலை மாறியது.

மேல்சிகிச்சை தேவைப்படும் மக்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்து வருகிறோம். ஒவ்வொரு முகாமிலும் 300 முதல் 500 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதில் 10 பேர் வரை மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

விழிப்புணர்வு இன்னும் தேவைப்படுகிறது:
பழங்குடியின மக்களுக்குப் பெரும்பாலும் ரத்த சோகை நோய்தான் பிரதானமாக உள்ளது. அதற்கு மலையில் கிடைக்கும் உணவுப் பொருள்களே சிறந்த தீர்வு என விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். இதுபோல் குழந்தைத் திருமணம் தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகிறோம். மேலும் தீபாவளிப் பண்டிகைக்கு முன்பு மலைக் கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்குப் புத்தாடை வழங்குவதையும் வழக்கமாக வைத்துள்ளோம்.

எங்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் அனைவரும் மிகுந்த மன மகிழ்வோடு இந்த பணியை செய்கின்றனர்.  பழங்குடியின மக்கள் இப்போது எங்கள் உறவினர்களாக மாறிவிட்டார்கள். முகாம் நடைபெறும் நாள்களில் எங்கள் குழுவினருக்கான (சுமார் 10 பேர்) மதிய உணவு பழங்குடியின மக்களால் தான் தயார் செய்யப்படுகிறது.

அரசின் திட்டங்களால் சாலை, குடியிருப்பு, குடிநீ்ர் போன்ற அடிப்படை கட்டமைப்புகளை பெரும்பாலான பழங்குடியின கிராமங்கள் பெற்றுள்ளன. ஆனால் பழங்குடியின மக்களுக்கு மருத்துவம் குறித்து விழிப்புணர்வு மட்டுமல்லாது, மருத்துவ சிகிச்சைக்கான வாய்ப்பும் வெகு தொலைவில்தான் இருக்கிறது.

உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை இப்போதும் தொட்டில் கட்டி தூக்கி வருவது, சரக்கு வாகனங்களில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் நிலை இப்போதும் உள்ளது. சமவெளிப் பகுதியோடு அவ்வளவாக தொடர்பு இல்லாத இந்த மக்கள் நோய் இல்லாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற எங்களின் இந்த பணி,  வருங் காலங்களிலும் தொய்வில்லாமல் தொடரும், இதுபோல எட்ட முடியாத தொலைவில் இருப்போருக்கான பணிகளைச் செய்ய மேலும் பலரும் முன்வர வேண்டும் என்றார் எஸ். சிவானந்தன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

SCROLL FOR NEXT