சிறப்புச் செய்திகள்

புலிவலம் வனச் சாலையில் வாகனங்களால் குரங்குகள் உயிருக்கு ஆபத்து

7th Oct 2020 11:58 AM | என். கணேஷ்சங்கர்

ADVERTISEMENT

துறையூர்:  துறையூர் அருகே புலிவலம் வனச் சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களினால் அடிபட்டு இறக்கும் நிலையிலிருக்கின்றன இந்தப் பகுதிகளில் வலம்வரும் குரங்குகள். இவற்றைப் பாதுகாக்கத் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் வேண்டுகோள்.

துறையூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் 16 கி.மீ. தொலைவில் கரட்டாம்பட்டியை அடுத்திருக்கிறது புலிவலம் கிராமம். கரட்டாம்பட்டிக்கும் புலிவலத்துக்கும் இடையே 8 கிமீ தொலைவு தூரம் உள்ளது. இதில் சுமார் 5 கிமீ தொலைவு தூரத்துக்கு சாலையின் இரண்டு புறங்களிலும் அடர்ந்த அரசு காப்புக் காடு உள்ளது. 

இந்த பகுதியில் சாலையைக் கடக்கும் பயணிகள், சரக்குகளுக்கான கன, இலகு ரக வாகனங்கள் முதல் இரு சக்கர வாகனங்கள் வரை அவற்றை ஓட்டுபவர்கள் மிக வேகமாக தங்களுடைய வாகனங்களை நேர சிக்கனத்துக்காகவும், விரைவாக கடக்க வேண்டும் என்ற ஒருவித வேகமான மனோபாவத்திலும் வாகனங்களை ஓட்டிச் செல்வர். வேகமாக செல்லும் வாகனங்களினால் வரும் ஆபத்தை உணராமல் அவ்வப்போது காப்புக் காட்டிலிருந்து திடிரென சாலைக்குள் பிரவேசிக்கும் மான்கள், மயில்கள் வாகனங்களில் அடிபட்டு காயமடையும். சில நேரத்தில் அவைகள் உயிரையும் இழக்கும்.

இந்த நிலையில் சமீப காலமாக புலிவலம் காப்புக்காடு சாலையில் பயணிப்பவர்கள் தருகிற பழங்கள் உள்ளிட்ட உணவுகளை எதிர்பார்த்து ஏராளமான குரங்குகள் சாலையின் ஓரமாக திரிகின்றன. சாலையின் எதிரெதிர் திசைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவர்கள் செல்லும் சாலையோரம் உள்ள குரங்களுக்கு உணவுகளை போட்டுச்செல்வர். 

ADVERTISEMENT

இதனை எதிர் திசையில் கவனிக்கும் குரங்குகள் தங்களுக்கான உணவுகளை முந்திக் கைப்பற்றும் நோக்கில் வேகமாக வரும் வாகனங்களின் ஆபத்தை உணராமல் சாலையின் குறுக்கே செல்லும் போது வாகனங்களில் மோதி அடிபட்டு காயமடையும். 

செவ்வாய்கிழமை ஒரு குரங்கு இந்த வனப்பகுதி சாலையின் நடுவே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்து உயிருக்கு போராடியது என்பது குறிப்பிடத்தக்கது. உயிருக்கு போராடும் குரங்கினை அடுத்து வரும் வாகனங்களில் செல்வோர் உச்கொட்டியவாறு பரிதாபத்துடன் பார்த்துவிட்டு கடந்துவிடுவர்.

இந்த சாலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு வாகனத்தில் அடிபட்ட ஒரு குரங்கின் நினைவாக புலிவலம் காப்புக்காட்டில் சாலையோரம் மேற்கு திசையில் திறந்தவெளியில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆஞ்சநேயர் சிலை அருகே வனத்துறையினர் தங்கள் சார்பில் அல்லது சமூக ஆர்வலர்களின் உதவி பெற்று குரங்குகளுக்காக ஒரு உணவுத் தொட்டியையும், தண்ணீர் தொட்டியையும் அமைத்துக் கொடுக்கவேண்டும்.  குரங்குகளுக்கு உணவு பொருள் தர விரும்புகிறவர்கள் சாலையின் கண்ட இடங்களில் உணவு பொருள்களை போடாமல் குரங்குகளுக்கான உணவுத் தொட்டியிலும்,  நீரை சாலையில் கொட்டாமல் தண்ணீர் தொட்டியில் சேர்க்கும் படியும் அறிவுறுத்தி ஒரு அறிவிப்பு பலகையும் வைக்கவேண்டும். 

அப்போது தொட்டிகளில் உணவும், நீரும் சேரும் போது குரங்குகள் சாலையின் குறுக்கே கடக்காமல் ஒரு திசையில் ஓரிடத்தில் இருந்துகொண்டு தங்களுக்கான உணவையும் நீரையும் ஆபத்தின்றி எடுத்துக் கொள்ள பழகிவிடும் என அந்த சாலை வழியே செல்லும் போது குரங்குகள் காயம்படுவதைக் கவனிக்கும் வழிப்போக்கர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து குரங்கு, மான் உள்ளிட்ட வன விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : monkeys
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT