சிறப்புச் செய்திகள்

ஆனந்தூரில் கி.பி.10-ஆம் நூற்றாண்டை சேர்ந்த மகாவீரர் சிலை கண்டெடுப்பு

DIN


திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூரில் கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரரின் சிலையை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டெடுத்துள்ளது.

ஆனந்தூர் சிவன் கோயிலில் புதிதாக மகாமண்டபம் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. சேதமடைந்த பழைய மகாமண்டபத்தில் இருந்த கற்கள், தூண்கள் கோயில் பகுதிகளில் சிதறிக் கிடக்கின்றன. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு வெள்ளிக்கிழமை அப்பகுதியை ஆய்வு செய்தபோது, அங்கு கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் சிற்பம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது: 
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், மேலக்கிடாரம், கீழச்சீத்தை, கீழச்சாக்குளம், பசும்பொன், கமுதி, பொக்கனாரேந்தல், மேலஅரும்பூர், அருங்குளம், திருப்புல்லாணி, புல்லக்கடம்பன், புல்லுகுடி, புல்லூர், புல்லங்குடி, சூடியூர், மஞ்சூர், செழுவனூர், மாறந்தை உள்ளிட்ட பகுதிகளில் சமண மதம் பரவி இருந்ததற்கான தடயங்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஆனந்தூர் சிவன் கோயிலுக்குத் தெற்கிலுள்ள குளத்தின் கரையில், சமண மதத்தின் 24 ஆவது தீர்த்தங்காரரான மகாவீரரின் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கருங்கல்லால் ஆன இச்சிற்பம் 3 அடி உயரமும், 1 அடி அகலம் உள்ளது. சிங்கம் மகாவீரரின் வாகனம் ஆகும். 

இதன் காலம் கி.பி.10-ஆம் நூற்றாண்டாகக் கருதலாம். பல ஆண்டுகளாக வெளியில் கிடந்துள்ளதால், வெயில், மழையால் சிற்பம் சேதமடைந்துள்ளது. இதன் மூலம் கி.பி.10-ஆம் நூற்றாண்டில் இவ்வூரில் ஒரு சமணப்பள்ளி இருந்திருக்கும் எனக் கருதலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

SCROLL FOR NEXT