சிறப்புச் செய்திகள்

கொலையாளி பற்றித் துப்பு தந்தால் ரூ. 74 லட்சம் பரிசு: அமெரிக்க புலனாய்வுத் துறை

தத்து

இந்தியாவிலிருந்து வந்த, தங்களால் தீவிரமாகத் தேடப்படும் முதல் பத்து பேரில் ஒருவரான பத்ரேஷ்குமார் சேதன்பாய் படேல் பற்றித் தகவல் தந்தால் ஒரு லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 74 லட்சம்) வெகுமதி வழங்கப்படும் என்று அமெரிக்க புலனாய்வுத் துறை (எஃப்.பி.ஐ.) மீண்டும் நினைவூட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு தொடக்கம் எஃப்.பி.ஐ.யால் மிகத் தீவிரமாகத் தேடப்படும் 10 பேரில் (10 மோஸ்ட் வான்டட்) ஒருவராக இருக்கிறார் படேல்.

அமெரிக்காவில் மேரிலாண்ட் மாகாணத்தில் ஹனோவரிலுள்ள டன்கின் டோனட்ஸ் காபி விற்பனை நிலையத்தில் தன் மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்றதாகத் தேடப்படும் இவர், தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார்.

கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள படேலைத் தீவிரமாகத் தேடப்படுவோர் பட்டியலில்  சேர்த்து, இவரைப் பற்றித் துப்புத் தருவோருக்கு ஒரு லட்சம் டாலர் வெகுமதி வழங்கப்படும் என்றும் 2017-ல் எஃப்.பி.ஐ. அறிவித்தது.

தற்போது படேலின் மாறுபட்ட படங்களுடன் இந்த அறிவிப்பை, மீண்டும் டிவிட்டரில் வெளியிட்டு நினைவூட்டியுள்ளது.

படேல் பற்றித் தகவல் தெரிந்தால் எஃப்.பி.ஐ. நிறுவனத்தையோ அல்லது அருகிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தையோ தொடர்பு கொள்ளலாம் என்றும் எஃப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.

இந்தக் கொலை நடந்தபோது படேலுக்கு 24 வயது, அவருடைய மனைவி பாலக்கிற்கு 21 வயது. அவர்கள் இருவரும் பணியாற்றிய காபி விற்பனை நிலையத்திலேயே  சமையலறைக் கத்தியால் மனைவியைக் குத்திக் கொன்றிருக்கிறார் படேல்.

2015 ஏப்ரல் 12 ஆம் தேதி இந்தக் கொலை நடைபெற்றது. 2017 முதல் இவரைத் தேடப்படுவோர் பட்டியலில் சேர்த்து அறிவித்தது எப்பிஐ.

இந்தியாவில் குஜராத்திலுள்ள விராம்கம் அருகே கந்ரோடி என்ற ஊரில் பிறந்தவர் படேல். 2015 ஆம் ஆண்டில் பாலக்கைத் திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவருமாகத் தங்கள் உறவினர்களைச் சந்திக்க அமெரிக்கா சென்றனர்.

கொலை நடந்த நாளில் இருவரும் கடையில் இரவுப் பணியில் இருந்துள்ளனர். படேலின் உறவினருக்குச் சொந்தமானது இந்தக் கடை. அன்றிரவு 9.30 மணிக்கு கணவன் - மனைவி இருவரும் கடையின் பின்புறமுள்ள சமையலறைக்குச் சென்றிருக்கின்றனர். சிறிது நேரத்தில் மனைவி இல்லாமல் திரும்பிவந்த படேல், அடுப்பை அணைத்துவிட்டுக் கடையைவிட்டுப் புறப்பட்டுப் போய்விட்டார்.

பின்னர்தான் சமையலறையில் பாலக், கொல்லப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது. அடித்தும் கத்தியால் குத்தியும் பாலக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தியா திரும்ப வேண்டும் என்று பாலக்கும் அமெரிக்காவிலேயே இருக்க வேண்டும் படேலும் வற்புறுத்த, இதுதொடர்பான வாக்குவாதம் முற்றிக் கொலை நடந்திருக்கலாம் என விசாரணை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

கடையில் காத்திருந்தவர்களும் புதிதாக வந்த வாடிக்கையாளர்களும் நீண்ட நேரமாகக் கடைக்கு வந்தவர்களைக் கவனிக்க யாரும் வராததால் காவல்துறைக்கும் அருகிலிருந்த காவல் அலுவலர் ஒருவரிடமும் தகவல் தெரிவித்தனர்.

கடைக்கு வந்த அவர், பாலக் கொலையுண்டு கிடப்பதைக் கண்டார். கண்காணிப்பு கேமரா காட்சிகளைப் பார்த்த பின்னர்தான், படேல்தான் கொலையாளியாக இருக்க வேண்டும் எனத் தெரிந்தது. இடைப்பட்ட ஒரு மணி நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு படேல் தப்பிவிட்டார். 

பாலக்கைக் கொன்ற பிறகு கடையைவிட்டுத் தப்பிய படேல், நடந்து அருகிலுள்ள தன்னுடைய அடுக்கக வீட்டுக்குச் சென்றிருக்கிறார். பின்னர் தனக்கு அவசியமான சில பொருள்களை எடுத்துக் கொண்டு, வாடகை காரில் நியு ஜெர்ஸியின் நெவார்க் விமான நிலையத்தையொட்டியுள்ள விடுதியொன்றுக்குச் சென்று தங்கியுள்ளார்.

இந்தப் பயணத்தின்போது, படேல் மிகவும் அமைதியாகவே இருந்ததாகப் பின்னர் விசாரணையின்போது வாடகை கார்  ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.

இரவு அந்த விடுதியில் தங்கிவிட்டு மறுநாள் காலையில் பணம் செலுத்தியபின் அறையைக் காலிசெய்துவிட்டுப் படேல் புறப்பட்டுச் சென்றிருப்பது கண்காணிப்பு கேமரா காட்சிகளிலிருந்து தெரிய வந்தது.

2015 ஏப். 13 காலை 10 மணியளவில் நெவார்க் (ரயில் - பேருந்து) போக்குவரத்து முனையத்திற்குச் சென்றிருக்கிறார். அதன் பிறகு அவரை யாரும் எங்கேயும் பார்த்ததாகத் தகவல் இல்லை, தலைமறைவாகிவிட்டார்.

கொலைக்குப் பின் படேல், அமெரிக்காவை விட்டு வெளியேறியிருக்க வேண்டும் அல்லது அமெரிக்காவிலேயே உறவினர்கள் வீடுகளில் தலைமறைவாக இருக்க வேண்டும் என்று விசாரணை அலுவலர்கள் கருதுகின்றனர்.

படேலிடம் அமெரிக்காவில் தங்கியிருப்பதற்கான விசா  இருந்தது. ஆனால், கொலை நடந்தபோதே இது காலம் கடந்து (காலாவதியாகி) விட்டது. இதனால், சட்டப்பூர்வமாக, முறையாக அமெரிக்காவை விட்டு படேலால் வெளியேறியிருக்க முடியாது.

கொலை நடப்பதற்கு சற்று முன், கடைசியாகத் தன்னுடைய குடும்பத்தினரிடம் பேசிய பாலக், தாம் இந்தியா திரும்புவதை விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்துதான் கொலை நடந்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.

பத்ரேஷ்குமார் சேதன்பாய் படேலுக்கு கனடா, இந்தியா, நியு ஜெர்ஸி, கென்டக்கி, ஜார்ஜியா, இல்லினாய்ஸ் ஆகிய இடங்களில் தொடர்பு இருக்கிறது.

மிகக் கொடூரமான கொலை என்பதைக் கருத்தில்கொண்டு படேலைத் தேடப்படுவோரென அறிவித்து துப்புக் கொடுப்போருக்கு ஒரு லட்சம் டாலர் வெகுமதி அறிவித்தது எப்பிஐ. தற்போது மீண்டும் நினைவூட்டி சுட்டுரைத்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT