சிறப்புச் செய்திகள்

400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட வெள்ளம்: ஆய்வில் கண்டுபிடிப்பு

24th Nov 2020 06:32 AM

ADVERTISEMENT


நியூயார்க்: செவ்வாய் கிரகத்தில் உள்ள கேல் பள்ளத்தாக்கு வழியாக 400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளம் வழிந்தோடியதாக ஓர் ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. தண்ணீர் இருந்ததன் அடிப்படையில் அக்கிரகத்தில் உயிர்கள் இருந்திருக்கலாம் எனவும் தெரியவருகிறது.

இதுதொடர்பாக "சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்' என்ற இதழில் அண்மையில் வெளியான ஆராய்ச்சிக் கட்டுரையின் விவரம்:

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா 2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் செவ்வாய் கிரகத்துக்கு கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலத்தின் ரோவர் (சுற்று வாகனம்) சேகரித்த தரவுகளை அமெரிக்காவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் அடிப்படையில், ஒரு விண்கல்லின் தாக்கத்தால் ஏற்பட்ட வெப்பம் காரணமாக, செவ்வாயின் தரைப்பரப்பில் இருந்த உறைந்த பனி உருகி, அங்குள்ள "கேல்' என்ற பள்ளத்தாக்கு வழியாக பிரம்மாண்டமான வெள்ளம் வழிந்தோடியிருக்கலாம் எனவும், 400 கோடி ஆண்டுகளுக்கு முன்னதாக இந்நிகழ்வு ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

விண்கல் தாக்கத்தின் விளைவாக செவ்வாய் கிரகத்தின் உறைந்த நீர்த்தேக்கங்களிலிருந்து அதிகளவு கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் மீத்தேன் வெளியானது. இதன்மூலம் கேல் பள்ளத்தாக்கில் தண்ணீர் புகுந்தது. பின்னர், இந்தத் தண்ணீருடன் பள்ளத்தாக்கின் உள்ளே இருக்கும் "மவுன்ட் ஷார்ப்' என்கிற மலையின் மேல்பகுதியிலிருந்து விழுந்த தண்ணீரும் இணைந்து வெள்ளத்தை ஏற்படுத்தியது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து ஆய்வறிக்கையின் இணை ஆசிரியர் ஆல்பெர்டோ ஜி. ஃபெய்ரன் தெரிவிக்கையில், கியூரியாசிட்டி ரோவர் தரவுகளின்படி, கேல் பள்ளத்தில் சேகரமாகியிருந்த வண்டல் மண்ணை ஆய்வு செய்ததன் அடிப்படையில் அப்பள்ளம் வழியாக வெள்ளம் வழிந்தோடியிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம். இதற்கு முன்பு விண்கலத்தின் ஆர்பிட்டர் தரவுகளை ஆய்வு செய்தபோது, வெள்ளத்தால் ஏற்பட்ட வண்டல் மண் படிவுகளை அடையாளம் காண முடியவில்லை. புவியியல் பார்வையில் ஆரம்பகால செவ்வாய் கிரகமானது செயல்பாடு மிக்க கிரகமாக இருந்தது. பூமியில், தண்ணீர் எங்குள்ளதோ அங்கு உயிர்கள் இருக்கும் என்பதன் அடிப்படையில், தரைப்பரப்பில் தண்ணீர் இருப்பதற்கான சூழலை செவ்வாய் கிரகம் கொண்டிருந்தது என்றார் அவர்.

கேல் பள்ளத்தாக்கில் ஒரு காலத்தில் ஏரிகளும், நீரோடைகளும் இருந்ததை கியூரியாசிட்டி ரோவர் அறிவியல் குழு ஏற்கெனவே நிறுவியிருந்தது. 

இந்த நீராதாரங்கள் கேல் பள்ளத்தாக்கு மற்றும் மவுன்ட் ஷார்ப் மலைப் பகுதி நுண்ணுயிர்கள் வாழ்ந்ததற்கான சூழலை கொண்டிருந்ததாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT