சிறப்புச் செய்திகள்

வாழ்வாங்கியில் பயன்பாடில்லாமல் பாழடையும் இ-சேவை மையக் கட்டடம்

11th Nov 2020 11:21 AM | வி. பாரதிசெல்வன்

ADVERTISEMENT

 

அருப்புக்கோட்டை:  விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் வாழ்வாங்கி கிராமத்தில் கட்டிமுடித்துப் பல ஆண்டுகளாகிவிட்ட நிலையில் பயன்பாட்டிற்குத் திறந்துவிடப்படாத இ-சேவை மையக்கட்டடம் பராமரிப்பில்லாமல் பாழடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெரியநாயகிபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட வாழ்வாங்கி கிராமத்தில் சுமார் 1200 பேர் வசித்து வருகின்றனர்.இங்கு கடந்த 2014-15 ஆம் நிதியாண்டில் மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சுமார் 14.55 லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சி இ-சேவை மையம் கட்டப்பட்டது. ஆனால் கட்டிமுடிக்கப்பட்டு 6 ஆண்டுகளாகி பின்னரும் தற்போதுவரை இக்கட்டடம் பயன்பாட்டிற்குவராமலே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கிராம ஊராட்சி அலுவலகத்தில் போதிய வருவாய் இல்லாத சூழலில் இ-சேவை மையத்தில் பணிபுரியும் ஊழியருக்கு உரிய ஊதியத்தை வழங்க இயலாததே இ-சேவை மையம் திறக்கப்படாததற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், பல ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி இந்த இ-சேவை மையக்கட்டடம் பூட்டிக் கிடப்பதால், அது ஆங்காங்கே விரிசல் கண்டும், முன்பக்க வராண்டாவில் தரைத்தளம் பெயர்ந்தும் பாழடைந்து வருகிறது. இதனால் ரூ.14.55 லட்சம் நிதி வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

எனவே இக்கட்டடம் பாழடையாமல் இருப்பதற்காகவாவது கிராம ஊராட்சி அல்லது மாவட்ட நிர்வாகத்தின் வேறு அலுவலகப் பயன்பாட்டிற்காவது பயன்படுத்த வேண்டுமெனவும் அல்லது இ-சேவை மையம் கட்டப்பட்ட நோக்கத்தின்படி  உரிய பயன்பாட்டிற்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கையை எடுக்கவேண்டுமெனவும் கிராமத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : e-service center building
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT