சிறப்புச் செய்திகள்

திறப்பு விழாவுக்குத் தயாராகும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

10th Nov 2020 06:52 AM | அ.ஜெயச்சந்திரன்

ADVERTISEMENT


சென்னை பெரும்பாக்கத்தில் ரூ.24.65 கோடியில் 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் குளிர்சாதன வசதியுடன் கூடிய செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் விரைவில் திறக்கப்படவுள்ளது.

கடந்த 2004 அக்.12-இல் தமிழைச் செம்மொழியாக மத்திய அரசு அறிவித்தது. 2005  ஜூலையிலிருந்து தமிழ் மேம்பாட்டுக்கான மையத் திட்டம் மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 

தமிழுக்குப் பங்காற்றிய அறிஞர்களைச் சிறப்பித்தல், தமிழ் மேம்பாட்டு வாரியம் அமைத்தல்,  செம்மொழி உயராய்வு மையம் தொடங்குதல், தமிழில் ஆய்வு மேற்கொள்வோருக்கு உதவித்தொகை அளித்தல் ஆகியவை தமிழ் மேம்பாட்டுக்கான மையத் திட்டத்தின் கூறுகளாக இருந்தன. 

செம்மொழித் தமிழாய்வு உயராய்வு மையம் 2006 மார்ச்சில்  மைசூரில் தொடங்கப்பட்டது. திட்டத்தின் பணிகளை ஒருங்கிணைத்துச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஒன்றை சென்னையில் நிறுவ வேண்டும் என 2007-ஆக.13-இல் புதுதில்லியில் நடைபெற்ற நிதிக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு 11-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ரூ.76.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  ஆக.18-இல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் தொடங்கப்பட்டது. 

ADVERTISEMENT

2008 மே 19 முதல் சென்னை சேப்பாக்கம் பாலாறு இல்லத்தில் இந்நிறுவனம் செயல்படத் தொடங்கியது. கடந்த 2012 மே மாதம் முதல் சென்னை தரமணியில் உள்ள சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. 

16.86 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு:  இந்நிறுவனத்துக்கு நிரந்தரக் கட்டடம் கட்டுவதற்காக கடந்த 2007-இல் தமிழக அரசு சென்னை அருகில் உள்ள பெரும்பாக்கத்தில் 16.86 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்தது. 2017-இல்  மத்திய அரசு ரூ.24 கோடியே 65 லட்சத்து 47 ஆயிரம் நிதி ஒதுக்கியது. மூன்று தளங்கள் கொண்ட புதிய கட்டடத்தின்  கட்டுமானப் பணி மத்திய பொதுப் பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு பணிகள் நிறைவு பெற்று வரும் ஜனவரியில் திறக்கப்பட உள்ளது.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்.

விருதுகள் வழங்குதல்: இங்கு தற்போது 22 கல்வி சார் பணியாளர்களும், 23 கல்வி சாரா பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். தமிழுக்குச் சிறப்பான பங்காற்றியோருக்கு செம்மொழி நிறுவனத்தின் மூலம் குடியரசுத் தலைவர் விருது 66 அறிஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 

நிறுவனத்தின் முக்கிய நோக்கங்கள்:  முதுநிலை, முனைவர்,  முனைவர் பட்ட மேலாய்வு உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் செம்மொழித் தமிழைக் கற்கவும் ஆராய்ச்சி மேற்கொள்ளவும் வாய்ப்புகளை உருவாக்குதல், ஆய்வு நூல்களைப் பதிப்பிக்க உதவி செய்தல், பழந்தமிழ் நூல்களை வெளியிடவும் அவற்றை ஆங்கிலத்திலும் பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடவும் நிதியுதவி வழங்குதல், செம்மொழித் தமிழ்க் கல்வியை இந்தியாவிலும், அயல்நாடுகளிலும் மேம்படுத்துதல், பல்கலைக்கழகங்களிடமிருந்தும் பிற கல்வி நிறுவனங்களிடமிருந்தும் செம்மொழித் தமிழாய்வு தொடர்பாகப் பெறப்படும் ஆய்வுத் திட்டங்களுக்கு நிதியுதவி அளித்தல் ஆகியவை இந்த நிறுவனத்தில் முக்கிய நோக்கங்கள் ஆகும். இந்த நோக்கங்களை நிறைவேற்ற அங்கு 13 புலங்களும், பல்வேறு சேவைப் பிரிவுகளும் செயல்பட்டு வருகின்றன. 

மின் நூலகமாக... : பல அரிய அச்சு நூல்களையும், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களையும், அரிய ஓலைச்சுவடிகளையும் தன்னகத்தே கொண்டுள்ள செம்மொழி நிறுவன நூலகத்தை உலகளாவிய நிலைக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் மின் நூலகமாக வடிவமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அமேஸான், கிண்டில் ஆகிய இணைய வழிகளில் செம்மொழி நிறுவன வெளியீடுகளைப் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழின் பெருமையை வட இந்திய மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி மொழிகளிலும் நிறுவன வெளியீடுகள் அமையப்பெற்றுள்ளன. 

மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தலைவராக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளார். துணைத் தலைவராக பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். இயக்குநராக பேராசிரியர் இரா. சந்திரசேகரன்  மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் கடந்த ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார்;  இவர் தமிழாய்வுக்காக 2009-ஆம் ஆண்டுக்கான குடியரசுத் தலைவர் விருதைப் பெற்றவர். 

எந்தெந்த தளங்களில் என்னென்ன அறைகள்?
கட்டட மதிப்பீடு- ரூ.24.65 கோடி 
கட்டுமான பரப்பளவு- 70 ஆயிரம் சதுர அடி
தரைத்தளம்- நூலகம், கருத்தரங்குக் கூடங்கள்
முதல்தளம்- இயக்குநர் அறை, நிர்வாகப் பிரிவுகள்
இரண்டாவது தளம்- கல்வி சார்ந்த அலுவலர்களுக்கான அறைகள்
மூன்றாவது தளம்- பன்னோக்கு ஒலி- ஒளி காட்சிக் கூடம்

நிறுவனத்தில் உள்ள புலங்கள்
1. இலக்கியம்
2. மொழியியல் 
3. மொழிபெயர்ப்பு
4அகராதியியல் 
5.மொழிகள்-மொழிக் கல்வி
6. வரலாறு, சமூகவியல், மானுடவியல் 
7.தொல்லியல்
8. சுவடியியல்
9. கல்வெட்டியல், நாணயவியல்
10.கலை, கட்டடவியல்
11.அயலகத் தமிழ்ப் புலம்
12. மொழித் தொழில்நுட்பப் புலம்

சேவைப் பிரிவுகள்
நூலகம் 
ஆவணக்காப்பகம்
அருங்காட்சியகம்
பதிப்புத்துறை
குறுந்திட்ட நல்கை
கருத்தரங்குகள்
முனைவர் பட்ட உதவித்தொகை
பயிலரங்குகள், பணியரங்குகள்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT