சிறப்புச் செய்திகள்

தமிழகத் தேர்தல்: அமித் ஷாவின் அதிரடி வியூகம்!

ஜெபலின்ஜான்

புதுச்சேரி: அரசியல் சாணக்கியர் என பாஜகவினரால் அழைக்கப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக சில அதிரடி வியூகங்களை வகுத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனசங்கம், பாரதிய ஜனதா கட்சியாக 1980-இல் உருமாறிய பிறகு, 1984-இல் அந்தக் கட்சிக்கு 2 எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனர். வட மாநிலங்களில் படிப்படியாக வளர்ந்த பாஜக 1998, 1999-களில் வாஜ்பாய் தலைமையில், மத்தியில் கூட்டணியுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இருப்பினும், 2004, 2009-களில் சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸிடம் பாஜக சறுக்கியது.

தொடர் தோல்வியிலிருந்த பாஜகவை 2014, 2019-களில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக் கட்டிலில் ஏற்றிய பெருமை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையே சாரும்.

காங்கிரஸ் இல்லாத பாரதம் என்ற கொள்கை முழக்கத்துடன் நாடு முழுவதும் கிட்டத்தட்ட பெரும்பாலான மாநில அரசுகளையும் பாஜக அல்லது பாஜக கூட்டணி கட்சிகள் கைப்பற்றியிருப்பதற்கு அமித் ஷாவின் வியூகம்தான் முக்கிய காரணம் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.

தேசிய அரசியலில் மோடிக்கு சாரதியாகச் செயல்பட்டுவரும் அமித் ஷா, அதிரடி அரசியல் வியூகங்கள் அமைப்பதில் வல்லவராகப் புகழப்படுகிறார். ஹிந்துத்துவ கொள்கையை பிரதானமாக வைத்திருந்தாலும், ஜாதி ரீதியிலான அரசியல் நகர்வுகளைக் கூர்ந்து கவனித்து, அதைத் தங்களுக்குச் சாதகமாக நகர்த்தி, பாஜகவின் வாக்கு வங்கியை அதிகரித்து, அடுத்த சில ஆண்டுகளில் அந்த மாநிலத்தில் பாஜகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதுதான் அமித் ஷாவின் பிரதான வியூகம்.

தொடர்ந்து பல ஆண்டுகளாக அரசியல் அதிகாரம் பெறாத ஜாதிகளைக் கண்டறிந்து, முக்கியத்துவம் அளித்து, அவர்கள் சார்ந்த வாக்குகளை பாஜகவின் நிரந்தர வாக்கு வங்கியாக மாற்றுவது அமித் ஷாவுக்கு கைவந்த கலை என்பதை இதுவரை நடந்த வடமாநில தேர்தல் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.

உயர் ஜாதியினரின் கட்சி என அழைக்கப்பட்ட பாஜகவுக்கு, இதர பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினர், ஏன் சிறுபான்மையினரில் சில பிரிவினர்கூட (கேரள சிரியன் கிறிஸ்தவர்கள், வட கிழக்கு மாநிலங்களில் சில கிறிஸ்தவ பிரிவினர், முத்தலாக் தடை சட்டத்தால் ஈர்க்கப்பட்ட இஸ்லாமிய பெண்கள்) நாடு முழுவதும் திரண்டு வாக்களித்து வருவதற்கு அமித் ஷாவின் வியூகம்தான் காரணம் என்கின்றனர் பாஜக ஆதரவாளர்கள்.

சமூகக் கட்டுமானத்தை மையமாக வைத்து, அரசியல் வியூகம் அமைப்பதுதான் அமித் ஷாவின் அடிப்படை தத்துவம். அந்த வகையில்தான், உத்தர பிரதேசத்தில் அதிகார மையங்களாக இருந்த யாதவர்கள், இஸ்லாமியர்கள், சமார் (மாயாவதியின் பிரிவு) ஆகியோருக்கு எதிராக ராஜ்புத், பிராமணர்கள், கோரி, குர்மி மற்றும் சிறிய எண்ணிக்கை ஹிந்துக்களான பண்டாரி, டெலி, ஜெய்ஸ்வால், அலுவாலியா, சமார் அல்லாத பிற தலித்துகளை ஒன்று திரட்டினார் அமித் ஷா. இதனால், அங்கு 4-ஆவது இடத்திலிருந்து முதலிடத்துக்கு முன்னேறியது பாஜக.

இதேபோல, பிகாரில் அதிகார மையமாக விளங்கிய யாதவர்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராக பூமிகார், ராஜ்புத், ஜெய்ஸ்வால், அலுவாலியா, தலித்துகளில் துசாத் (ராம்விலாஸ் பாஸ்வான் சார்ந்த பிரிவு) ஆகியவற்றைத் திருப்பி, வாக்கு வங்கியை உயர்த்தினார் அமித் ஷா.
 மகாராஷ்டிரத்தில் மராட்டியர்களுக்கு எதிராக மாலி, தங்கர், வஞ்சாரா, மொழிவழி சிறுபான்மையினர், பிராமணர்கள் ஆகியோரைத் திரட்டி வெற்றி கண்டார்.

ஹரியாணாவில் ஜாட் பிரிவுக்கு எதிராகவும், அஸ்ஸாமில் கோகோய் பிரிவுக்கு எதிராகவும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரையும், ஜார்க்கண்டில் பழங்குடியினருக்கு எதிராக இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளையும் திருப்பி வெற்றி கண்டார்.

தமிழகத்திலும் இதுபோன்ற வியூகத்தைச் செயல்படுத்த 60 ஆண்டுகால அரசியல் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்துள்ளார் அமித் ஷா. நாடு முழுவதும் பாஜக வரலாறு காணாத வெற்றியில் காங்கிரஸ் வீழ்ச்சியடைந்திருந்தாலும், தமிழகத்தில் மட்டும்தான் காங்கிரஸ் எழுச்சி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 52 எம்.பி.க்களில் இங்கு 9 பேர் (புதுவையும் சேர்த்து) வெற்றி பெற்றதை பாஜக தலைமை குறிப்பாக, பிரதமர் மோடியும், அமித் ஷாவும் விரும்பவில்லை.

கடந்த கால தேர்தல் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்தால், காங்கிரஸ்-திமுக கூட்டணி மக்களவைத் தேர்தலில் 1971-இல் 55.6 சதவீதம், 1980-இல் 55.8 சதவீதம், 2004-இல் 57.4 சதவீதம், 2009-இல் 42.5 சதவீதம், 2019-இல் 52.6 சதவீதம் என எப்போதும் 50 சதவீதத்துக்கு மேல் வாக்கு வங்கியைக் குவித்து வருகிறது.

கடந்த 2009-இல் ஈழத்தமிழர் விவகாரம் காரணமாக காங்கிரஸ் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டது. இதேபோல, 2014-இல் தனித்தனியாகப் போட்டியிட்டதால், திமுக 25 சதவீதம், காங்கிரஸ் 4.3 சதவீதம் வாக்குகளைப் பெற்றன. இந்த இரண்டு கட்சிகளும் சேரும்போது, இரு கட்சிகளின் கூட்டு வாக்குகளைவிட, 12 சதவீதம் வாக்குகள் கூடுதலாகக் கிடைக்கிறது. இதே கூட்டணி தொடர்ந்தால், 2024 மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸுக்கு தமிழகத் தேர்தல் களம் சாதகமாகவே இருந்துவிடக் கூடும்.

எனவே, அதற்கு முன்பு பாஜக வாக்கு வங்கியை உயர்த்துவது, திமுக கூட்டணியில் காங்கிரஸின் முக்கியத்துவத்தைக் குறைப்பது அல்லது திமுகவிடமிருந்து காங்கிரûஸ தனிமைப்படுத்துவது, அதற்கு முன்னோட்டமாக எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தல் களத்தை தயார்படுத்துவது - இதுதான் அமித் ஷாவின் கணக்கு என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.

கடந்த 2014-இல் இருந்தே தமிழகத்தில் வாக்கு வங்கியை உயர்த்தும் உத்தியை பாஜக செய்யத் தொடங்கிவிட்டது. இதுவரை பெரிய அளவில் அரசியல் அதிகாரம் பெறாத தேவேந்திர குல வேளாளர்களை (சுமார் 5.5 சதவீத வாக்கு வங்கி) தங்களுக்குச் சாதகமாக மாற்றும் வகையில், அவர்களுக்கு 7 உள் பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தது, கொங்கு மண்டலத்தில் இதுவரை அரசியல் அதிகாரம் பெறாமல் இருக்கும் அருந்ததியர்களை (3.5 சதவீத வாக்கு வங்கி) குறிவைத்து அந்தப் பிரிவைச் சேர்ந்த எல்.முருகனுக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்கியது ஆகியவை வாக்கு வங்கியை உயர்த்தும் திட்டத்தின் முதல்படிதான்.

அடுத்தகட்டமாக இதுவரை மத மாற்றம் செய்யப்படாத ஜாதியினர் என்ற பெருமிதம் கொள்ளும் முத்தரையர்கள் மற்றும் வலையர்களையும் (4 சதவீத வாக்கு வங்கி) தங்களுக்குச் சாதகமாக மாற்றும் வகையில், சில அரசியல் திட்டங்களை வகுத்துள்ளது பாஜக.

மும்மொழிக் கொள்கையைத் தூக்கிப்பிடிப்பதன் மூலம் மொழிவழி சிறுபான்மையினராக இருக்கும் நாயுடு, குரும்ப கவுண்டர்கள், ஒக்கலிக கெளடா, மலையாளிகள் உள்ளிட்டோரையும் தங்களுக்குச் சாதமாக மாற்றும் முயற்சியிலும் பாஜக ஈடுபட்டுள்ளது.

ஏற்கெனவே கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பிற பகுதிகளில் வசிக்கும் ஹிந்து நாடார்கள் பாஜகவுக்கு பாரம்பரியமாக வாக்களித்து வருகின்றனர். இவையெல்லாம் சாதகமாக வந்தால், தமிழகத்தில் 15 சதவீதத்துக்கு மேல் பாஜகவின் வாக்கு வங்கி பலம் பெறும். அதன் பின்னர், தமிழகத்திலும் கழகங்களுக்கு பாஜக மாற்று சக்தியாகவும், காங்கிரஸ் இல்லாத தமிழகத்தையும் உருவாக்கலாம் என்பதுதான் அமித் ஷாவின் அதிரடி வியூகம்.

தமிழகத்தைப் பொருத்தவரை ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருபெரும் ஆளுமைகள் மறைந்த நிலையில், தேர்தல் வாக்கு வங்கியில் மிகப் பெரிய இடப்பெயர்வு தொடர்ந்து நடக்கிறது என்பதையும் கணக்குப் போட்டு காய் நகர்த்துகிறார் அமித் ஷா. வாக்குகளின் இடப்பெயர்வைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றுவதற்கான முதல் கட்டத்துக்கு அதிமுக எனும் ஏணி பாஜகவுக்கு தேவை என்பதை பாஜக தலைமை உணர்ந்துள்ளது.

அதேநேரம் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைக்க அதிமுகவுக்கு பாஜக கூட்டணி அவசியம்.

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளைப் பெற்று பாஜக உறுப்பினர்களை பேரவைக்கு அனுப்புவதும், 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் வெற்றியைத் தமிழகத்தில் தடுப்பதும்தான் அமித் ஷாவின் தற்போதைய வியூகம். வட மாநிலங்களில் வெற்றி பெற்ற அமித் ஷாவின் வியூகம், தமிழகத்தில் எடுபடுமா என்ற கேள்விக்கு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுபதில் சொல்லும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT