முக்கியச் செய்திகள்

எரிவாயு, எண்ணெய் நிறுவன ஊழியர்களுக்கு கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் தன்னார்வல மருத்துவர்

27th May 2021 01:29 PM | செ. பிரபாகரன்

ADVERTISEMENT

கம்பம்: எரிவாயு மற்றும் எண்ணெய் நிறுவனங்களில் பணியாற்றும், விநியோகம் செய்யும்  ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி பற்றிய அச்சத்தை தேனி மாவட்டம் சுருளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தன்னார்வ இளைஞர் நிக்சய் பொன் கட்சிக்கண்ணன் என்ற மருத்துவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இவரது பணி தென் மாவட்டங்களில் அதிக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது கரோனா தொற்று பரவல் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. நாம் எதிர்பார்க்காதவர்களான இளைஞர் முதல் பெரியவர்கள் வரை உயிர்ப்பலிகள் அதிகம் ஏற்படுகிறது.

கரோனா தொற்று பொதுமுடக்கம் காரணமாக மருத்துவப் படிப்பை முடித்து வீட்டில் இருந்த மருத்துவர் நிக்சய் பொன் கட்சிக்கண்ணன் மனதில் ஒரு புதிய எண்ணம் தோன்றியது.

முதலில் தாங்கள் நடத்தும் எரிவாயு உருளை நிறுவனத்தில் விநியோகம் செய்யும் ஊழியர்கள் கரோனா தடுப்புசி போட்டார்களா என்று விசாரித்தார்.

ADVERTISEMENT

அதற்கு அவர்கள் தடுப்பூசி போடுவதற்கு பயமாக உள்ளது. ஊசி போட்டவர்கள் இறக்கின்றனர், இதனால் தங்கள் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர் என்று தெரிவித்தனர்.

இவர்களது பேச்சால் குழப்பமடைந்த மருத்துவர் இவர்களுக்கு சரியான முறையில் ஆலோசனை வழங்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.

முதல் கட்டமாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் ஜெயதேவனிடம் கலந்து ஆலோசித்தார். தடுப்பூசி போடவும் வீடுகளுக்கு, வாகனங்களுக்கு பெட்ரோல்,  டீசல் விநியோகம் செய்யும் ஊழியர்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் என்று கருத்து தெரிவித்தார். 

பொது முடக்கம் என்பதால் அவர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் மூலம் காணொலி காட்சி மூலம் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்று கோரினார்.

அதன் அடிப்படையில் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனைகள், விழிப்புணர்வு  வழங்க அனுமதி கிடைத்தது. அதன் எதிரொலியாக சென்னை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தர்மபுரி, தூத்துக்குடி உள்ளிட்ட சுமார் 25 மாவட்டங்களில் எரிவாயு உருளை பெட்ரோல் முகவர்கள் தங்களது ஊழியர்களுக்கு, கரோனா தடுப்பூசி போடுவதற்கான  விழிப்புணர்வு வழங்க ஏற்பாடு செய்தனர்.

 அதனடிப்படையில் எரிவாயு மற்றும் எண்ணெய் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அவர்களின் அலுவலர்கள் காணொளி காட்சிக்கு ஏற்பாடு செய்தனர். அதன் மூலம் மருத்துவர் கலந்துரையாடினார்.

கலந்துரையாடலில் வாகன ஓட்டிகளான பொதுமக்களை நேரடியாக சந்திக்கின்ற நபர்களாகவும், வீடுகளுக்கு சென்று எரிவாயு உருளை விநியோகம் செய்பவர்களாகவும் இருக்கின்றவர்கள் முதலில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தினார்.

அவர்களுக்கு எழுந்த சந்தேகங்களை காணொலிக் காட்சி மூலம் தெளிவுபடுத்தினார். அதன் காரணமாக  எரிவாயு மற்றும் எண்ணெய் நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் ஆயிரத்துக்கும் மேலான ஆண், பெண் ஊழியர்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

இதுபற்றி மருத்துவர் நிக்சய் பொன்காட்சிகண்ணனிடம் கேட்டபோது, கரோனா தடுப்பூசி போடுவதில் எண்ணெய், எரிவாயு உருளை விநியோகம் செய்யும் அடிப்படை ஊழியர்களுக்கு நிறைய அச்சம் உள்ளது.

எல்.பி.ஜி. நிறுவனத்தின் கரோனா சிகிச்சைக்காக, மாவட்ட வாரியாக அந்தந்த பகுதி  மருத்துவமனைகளில் தங்களது ஊழியர்களுக்கு படுக்கை வசதி செய்வதற்கு ஏற்பாடுகள் செய்ய சுற்றறிக்கை வந்தது.

இது நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும், மேலும் கரோனா சிகிச்சை யாருக்கும் முன்னுரிமை வழங்காமல் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

அதற்கு பதிலாக தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தனால் நன்றாக இருக்கும் என்று நினைத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் அனுமதி பெற்று காணொலிக் காட்சி மூலம் அவர்களுக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களை விளக்கி வருகிறேன். எரிவாயு உருளை விநியோகம் செய்யும் ஊழியர்கள் வாடிக்கையாளர்களின் வீட்டு சமையலறை வரை செல்வதால், தடுப்பூசி போட்டுக்கொண்டால் அனைவருக்கும் நல்லது என்றார்.

மேலும், காணொலிக் காட்சி கலந்தாய்வில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் இறந்துவிடுவார்கள் என்ற அச்சத்தை முற்றிலுமாகப் போக்கி அவர்களுக்கு வேறு ஏதேனும் நோய்கள் இருந்தால் ஒழிய தடுப்பூசி போட்டுக்கொண்டால் இறப்பு ஏற்படாது என்று தெளிவாக விளக்கப்பட்டது.

ஒரு நாளைக்கு 2 கட்டங்களாக காணொலிக் காட்சி நடைபெறும். அதில் குறைந்தபட்சம் 25 முதல் 30 பேர் வரை அமர்கின்றனர். அவர்களுடன் எரிவாயு, எண்ணெய் நிறுவன அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். இதற்கு கட்டணம் இல்லை, கரோனா தொற்றை அகற்ற வேண்டும். மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்றார்.

மேலும், கரோனா தொற்று பரவாமல் இருக்க அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், வாடிக்கையாளர்களுக்கும் தகுந்த விழிப்புணர்வும், முக கவசம் பணியாற்றும் நிறுவனங்கள் மூலம்  வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறேன் என்றார்.

புதுதில்லியில் உள்ள சந்தோஷ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ்., படிப்பை முடித்த மருத்துவர் நிக்சய் பொன்கட்சிக் கண்ணன் தற்போது முதுநிலை மருத்துவப் படிப்பிற்காக நீட் தேர்வு எழுதுவதற்கு தயாராகி வருகிறார்.

இந்திய மருத்துவ குழுமத்தின் மூத்த மருத்துவர்கள், தற்போது கரோனா தொற்று களத்தில் பணியாற்றும் மருத்துவர்களின் காணொலிக் காட்சி கலந்தாய்வில் பங்கேற்று சந்தேகங்களை தெரிந்துகொள்கிறார். தொற்று பரவாமல் இருக்க ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் தனது நோக்கம் என்றும் தெரிவித்தார். 

காணொலிகாட்சி மூலம் விழிப்புணர்வு பெற்ற நிறுவனங்கள் மருத்துவருக்கு தங்கள் நிறுவனத்தில் இத்தனை ஊழியர்கள் உங்களது விழிப்புணர்வால் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள் என்கின்ற பதிலையும் அவருக்கு கட்செவி அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைப் போன்று ஒவ்வொரு மருத்துவர்களும் தன்னார்வலர்களாக மாறி விழிப்புணர்வு ஏற்படுத்தினால் கரோனா தொற்றை முற்றிலும் ஒழிக்கலாம்.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT