திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

‘ஸ்டாலின், வைகோ கெமிஸ்ட்ரி’ கேள்விக்கு வைகோவின் பதில்!

By RKV| DIN | Published: 17th July 2019 06:11 PM

 

வைகோ ராஜ்ய சபா எம் பி ஆகலாமா? கூடாதா? அவர் மீண்டும் ஸ்டாலினோடு இணைவது அரசியல் சந்தர்ப்ப வாதமா? திராவிட இயக்கத்தைப் பாதுகாக்கும் முகாந்திரமா? என்றெல்லாம் ஒருபக்கம் விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்க வைகோ நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு நேர்காணலொன்று அளித்திருந்தார். அதில் மீண்டும் ஸ்டாலினுக்கும் உங்களுக்குமான கெமிஸ்ட்ரி எப்படி சாத்தியப்பட்டது? என்ற கேள்விக்கு வைகோ அளித்த பதில்; 

‘தளபதி ஸ்டாலின் அவர்களை முதல் சுற்றுப்பயணம் அழைத்துச் சென்று நடத்தியதே நான் தான். நான் திருநெல்வேலி, தேரடியில் அவருக்காக ஒரு பிரம்மாண்டமான கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தும் போது அதிமுக வினர் அவரை அட்டாக் செய்து போஸ்டர்கள் எல்லாம் போட்டார்கள். என் தலைவர் மகனை அழைத்துக் கொண்டு வருவேன், கேட்பதற்கு நீ யார்? என்று சொல்லி எட்டுக்குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் வைத்து அழைத்து வருவேன்னு நான் அப்போ பேசினேன். அவரது சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்து அவர் இளைஞரணியில் சைக்கிள் பேரணி அறிவித்த போது 38 நாட்கள் தொடர்ந்து கொதிக்கும் வெயிலில் உடலெல்லாம் கொப்புளமாகும் அளவுக்கு சிரமத்தைப் பொருட்படுத்தாமல் நானே அந்த இளைஞரணி சைக்கிள் பேரணியில் உடன் சென்றேன். அவர் என்னுடைய வீட்டில் வந்து இரண்டு முறை தங்கியிருக்கிறார்.  இப்ப இருக்கக் கூடிய உதயநிதி சின்ன கைக்குழந்தையா இருந்தப்போ ஸ்டாலின் தன் மனைவி மகனோட எங்க வீட்டுக்கு வந்திருந்தார். அப்பொழுது எங்கம்மா தான் பசும்பால் காய்ச்சிக் கொடுத்தாங்க. அப்படி ரொம்ப நெருக்கமா, பாசமா இருந்தவரு. என் மேல அலாதியான ப்ரியத்தை வச்சிருந்தவரு. அதனால அவர் மேல எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. அவர் வந்து இப்ப ரொம்ப முதிர்ச்சி அடைந்திருக்கிறார். என்னை நடத்துகிற விதம், என்கிட்ட அன்பு காட்டற விதம், அதில் அணு அளவும் எந்தவிதமான போலித்தன்மையும் இல்லை. அதுல ஒரு உயிர்த்தன்மை இருக்கு. பொதுவாழ்க்கையில் 55 வருஷமா இருக்கற என்னால அதை உணர முடியுது. அதனால நான் அவருக்கு பக்கபலமா, அதாவது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு, திராவிட இயக்கத்துக்கு (நான் திராவிட இயக்கத்தில் வார்பிக்கப்பட்டவன், இதிலே உருவாகி வளர்ந்தவன்.. இன்னைக்கு திராவிட இயக்கத்துக்கு பெரிய சோதனைக்காலம். அகில இந்தியாவையே கபளீகரம் செய்து ஆக்டோபஸ் கரங்களால் திராவிட இயக்கத்தின் தொட்டிலாக இருக்கக் கூடிய தமிழகத்தையும் வளைத்து விட முயற்சி நடக்கிறது என்பது என் மனதைப் பதற வைக்கிறது. இதைப் பற்றியெல்லாம் ஆழமாக யோசித்த போது தான் நமக்கென்று ஒரு சக்தி இருக்கிறது. தொண்டர்கள் பலம். அது எண்ணிக்கை அல்ல, ஒருவர் 100 பேருக்குச் சமம்னு கூட இன்னைக்கு ஒரு பத்திரிகை கார்ட்டூன்ல போட்டிருக்காங்க அது உண்மை தான். ஒருவர் 100 இல்ல 1000 பேருக்குச் சமம், அப்படிப்பட்ட தொண்டர்கள் இருக்காங்க. ஒரு வன்முறைக்குப் போனதுண்டா? ஒரு பத்திரிகை எங்களைப் பற்றித் தப்பாக எழுதினால் அவங்களைப் போய் கல் வீசப்போயிருக்காங்களா? நான் மற்ற கட்சிகளைப்பற்றி சொல்ல விரும்பவில்லை. அப்படிப்பட்ட ஒரு சக்தியை வீணாக்கி விடக்கூடாது. அது திராவிட இயக்கத்துக்குப் பயன்படட்டும். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வலு சேர்க்கட்டும்ங்கறதை கட்சில ஒரு சின்ன மனபேதம், கருத்து பேதம் இல்லாமல் முடிவெடுத்து அங்க போய் சொன்னோம். தலைவரைப் பார்க்கப் போனேன். அவரை முதல் தடவை பார்த்த போது என் கையைப் பிடித்தவர் விடவே இல்லை.ஆமாம், ரெண்டாவது தடவை போன போதும் கண்கலங்க நெகிழ்ச்சியோட தான் என்னை அழைச்சிட்டுப் போய் தலைவர் கலைஞர் கிட்ட பேசும் போது, ‘அப்பா, வைகோ வந்திருக்கார்னு’ சொன்னார்.  அப்போ நான் தலைவர் கலைஞர் கிட்ட சொன்னேன், உங்களுக்கு 29 வருடங்கள் தொடர்ந்து நிழலாக இருந்தேன், கவசமாக இருந்தேன். அது போல தம்பிக்கும் நான் இருப்பேன்னு சொன்னப்போ அவர் அவ்வளவு பூரிச்சுப் போனார்ங்கிறதை திருச்சியில் வீரபாண்டியார் நூல்வெளியீட்டு விழாவில் ஸ்டாலினே குறிப்பிட்டுச் சொன்னார். அதனால நான் திராவிட இயக்கத்தைப் பாதுகாக்க என்ன செய்யனுமோ அதைத்தான் முழுமனதோடு இப்போது செய்திருக்கிறேன். அவர்களோடு இணைந்திருக்கிறேன்.’
 

Concept & Image courtesy: news18 channel

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : Stalin vaiko chemistry! ஸ்டாலின் வைகோ கெமிஸ்ட்ரி

More from the section

ஐந்து நாட்கள்..மூன்று நாடுகள்..ஜி7 மாநாடு..அமீரகத்தின் உயரிய விருது: ஆகஸ்ட் 22 இல் மோடி பிரான்ஸ் பயணம் 
7 நாட்களில் அரசு பங்களாவை காலி செய்யுங்கள்: 200-க்கும் மேற்பட்ட முன்னாள் எம்பி-க்களுக்கு உத்தரவு
பிகார் முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா மரணம் 
காஷ்மீர் விவகாரம்: அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை 
அத்திவரதர் சிலை வைக்கப்பட்டிருக்கும் அனந்தசரஸ் குளத்தில் ஆழ்துளைக் கிணற்று நீரை நிரப்ப நீதிமன்றம் உத்தரவு