திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

ஸ்ரீராமனின் வம்சாவளியினர் யார்? இப்போது எங்கு இருக்கிறார்கள்? உச்சநீதிமன்ற கேள்விக்கான  எதிர்வினைகள்!

By கார்த்திகா வாசுதேவன்| DIN | Published: 13th August 2019 11:52 AM

 

ஸ்ரீராமனின் வாரிசுகள் என்னவானார்கள்? அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்? உச்சநீதிமன்றக் கேள்விக்கான பதில்...

ராம ஜன்ம பூமி விவகாரத்தைப் பற்றி பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள்?

இதற்கு பதில் அளிக்க வேண்டுமென்றால் நாம் நமக்குத் தெரிந்த ராமாயணத்தை மீண்டுமொரு நினைவில் ஓட்டிப்பார்க்க வேண்டும்.

எங்கு முடிகிறது ராமாயண ராமனின் கதை?

அன்னை சீதாபிராட்டியை பூமித்தாய்க்கு தாரை வார்த்தபின் வாரிசுகளான லவகுசர்களை அழைத்துக் கொண்டு அயோத்தியை ஆளச் சென்றுவிடுகிறார் ஸ்ரீராமர்.

அங்கு ஏகபத்தினி விரதனாக ஆண்டு முடித்த ராமன், வயோதிகப் பருவம் அடைந்ததும் தனது வாரிசுகளுக்கு ஆட்சியுரிமையை விட்டுக் கொடுக்கவும், ஒரு தகப்பனாக தனது கடமையைச் செவ்வனே செய்யவும் முடிவெடித்து சரயு நதியில் இறங்கி பிறவியை முடித்துக் கொள்கிறார் என முடிகிறது வால்மீகி ராமாயணம்.

ராமாயணம் இத்துடன் முடிந்ததென்றால் லவ குசர்கள் என்ன ஆனார்கள்?

இஷவாகு வம்சம் என்பது லவகுசர்களோடு முடிவடைந்து விட்டதா?

ஸ்ரீராமனின் வம்சாவளியினர் என்னவானார்கள்?

இப்படி ஒரு கேள்வியை நான் மட்டும் கேட்கவில்லை இந்தியாவில் உச்சபட்ச அதிகாரங்கள் கொண்டதான உச்சநீதிமன்றம், ராமஜன்ம பூமி விவகாரத்தில் மிக வெளிப்படையாக இதே விஷயத்தை வாதிப் பிரதிவாதிகளிடம் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

அந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக இப்போது இரண்டு வி ஐ பிக்கள் கிளம்பியிருக்கிறார்கள். அவர்கள் யாரென்றால்? ஒருவர் மேவார் மற்றும் உதய்பூர் ராஜ குடும்பத்தைச் சார்ந்த மஹேந்திர சிங் மற்றும் ஜெய்ப்பூர் ராஜகுடும்பத்தைச் சார்ந்த தியாகுமாரி என இருவருமே தாங்கள் ஸ்ரீராம பிரானின் வாரிசுகளான லவகுசர்களின் இன்றைய வாரிசுகள் என உறுதிபட அறிவித்திருக்கிறார்கள். 

என்ன தான் ராஜகுடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என நீதிமன்றத்துக்கு எந்த விதமான நிர்பந்தமும் இல்லை. எனினும் உச்சநீதிமன்றம், இது விஷயமாகக் கேள்வி எழுப்பியதால் மட்டுமே வாரிசுதாரர்கள் எனும் முறையில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள இவர்கள் முன்வந்ததாகக் கூறியுள்ளனர். அது மட்டுமல்ல, தேவைப்பட்டால் தாங்கள் லவகுசர்களின் வாரிசுகள் என்பதற்குத் தேவையான அனைத்து விதமான ஆதாரங்களையும் சமர்பிக்க இவர்கள் தயாராக இருக்கிறார்களாம்.

லவ குசர்களின் வாரிசுகள் இன்னும் உலகின் வெவ்வேறு இடங்களில் இருக்கலாம், அதைப்பற்றிக் கண்டறிய வேண்டுமென்றால் தங்களது ராஜ குடும்பத்திற்குச் சொந்தமான நூலகத்தில் தலைமுறை, தலைமுறைகளாகப் பாதுகாக்கப்பட்டு வரும் ‘ஃபேமிலி ட்ரி’ (குடும்ப வம்சாவளி கிளையினரை அறிந்து கொள்ள உறுப்பினர்களின் பெயர்களோடு குறித்து வைக்கப்படும் பேரேடு) புத்தகம் மற்றும் ஓவியங்களையும் நீதிமன்றத்தில் காட்சிப்படுத்த தாங்கள் தயாராகவே இருப்பதாக மேற்கண்ட இருவரும் தெரிவித்துள்ளனர்.

இவர்களிடம் இருக்கும் ஃபேமிலி ட்ரியின் அடிப்படையில் பார்த்தால் மாமன்னர் தசரதரின் பெயர் இஷவாகு குலப் பட்டியலில் 62 வதாகவும், ஸ்ரீராமனின் பெயர் 63 வதாகவும், லவகுசர்களின் பெயர்கள் 64 வதாகவும் இடம்பெற்றுள்ளதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விஷயத்தில் முதலில் வாரிசுரிமை கொண்டாடியது ராஜஸ்தான் பாஜக எம்பியும் ஜெய்ப்பூர் ராஜ குடும்ப வாரிசுமான தியாகுமாரியே. அவரைத் தொடர்ந்து தற்போது மேவார் உதய்பூர் ராஜகுடும்ப வாரிசான மஹேந்திர சிங்கும் உச்சநீதிமன்றம் விரும்பினால் தனது வாரிசுரிமையை ஆதாரங்களுடன் சமர்பிக்கத் தயார் என்று முன் வந்திருக்கிறார்.

இவர்களது உரிமை கொண்டாடல் உண்மையாகவும் இருக்கலாம், உண்டாக்கப்பட்டதாகவும் அல்லது கற்பிதமாகவும் இருக்கலாம். அதைக் கண்டறிய வேண்டிய பொறுப்பும் கடமையும் நம் நீதித்துறைக்கு உண்டு. ஏனென்றால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் தொடங்கி இன்று வரையிலும் இந்திய மக்களின் மத உணர்வுகளை பற்றி எரியச் செய்யத்தக்க நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும் விவகாரங்களில் ராமஜன்ம பூமி பிரச்னைக்கு பிரதான இடமுண்டு.


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : ராமாயணம் ராம ஜன்ம பூமி இஷவாகு வம்சாவளியினர் ஜெய்ப்பூர் ராஜகுடும்பம் மேவார் ராஜகுடும்பம் லவகுசர்கள் உச்சநீதிமன்றம் lord sri ram lavakush lord sriram's clans jaipur royal family ram janma boomi

More from the section

அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளிய அத்திவரதர்
தமிழகத்தில் மேலும் 7 நகரங்களில் போதை மறுவாழ்வு மையங்கள்: விரைவில் அமைக்கத் திட்டம்
ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விடுவிப்பதில் தாமதம்: விளையாட்டுப் போட்டிகளை புறக்கணிக்கும் அரசுப் பள்ளிகள்!
தத்கல் டிக்கெட் முன்பதிவு: 9 ஆண்டுகளில் வருவாய் இருமடங்காக உயர்வு
தனித்துவம் மிகுந்ததாக ஆக்கப்படுமா: அரியலூர் பாசில் அருங்காட்சியகம்?