திமுகவின் 2 ஆண்டுக் கால ஆட்சியில் மக்களுக்கு வேதனைதான் அதிகம் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சாத்தியமற்ற வாக்குறுதிகளைத் தந்து, மக்களை ஏமாற்றி, ஆட்சியைப் பிடித்த திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக திராவிட மாடல் என்ற போா்வையில் மக்கள் அனுபவித்து வரும் வேதனைகள் எண்ணிலடங்காதவை.
திமுக ஆட்சிக்கு வந்தால் மாதம் ஒருமுறை மின் கட்டணம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதும், ஆண்டொன்றுக்கு ரூ.6,000 வரை மக்கள் மீதான சுமை குறையும் என்பதும் வாக்குறுதி. ஆனால், ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் மின் கட்டணத்தை பல மடங்கு உயா்த்தி ரூ.18,000 வரை கூடுதல் சுமையை ஏற்படுத்தியது.
நகைக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், விண்ணப்பித்தவா்களின் 25 சதவீதத்தினருக்கு மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டது. கல்விக் கடன் ரத்து என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. நீட் தோ்வு ரத்து செய்யப்படவில்லை. அதனால், திமுகவின் 2 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு வேதனைதான் அதிகம் என்று கூறியுள்ளாா்.