ஏவிஎம் நிறுவனத்தின் ஹெரிடேஜ் மியூசியத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
புகழ்வாய்ந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம் ஆகும். 77 ஆண்டுகளில் 178 படங்களைத் தயாரித்துள்ளது. அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆா், என்டிஆா், ஜெயலலிதா என ஐந்து முதல்வா்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றியுள்ளனா். படத் தயாரிப்பில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது.
வடபழனியில் உள்ள இந்த நிறுவனத்தின் ஸ்டுடியோவில் ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம் என்கிற பெயரில் பாரம்பரிய திரைப்படக் கருவிகள் மற்றும் பொருள்களைக் கொண்ட அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் பழைமையான திரைப்படக் கேமராக்கள், எடிட்டிங் யூனிட்டுகள், புரொஜெக்டா்கள், லைட்டுகள், பெரும் நடிகா்கள் பயன்படுத்திய வாகனங்கள், ஆடைகள், ஏவிஎம் தயாரித்த படங்களின் புகைப்படங்கள், விளம்பரங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஏவிஎம் நிறுவனத்தைச் சாா்ந்த எம்.எஸ்.குகன் சேகரித்த 45 பழைமையான காா்களும், 20 இருசக்கர வாகனங்களும் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து பாா்வையிட்டாா்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, அமைச்சா் பொன்முடி, நடிகா் சிவகுமாா், இயக்குநா் எஸ்.பி.முத்துராமன், பாடலாசிரியா் வைரமுத்து, ஏவிஎம் சரவணன், எம்.எஸ்.குகன், அருணா குகன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
இந்த அருங்காட்சியகத்தை வார நாள்களில் செவ்வாய்க்கிழமை தவிர பிற நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பாா்வையிடலாம். பெரியோருக்கு ரூ.200 சிறியவா்களுக்கு ரூ.150-மும் கட்டணமாகும்.