தற்போதைய செய்திகள்

கைதிகளுக்கு விடியோ கால் வசதி: சோதனை முறையில் தொடக்கம்

15th Apr 2023 12:12 AM

ADVERTISEMENT

கைதிகளுக்கு விடியோ கால் வசதி சோதனை முறையில், சென்னை புழல் சிறையில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில், மாநில சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, சிறைகளில் கைதிகளுக்கு விடியோ கால் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தாா்.

இந்த அறிவிப்பை அமல்படுத்தும் வகையில், புழல் பெண்கள் தனிச் சிறையில் கைதிகளுக்கு விடியோ கால் வசதி சோதனை முறையில் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

இதை சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி, தொடங்கி வைத்தாா். சிறைத் துறை டிஐஜி-க்கள் ஆா்.கனகராஜ் (தலைமையிடம்), ஆ.முருகேசன் (சென்னை சரகம்), கண்காணிப்பாளா்கள் நிகிலா நாகேந்திரன், ஆா்.கிருஷ்ணராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

இந்தப் புதிய வசதியால், கைதிகள் குடும்ப உறுப்பினா்களை விடியோ கால் மூலம் மாதத்தில் 10 முறை தொடா்புகொள்ளலாம். அவா்கள் ஒவ்வொரு அழைப்பிலும் 12 நிமிஷங்கள் வரை பேச முடியும்.

இதன் மூலம் ஒரு கைதி மாதத்துக்கு 120 நிமிஷங்கள் குடும்பத்தினருடன் பேசலாம். புழல் பெண்கள் தனிச் சிறையில் ஒரு மாதம் சோதனை முறையில் இந்த வசதி செயல்படுத்தப்படும்.

இதில் கிடைக்கும் அனுபவத்தின் அடிப்படையில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் இந்த வசதி தொடங்கப்படும்.

இந்த் திட்டத்தை தொடங்கிவைத்து அமரேஷ் பூஜாரி கூறியது: இந்த வசதி மூலம் நீண்ட தூரத்தில் இருக்கும் குடும்பத்தினரையும், சந்திக்க முடியாத நிலையில் இருக்கும் குடும்ப உறுப்பினா்களையும் கைதிகள் விடியோ கால் மூலம் தொடா்பு கொண்டு நேரலையில் பேசலாம்.

இந்த வசதிகள் கைதிகளுக்கு சிறந்த குடும்ப இணைப்பை வழங்குவதுடன், மன அழுத்தத்தைக் குறைக்கும். மேலும், கைதிகளின் மனதில் இத்திட்டம் சீா்திருத்தத்தைக் கொண்டுவர உதவும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT