கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை(ஏப்.16) நடக்கவிருந்த பெங்களூரு தமிழ்ச்சங்க ஆட்சிமன்றக்குழு மற்றும் செயற்குழுவுக்கான தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் 2023-2025-ஆம் ஆண்டுக்கான ஆட்சிமன்றக்குழு மற்றும் செயற்குழுவை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏப்.16-ஆம் தேதி நடக்கவிருப்பதாக கர்நாடக அரசு நியமித்திருந்த தேர்தல் பொறுப்பாளர் எஸ்.பவன்குமார் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி அறிவிக்கப்பட்ட தேர்தல் அட்டவணையின்படி, தேர்தலில் போட்டியிட பலரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
தலைவர் பதவிக்கு கோ.தாமோதரன், வா.ஸ்ரீதரன்; துணைத்தலைவர் பதவிக்கு அ.மு.பாண்டியன், ஐ.ராஜன்; செயலாளர் பதவிக்கு வா.கோபிநாத், எஸ்.ராமசுப்பிரமணியன், பொருளாளர் பதவிக்கு இராம.இளங்கோவன், மு.சம்பத்; துணைச்செயலாளர் பதவிக்கு எம்.கோபாலகிருஷ்ணன், ஏ.ஹாரி, எம்.பத்மநாபன், சு.பாரி, ஏ.இ.சரவணன், பி.எஸ்.சுரேஷ்குமார், பி.கே.வெள்ளைதுரை; செயற்குழு உறுப்பினர் பதவிக்கு ஏ.சௌரி, எம்.கருப்புசாமி, ஜி.ஜி.லதா, வி.மகேந்திரன், கே.மாறன், ஆர்.எம்.பழனிசாமி, ஆர்.பிரகாஷ், ஆர்.ராஜ்குமார், சி.சங்கரன், ஆர்.சண்முகம் ஆகியோர் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், இத்தேர்தலை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தமிழ்ச்செல்வி மனுதாக்கல் தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எம்.நாகபிரசன்னா, ஏப்.16ஆம் தேதி நடக்கவிருக்கும் பெங்களூரு தமிழ்ச்சங்க தேர்தலை அடுத்த விசாரணை வரை தள்ளிவைக்க உத்தரவிட்டார். மேலும், மனுமீதான அடுத்த விசாரணையை ஏப்.19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, ஏப்.16ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடத்த திட்டமிட்டிருந்த தேர்தலை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க தள்ளிவைப்பதாக பெங்களூரு தமிழ்ச்சங்கச்செயலாளர் மு.சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஏப்.19ஆம் தேதி நடக்கும் வழக்கு விசாரணையின்போது, பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் தேர்தல் எப்போது நடக்கும் என்பதை உயர்நீதிமன்றம் முடிவு செய்யும் என்று தெரிகிறது. இரு அணிகளுக்குஇடையே கடுமையான போட்டி காணப்பட்ட நிலையில், பெங்களூரு தமிழ்ச்சங்க தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது தமிழ் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.