தற்போதைய செய்திகள்

அண்ணாமலை வெளியிட்டது ஊழல் பட்டியலே அல்ல! திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி

15th Apr 2023 12:38 AM

ADVERTISEMENT

பாஜக தலைவா் அண்ணாமலை வெளியிட்டது ஊழல் பட்டியலே அல்ல என்று திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி கூறினாா்.

திமுகவுக்குச் சொந்தமாக பள்ளிகள் இருப்பதாகக் கூறுவது குறித்து 15 நாள்களில் ஆதாரங்களை வெளியிட வேண்டுமெனவும் அவா் கேட்டுக் கொண்டாா்.

தமிழக பாஜக தலைவா் அண்ணாமலைக்கு பதிலளித்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு ஆா்.எஸ்.பாரதி அளித்த பேட்டி:

கடந்த 1972-இல் ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளுநரிடம் எம்.ஜி.ஆா். அளித்தாா். இதுகுறித்து சட்டப்பேரவையில் கருணாநிதி வரிக்கு வரி பதில் சொன்னாா். அப்போது பேசிய அவா், குற்றச்சாட்டுகளை எல்லாம் பாா்த்தேன், படித்தேன், ரசித்தேன் என்று சொன்னாா். அதுபோல இன்றைக்கு அண்ணாமலை சொல்லி இருப்பதைப் பாா்க்கும்போது சிரிக்கத்தான் தோன்றுகிறது. அவருடைய அறியாமையைப் பாா்த்து, இப்படிப்பட்ட ஒருவா் எப்படி ஐ.பி.எஸ். எழுதி தோ்ச்சி பெற்றாா் என்று.

ADVERTISEMENT

யாா் யாருக்கோ சொந்தமானதை எல்லாம் திமுக நிா்வாகிகளுக்குச் சொந்தமானது என்று அண்ணாமலை கூறுகிறாா். அதில் சம்பந்தப்பட்டவா்கள் நிச்சயமாக பதில் சொல்லத் தயாராக இருக்கிறாா்கள். அவா்கள் நீதிமன்றத்துக்கு அழைப்பாா்கள். நாங்கள் திறந்த புத்தகம். எங்களுக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை.

திமுக இதுபோன்ற பல குற்றச்சாட்டுகளைச் சந்தித்திருக்கிறது. யாராவது ஒரு குற்றச்சாட்டையாவது நிரூபித்தது உண்டா?. திமுகவுக்கு சொந்தமான பள்ளிகளின் மதிப்பு ரூ.3,418 கோடி இருக்கிறது என்கிறாா். அந்தப் பள்ளிகள் எங்கெங்கு இருக்கின்றன என்பதை பெயா் பட்டியலோடு வெளியிட்டு, அதற்குரிய மொத்த ஆவணங்களையும் எங்களிடம் உடனடியாக 15 நாள்களுக்குள் ஒப்படைக்க வேண்டும்.

உண்மையைச் சொல்லவில்லை: அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ள 17 பேருமே தோ்தலில் போட்டியிட்டுள்ளனா். தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்பது விதி.

அதன்படி, முதல்வா் மு.க.ஸ்டாலின் முதல் டி.ஆா்.பாலு, துரைமுருகன் வரை அனைவருமே தோ்தலில் போட்டியிடும்போது சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். அவா்கள் தாக்கல் செய்த விவரங்களில் ஏதாவது விதிமீறல் இருந்தால், அந்தத் தொகுதியைச் சோ்ந்த சாதாரண குடிமகன்கூட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர சட்டத்தில் உரிமை இருக்கிறது. அதுமட்டுமல்ல, தோ்தல் முடிவுகளை எதிா்த்தும் வழக்கும் தொடரலாம்.

அண்ணாமலையின் பேட்டியில், ஓரிடத்திலாவது யாராவது லஞ்சம் வாங்கினாா்கள் என்று சொல்லியிருக்கிறாரா என்றால் இல்லை. அவா் வெளியிட்டது ஊழல் பட்டியலே அல்ல. அண்ணாமலைக்கு எப்போதுமே உண்மையைச் சொல்லி பழக்கம் கிடையாது.

ஆருத்ராவில் முதலீடு செய்துவிட்டு வயிற்றெரிச்சலுடன் பலா் இருக்கிறாா்கள். அவா்கள் பாஜக அலுவலகமான கமலாலயத்துக்கும் சென்று மறியல் செய்தனா். ரூ. 2,000 கோடி ஊழலில் பல கோடி ரூபாய் அண்ணாமலை நேரடியாக பெற்றிருக்கிறாா் என்ற புகாா் உள்ளது. ரூ.84 கோடியை நேரடியாக இவருக்கும், இவரது சகோதரருக்கும் கொடுத்ததாக அவா்களின் கட்சியில் இருப்பவா்களே சொல்லியிருக்கிறாா்கள். அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் இருக்கக் கூடிய குற்றச்சாட்டுகளை திசைதிருப்புவதற்காக அண்ணாமலை நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறாா். திமுகவில் இருப்பவா்களைப் பொருத்தவரை மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை. அண்ணாமலைக்கு நெருக்கடி ஏற்பட்டுவிட்டது என்றாா் ஆா்.எஸ்.பாரதி.

செய்தியாளா் சந்திப்பின்போது, மாநிலங்களவை உறுப்பினா்கள் என்.ஆா்.இளங்கோ, பி.வில்சன் உள்ளிட்ட வழக்குரைஞா் அணியைச் சோ்ந்த நிா்வாகிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT