தற்போதைய செய்திகள்

ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்படாத காப்புக் காடுகள்!

24th Jan 2022 08:02 AM | ஆ. நங்கையார்மணி

ADVERTISEMENT

வனத்துறைக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தபோதிலும், காப்புக் காடுகளாக அறிவிக்கப்பட்ட பல்லாயிரம் ஏக்கர் வன நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக மீட்டெடுக்கப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாட்டின் மொத்தப் பரப்பளவில் 8.09 கோடி ஹெக்டேர் பரப்பு வனப் பகுதியாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் வனப் பகுதியின் பரப்பு சுமார் 2,261 சதுர கி.மீட்டர் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஆந்திரம் 647 சதுர கி.மீ., தெலங்கானா 632 சதுர கி.மீ., ஒடிஸா 537 சதுர கி.மீ., கர்நாடகம் 155 சதுர கி.மீ., ஜார்க்கண்ட் 110 சதுர கி.மீ., பரப்புகளுடன் வனப் பகுதி அதிகரிப்பில் முன்னிலை மாநிலங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன. 

அதே நேரத்தில் பசுமை நிறைந்த பகுதிகளாக சுட்டிக்காட்டப்படும் வட கிழக்கு மாநிலங்களில் 1.020 சதுர கி.மீ., வனப் பரப்பு குறைந்துள்ளதாகவும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் கடந்த 2 நாள்களுக்கு முன்பு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

தமிழகத்தின் மொத்த நிலப் பரப்பான 1.30 லட்சம் சதுர கி.மீட்டரில், சுமார் 30 ஆயிரம் சதுர கி.மீட்டர்(23.80 சதவீதம்) வனப் பரப்பு மற்றும் மரங்கள் நிறைந்த பகுதியாக கண்டறியப்பட்டுள்ளன. வனப் பரப்பு அடிப்படையில் தமிழகம் 9-ஆவது இடத்தில் உள்ளது. சுமார் 20,293 சதுர கி.மீட்டர் காப்புக் காடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டம் 2,307 சதுர கி.மீ. பரப்புடன் முதலிடம் வகித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து கோவை 1,975 சதுர கி.மீ., திண்டுக்கல் 1,876 கி.மீ., ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் 1,813 கி.மீ., நீலகிரி 1,719 கி.மீ., தர்மபுரி 1,698 கி.மீ. பரப்புடன் அடுத்தடுத்த இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. 

ADVERTISEMENT

ஆனால், பல மாவட்டங்களிலும் காப்புக் காடுகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகள், மீட்கப்படாமல் தொடர்ந்து ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து வருகின்றன. இதனால் வனப் பகுதியில் இருக்க வேண்டிய விலங்குகள் விவசாயத் தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன. மேலும் இது விலங்குகள் மனித மோதல்களுக்கும் காரணமாக அமைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நீதிமன்றங்கள் உத்தரவிட்டும் தீர்வு காணப்படவில்லை: தமிழகத்தில் காப்பு நிலங்களாக இருந்த பல ஆயிரம் ஏக்கர் வனப் பரப்புகள், காப்புக் காடுகளாக அறிவிக்கப்பட்டன. ஆனால், அந்தப் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றிவிட்டு, காப்புக் காடுகளை பராமரிக்க முடியாத சூழல் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 

குறிப்பாக தேனி மாவட்டம் மேகமலையில் அதிகபட்சமாக 60,000 ஏக்கர், திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை, ஊமையாறு, வடகவுஞ்சி ஆகிய இடங்களில் சுமார் 11,000 ஏக்கர், நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் 10,000 ஏக்கர் காப்புக் காடுகள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதேபோல் கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் காப்புக் காடுகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் மீட்டெடுக்கப்படவில்லை. 

திண்டுக்கல் அடுத்துள்ள சிறுமலை வனப்பகுதி சுமார் 17,500 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இந்த வனப் பகுதியை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாத்து, மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில், கடந்த 1978-ஆம் ஆண்டு, காப்பு நிலமாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் தொடர்ச்சியாக கடந்த 2010-ஆம் ஆண்டு, சுமார் 7,500 ஏக்கர் காப்பு நிலம், காப்பு காடாக(ரிசர்வ் பாரஸ்ட்) அறிவிக்கப்பட்டது. ஆனாலும், இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. 

இதேபோல், கொடைக்கானல் வனக் கோட்டத்திற்குட்பட்ட வடகவுஞ்சி பகுதியில் 6,700 ஹெக்டேர் காப்பு நிலங்கள், காப்புக் காடுகளாக சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன. அதில் சுமார் 50 சதவீத நிலங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியிருந்தும், அதனை மீட்பதற்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. 


திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூர் அருகில் அமைந்துள்ளது ஊமையாறு காப்புக்காடு (சுமார் 500 ஏக்கர்) முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஆக்கிரமிப்பாளர்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு, கடந்த 2016-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து அந்த வன நிலத்தை மீட்பதற்கு அரசுத் தரப்பில் இதுவரை எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. 


இதேநிலை தான் இதர மாவட்டங்களிலும் உள்ளதாகக் கூறப்படுகிறது.


வனப் பகுதிகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக கீழமை நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் வனத் துறைக்குச் சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டபோதிலும், அரசியல் தலையீடு காரணமாக ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்படவில்லை என வன ஆர்வலர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.


வாழ்வியல் சூழல் பாதிப்பு: இதுதொடர்பாக பழனி மலை பாதுகாப்புக் குழு முன்னாள் செயலர் நா. அருண்சங்கர் கூறியதாவது: 
வனப் பகுதிகளில் வசித்து வந்த ஆதிவாசி மற்றும் பழங்குடியின மக்கள் பெரும்பாலான இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர். வனப் பகுதியிலிருந்து வெளியேறும் மழைநீர் முதல் வன மகசூல் வரை அனைத்து வளங்களையும் ஆக்கிரமிப்பாளர்கள் மட்டுமே அறுவடை செய்து வருகின்றனர். 


இயற்கைச் சுற்றுலா என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்ட வனப் பகுதிகளில் பண்ணை வீடுகள் கட்டப்படுகின்றன. அதற்கு விதிமுறைகளை மீறி சாலைகளும் அமைக்கப்படுகின்றன. அதுபோன்ற இடங்களுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள், நெகிழிப் பொருள்களை வீசிச் செல்கின்றனர். இதனால், வன உயிரினங்களின் வாழ்வியல் சூழல் பாதிப்புக்குள்ளாகிறது. ஆக்கிரமிப்பு காரணமாக பாதிக்கப்படும் பிரதான உயிரினமாக யானைகள் உள்ளன. 

வழித்தடம் மறிக்கப்படுவதோடு, குடிநீருக்கும் சிக்கல் ஏற்படுவதால், யானை மனித மோதல்கள் அதிகம் ஏற்படுகின்றன. வனப் பகுதிகளைப் பாதுகாக்கும் நோக்கில் செயல்படும் நேர்மையான அதிகாரிகள், உடனடியாக 'டம்மியான' பொறுப்புக்கு பணியிடமாற்றம் செய்யப்படுகின்றனர். இதனால், ஆர்வத்துடன் பணிக்கு வரும் இளம் அதிகாரிகளும் தங்களது கடமையை நிறைவேற்றுவதற்கு மாறாக, பிரச்னையின்றி பணிக் காலத்தை பூர்த்தி செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். 

அதனால்தான், ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடர்பாக நீதிமன்றங்கள் கடுமையான உத்தரவுகள் பிறப்பித்தும்கூட அரை நூற்றாண்டுக் காலம் தீர்வு காணப்படவில்லை என்றார். 

இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கேட்டபோது, வனப் பகுதிகளை மீட்பதற்கு நீதிமன்றங்கள் உத்தரவிட்டாலும் கூட, நில அளவீடு தொடங்கி, அதனை அறிக்கையிடுவது (நோட்டிபிகேஷன்) வரை பல்வேறு சிக்கல்கள் உள்ளன. 

வன நிலங்கள் ஆக்கிரமிப்புகள் தொடர்வதற்கு அரசியல் தலையீடுகள் பிரதான காரணமாக உள்ளன. வாக்கு வங்கி அரசியலுக்காக, ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றவிடாமல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால், உச்சநீதிமன்றம் வரையிலும் வனத் துறைக்குச் சாதகமான தீர்ப்புகள் கிடைத்த வழக்குகளில் கூட, அந்தத் தீர்ப்பை அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT