தற்போதைய செய்திகள்

சேலம் மேயராக அமரப்போவது யார்?

23rd Feb 2022 03:14 PM | ஆா். ஆதித்தன்

ADVERTISEMENT

திராவிட இயக்க வரலாற்றில் சேலம் நகரத்துக்கு முக்கியப் பங்கு உள்ளது எனலாம். நீதிக்கட்சியாக இருந்து திராவிடர் கழகம் 1944-இல் சேலம் மாவட்டத்தில் தான் உருவானது. திராவிடர் கழகம் என தீர்மானமாக கொண்டு வந்தவர் மறைந்த முதல்வர் அண்ணா.

அதேவேளையில் 1949-50-களில் சேலம் கோட்டை பகுதியில் தங்கி மாடர்ன் தியேட்டர்ஸ்க்காக திரைக்கதை வசனம் எழுதியவர் மறைந்த முதல்வர் கருணாநிதி. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நடிகர் சிவாஜி, மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் ஆகியோர் கால் பதித்த இடம் சேலம் நகரமாகும்.

இப்படி திராவிடர் கழகம் தொடங்கி திராவிட இயக்க வரலாற்றில் காலத்துக்குப் பெயர் தாங்கி நிற்கும் சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக ஒட்டுமொத்த வெற்றியைப் பெற்று தனி முத்திரை பதித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுகவின் கோட்டையாக விளங்கி வந்த சேலம் மாவட்டத்தின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றி சிம்மசொப்பனாக திமுக அவதாரம் எடுத்துள்ளது.

அந்தவகையில், சேலம் மாநகராட்சியில் 47 வார்டுகளில் வெற்றி பெற்று 2011 ஆண்டுக்குப் பிறகு மேயர் பதவியைக் கைப்பற்றியுள்ளது.

ADVERTISEMENT

சேலம் மாநகராட்சியைப் பொறுத்தவரை அஸ்தம்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை ஆகிய நான்கு மண்டலங்களை கொண்டதாகும். மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. சேலம் நகராட்சியாக இருந்த நிலையில் கடந்த 1994 இல் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது.

1996-இல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாநகராட்சி பதவியை திமுக கைப்பற்றியது. அப்போது மேயராக சூடாமணி பொறுப்பு வகித்துள்ளார். அதைத்தொடர்ந்து 2001 இல் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த சுரேஷ்குமார் மேயராக இருந்தார். அச்சமயத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மேயர் பதவியை ராஜிநாமா செய்தார். 

கலையமுதன், உமாராணி, ஜெயகுமார், அசோகன், சரவணன்

அதைத்தொடர்ந்து பொறுப்பு மேயராக சௌண்டப்பன் 7 மாத காலம் வரை பதவியில் இருந்தார். பின்னர் 2006-இல் நடைபெற்ற தேர்தலில் திமுகவைச் சேர்ந்த ரேகா பிரியதர்ஷினி மேயராகப் பொறுப்பு வகித்தார். அதைத்தொடர்ந்து 2011-இல் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த சௌண்டப்பன் மேயராக இருந்தார். 2016-இல் உள்ளாட்சி பதவிகாலம் முடிந்த நிலையில் தேர்தல் நடத்தப்படவில்லை.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில், திமுக ஓரிடத்தில் மட்டும் வெற்றி பெற்றது.

இதையடுத்து, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சேலம் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டு சேலம் மத்திய மாவட்ட செயலாளர் எம்எல்ஏ ஆர்.ராஜேந்திரன், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி ஆகியோரை ஒருங்கிணைத்து உள்ளாட்சி தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்தநிலையில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 47 வார்டுகளில் திமுக வென்று மாநகராட்சி தன்வசமாக்கியது. அதிமுக-7, காங்கிரஸ்-2, விசிக-1, சுயேச்சைகள் 3 பேர் வெற்றி பெற்றனர்.

சுயச்சைகளில் 19 ஆவது வார்டில் வெற்றி பெற்ற தேன்மொழி, சேலம் மத்திய மாவட்ட செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.ராஜேந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

2011 உள்ளாட்சி தேர்தலுக்குப் பிறகு தற்போதைய தேர்தலில் மாநகராட்சியைக் திமுக கைப்பற்றியுள்ளது. சேலம் திமுகவில் மேயர் பதவியைப் பிடிக்க போட்ட போட்டி நடைபெற்று வருகிறது.

அந்த வரிசையில் வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ள எஸ்.டி.கலையமுதன், செ.உமாராணி, ஜெயக்குமார், சரவணன் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது. புதிய மேயர் யாராக இருக்கும் என்பது திமுகவினரிடையே பரபரப்பாகப் பேசப்படும் மில்லியன் டாலர் கேள்வியாக இருந்து வருகிறது. சேலம் மாநகராட்சி மேயராக அரியணை ஏற போவது யார் என்பது மார்ச் 4-இல் நடைபெறும் மறைமுகத் தேர்தலில் தெரிந்துவிடும்.

படங்கள்: வே.சக்தி

ADVERTISEMENT
ADVERTISEMENT