டிவிட்டரில் தரப்படும் நீல அடையாளத்தை 6 வகைகளாக வரையறுக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்படும் என டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமூகத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ள நபர்களின் பெயரில் தவறான டிவிட்டர் கணக்கு தொடங்குவதை சரிசெய்ய, டிவிட்டரில் நீல நிற அடையாளம் தருவது வழக்கம்.
தற்போது 6 வகையாக வரையறுக்கப்பட்டு அந்த சேவையை மீண்டும் தரவுள்ளதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரசு, நிறுவனங்கள் மற்றும் அதன் பிராண்டுகள், செய்தி நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, சமூக ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள், பிரபலங்கள் என ஆறு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
மேலும் விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் மதத் தலைவர்கள் போன்ற பல வகைகளை இந்த ஆண்டின் இறுதிக்குள் அறிமுகப்படுத்தும் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது.
அடுத்த சில வாரங்களில் இது அறிமுகமாகவுள்ள நிலையில், இதற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதும், விண்ணப்பதாரர்கள் ஒரு சில நாள்களுக்குள் மின்னஞ்சல் பதிலை எதிர்பார்க்கலாம். இருப்பினும், அதிக அளவிலான விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில் பதிலுக்கு சில வாரங்கள் வரை ஆகலாம்.
உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், உங்கள் சுயவிவரத்தில் நீல நிற அடையாளம் தானாகவே காணப்படும். இதனிடையே ஏதேனும் தவறான பிரிவில் அடையாளப் படுத்தப்பட்டால் 30 நாள்களுக்குப் பிறகு மீண்டும் விண்ணப்பிக்கவும்.
ட்விட்டர் விதிகளை மீண்டும் மீண்டும் மீறும் கணக்குகளின் நீல நிற அடையாளம் அகற்றுவதற்கு உட்பட்டவை எனவும் தெரிவித்துள்ளனர்.
எங்கள் சரிபார்ப்புக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சுயவிவரப் பெயர், சுயவிவரப் படம் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண் ஆகியவை சரியாக இருக்க வேண்டும்.
உங்கள் கணக்கு கடந்த ஆறு மாதங்களுக்குள் செயலில் இருக்க வேண்டும் மற்றும் ட்விட்டர் விதிகளை கடைபிடிப்பதற்கான பதிவு இருக்க வேண்டும் என்று டிவிட்டர் நிறுவனம் கூறியுள்ளது.