தற்போதைய செய்திகள்

திருச்சி மேற்கில் கே.என். நேரு வெற்றி

2nd May 2021 11:13 PM

ADVERTISEMENT

திருச்சி: திருச்சி மேற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலருமான கே.என். நேரு, 1,12,515 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

திருச்சி மேற்கு தொகுதியில் கடந்த முறையும் (2016) இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக 2ஆவது முறையாகவும் வெற்றி பெற்றுள்ளார். மேலும், 2006ஆம் ஆண்டு இதே தொகுதியில் வெற்றி பெற்றவர். 2021 பேரவைத் தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேருவுடன், அதிமுக வேட்பாளர் வி. பத்மநாதன், அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ வேட்பாளர் ஆர். அப்துல்லா ஹஸ்ஸான், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் தமஜக சார்பில் எம். அபுபக்கர் சித்திக், நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி. வினோத் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

மேற்கு தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது.  28 சுற்றுகள் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே கே.என்.நேரு, முன்னிலையில் இருந்தார். அதிமுக வேட்பாளர் வி. பத்மநாதனைவிட சுற்றுக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வாக்குகள் வரை கூடுதலாக பெற்று வந்தார். இறுதிச் சுற்று நிலவரப்படி அதிமுக வேட்பாளரை விட 80 ஆயிரத்து 927 வாக்குகள் அதிகம் பெற்று கே.என். நேரு வெற்றி பெற்றார்.
மொத்தம் 1 லட்சத்து 12 ஆயிரத்து 515 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் வி. பத்மநாதன் 31,588 வாக்குகள் பெற்று 2ஆம் இடம் பிடித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வி. வினோத், 15 ஆயிரத்து 195 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளார். மநீம சார்பில் போட்டியிட்ட அபுபக்கர் சித்திக் 10,161 வாக்குகள் பெற்று 4ஆவது இடம் பிடித்துள்ளார். அமமுக சார்பில் போட்டியிட்ட எஸ்டிபிஐ வேட்பாளர் அப்பதுல்லா ஹஸ்ஸான் 2,464 வாக்குகள் பெற்றஉ 5ஆவது இடம் பிடித்துள்ளார். நோட்டாவுக்கு 2020 வாக்குகள் கிடைத்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT