தற்போதைய செய்திகள்

ஒரு சொல்லால் தண்டனையிலிருந்து தப்பிய பாலியல் குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

17th Jul 2021 11:44 AM

ADVERTISEMENT

 

சென்னை: 'செமன்' என்ற ஆங்கில வார்த்தையை, 'செம்மண்' என பதிவுசெய்ததை முறையாக ஆய்வு செய்யாமல், இரண்டு வயது பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியவரை விடுதலை செய்த போக்சோ நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதிக்கு இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது. குழந்தையை வீட்டின் திண்ணையில் விளையாட சொல்லி விட்டு, தாய் கடைக்கு சென்று வந்துள்ளார். அவர் திரும்பிய நேரத்தில் குழந்தை திண்ணையில் இல்லை. பின்னர் அந்த குழந்தை, பிரகாஷ் என்பவர் தன்னை முத்தமிட்டதாக  கூறிய விஷயம் அச்சத்தை ஏற்படுத்தியதால், குழந்தையின் உடல் மற்றும் உடைகளை சோதித்துள்ளார். அப்போது, குழந்தையின் பிறப்புறுப்பில் விந்தணுக்கள் படிந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வெளியூரில் உள்ள கணவன் மற்றும் அருகில் வசிப்பவர்களுக்கு தெரியப்படுத்தினார். பின்னர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதை கண்டறிந்த மருத்துவர், உடனடியாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வடுவூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த  வழக்கு  மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கால தாமதமாக புகார் அளிக்கப்பட்டதாகவும், மருத்துவ ஆதாரங்கள் முழுமையாக இல்லை, பிறப்புறுப்பில் செம்மண் மட்டுமே படிந்திருந்தது எனக்கூறி, கடந்த 2018-ஆம் ஆண்டு பிரகாஷ் விடுதலை செய்தது சிறப்பு நீதிமன்றம்.

ADVERTISEMENT

இந்த தீர்ப்பை எதிர்த்து குழந்தையின் தாய் சென்னை நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், காவல்துறையை நாடி புகார் அளிப்பதில் தாமதம் மற்றும் வழக்கில் குறிப்பிடப்படும் வார்த்தைகளில் உள்ள தவறுகள் ஆகிய காரணங்களால் குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர்.

போக்சோ சட்டத்தின் நோக்கம் மற்றும் எல்லையை முழுமையாக உணராமல் கீழமை நீதிமன்றம் வழக்கை விசாரித்து தீர்ப்பளித்துள்ளது. 3 வயதுக்குள்பட்ட குழந்தைகளால் எவ்வாறு சாட்சியளிக்க முடியும் என்பதை உணராமல், அந்தக் குழந்தையின் தாயின் மனநிலையை உணராமலும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு உள்ளதாக அதிருப்தி தெரிவித்துள்ளார்.

காவல்துறை விசாரணையின்போது தாய் அளித்த வாக்குமூலத்தில் குழந்தையின் பிறப்புறுப்பில் விந்தணுக்கள் படிந்திருந்தாக வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், அதன் ஆங்கில வார்த்தையை செமன் (semen) என குறிப்பிடுவதற்கு பதிலாக செம்மண் (semman) என்று தட்டச்சு செய்யப்பட்டதை, குற்றவாளி செம்மண் நிறத்திலான பொருள் என தனக்கு ஆதரவாக எடுத்துக்கொண்டு, ஆதாரம் இல்லை என வாதிட்டுள்ளார். தமிழ் வார்த்தையை ஆங்கிலத்தில்  எழுதியதால் வழக்கின் போக்கையே மாற்றியுள்ளது.

கல்வியறிவு குறைவாக உள்ள ஊரகப் பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்களில், காவல்துறையை நாடுவதில் சற்று சுணக்கம் காட்டுவார்கள். எனவே அதை ஒரு காரணமாக வைத்து குற்றத்தில் தொடர்புடைய நபரை விடுவிப்பது ஏற்கமுடியாது. விசாரணை நீதிமன்றங்கள் தங்களுக்கான அதிகாரத்தின்படி, வழக்கு தொடர்பான ஆவணங்களை காவல்துறையிடமிருந்து பெற்று, முழுமையாக ஆய்வு செய்து மனதை செலுத்தி விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும். எனவே இந்த வழக்கில் இரண்டு வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியாகி இருப்பதால், வழக்கிலிருந்து பிரகாஷை விடுதலை செய்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார். 

பிரகாஷூக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தைக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 

Tags : high court one sentence changed 5 years jailed சென்னை உயர்நீதிமன்றம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT