மேற்கு வங்க மாநிலத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகிய லஷ்மி ரத்தன் சுக்லா, சட்டப்பேரவை உறுப்பினராக தொடர்வேன் என்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தை மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் கட்சி ஆட்சி செய்து வருகிறது. மாநில சட்டபேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அக்கட்சியின் பல்வேறு தலைவர்களும் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில் மேற்கு வங்க மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த லஷ்மி ரத்தன் சுக்லா தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார்.
இந்நிலையில் பதவி விலகல் குறித்து சுக்லா கூறியதாவது,
“நான் கிரிக்கெட் விளையாடியது போல நேர்மையாக அரசியலில் ஈடுபட்டுள்ளேன். ஒரு கிரிக்கெட் வீரர் என்ற எனது அடையாளம் மிக அடிப்படையானது. இப்போதைக்கு, நான் விளையாட்டுகளில் கவனம் செலுத்துவேன். நான் சட்டப்பேரவை உறுப்பினராக எனது பதவிக் காலத்தை நிறைவு செய்வேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டின் இறுதியில் சுவேந்து ஆதிகாரி உள்ளிட்ட பல சட்டமன்ற உறுப்பினர்கள் திரிணமூல் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.