வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்குவங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் தில்லியில் தொடர்ந்து 40வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு மாநில அரசுகளும், எதிர் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வேளாண் சட்டங்கள் குறித்து மேற்குவங்க முதல்வர் பேசுகையில்,
நான் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கின்றேன். நாடு மற்றும் விவசாயிகளின் நலனுக்காக மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும்.
சட்டம் இயற்றுவதற்கு முன்பே, அவர்கள் சேமிப்புக் கிடங்குகளை உருவாக்கினார்கள். அதனால் தான் சட்டங்களை திரும்பப் பெறவில்லை எனத் தெரிவித்தார்.
மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்குவங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் எனக் கூறினார்.
இதற்குமுன் ஹரியாணா, தில்லி, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.