கேரளத்தில் 6 பேருக்கு புதிய வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம், பிரிட்டனில் புதிய வகை அதிதீவிர கரோனா கண்டறியப்பட்டதை அடுத்து, அந்நாட்டில் இருந்து வரும் விமானங்களுக்கு தற்காலிக தடைவிதித்து, சமீபகாலமாக பிரிட்டனிலிருந்து வந்த பயணிகள், அவர்களுடன் தொடார்பில் இருந்தவர்களின் சளி மாதிரிகளை பரிசோதனை செய்து வருகின்றனர்.
அதில், கரோனா கண்டறியப்படுவோரின் சளி மாதிரிகள் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது. அந்த சோதனை செய்ததில், கேரளத்தை சேர்ந்த 6 பேருக்கு புதிய வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட செய்தியில்,
பிரிட்டனில் உருவான புதிய வகை கரோனா, கேரளத்தின் கோழிக்கோடில் 2 பேருக்கு, ஆலப்புழாவில் 2 பேருக்கு, கோட்ட்டயத்தில் ஒருவருக்கு மற்றும் கண்ணூரில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கரோனா பாதிப்பு குறித்து மாநில முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில்,
கேரளத்தில் இன்று புதிதாக 3,021 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 5,145 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 19 பேர் இன்று ஒரே நாளில் சிகிச்சை பலனளிக்காமல் பலியாகியுள்ளனர்.