தற்போதைய செய்திகள்

சுகம் தரும் சித்த மருத்துவம்: மனச் சோர்வினை போக்கும் ‘மணத்தக்காளி கீரை’

DIN

‘உடல் சோர்வு’ என்பதை அனுபவிக்காதவர்கள் இல்லை எனலாம்.. அதென்ன மனச் சோர்வு? என்று பலருக்கு தோன்றும். மனச் சோர்வு மிகப்பெரிய பலவீனம். பல்வேறு நோய் நிலைகளுக்கும் இதுவே காரணம். டாக்டர் எனக்கு ஸ்ட்ரெஸ் ரொம்ப அதிகமாக இருக்கு. என்ன செய்தால் ஸ்ட்ரெஸ் குறையும்? என்று கேட்கக்கூடிய நபர்கள் இந்த நவீன உலகில் அதிகம். ‘மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்’ என்கிறது சித்த மருத்துவ கருத்துக்களை உள்ளடக்கிய நூலான திருமந்திரம். ஆகவே மனச் சோர்வு உடல் சோர்வுக்கும் ஆதாரம். மனம் சோர்வாக (அழுத்தமாக) இருக்கும் போது நடத்தை, எண்ணங்கள் இவை மாறுபடும்.  ஆகவே நல்ல எண்ணங்களும், செயல்களும் நமது மனது செம்மையாக இருந்தால் தான் நடைபெறும். இத்தகைய மனதை செம்மையாக்க, மன சோர்வினை போக்கும் சித்த மருத்துவ மூலிகை தான் ‘மணத்தக்காளி’.

மணத்தக்காளி என்றாலே பலருக்கும் மூளையில் சுரீல் என்று உதிக்கும் ஒருமித்த கருத்து என்னவென்றால் இது வயிறு புண்ணை ஆற்றும் என்பது தான். வாய்ப்புண்ணுக்கும் நல்லது என்பது கூட தான். அதையும் தாண்டி மனதின் சோர்வையும் போக்கும் தன்மை இதற்குண்டு. 

இன்றைக்கு பெயர்க்காரணம் என்றால் பலருக்கும் தெரியாது. அதாவது உங்கள் பெயரின் அர்த்தமோ, அல்லது காரணமோ என்ன? என்று கேட்டால் நம்மை வேற்று கிரக வாசிகளை போன்று பார்ப்பவர்கள் தான் அதிகம். ஆனால் நம் முன்னோர்கள் காரணமின்றி எந்த பெயரையும் வைத்ததில்லை. மூலிகைகள் பலவற்றிற்கும் அதன் குணங்கள் அடிப்படையிலோ அல்லது மருத்துவ செய்கைகள் அடிப்படையிலோ, பெயர் வைத்துள்ளது ஆச்சர்யமூட்டும் செயல். அந்த வகையில் இந்த மணத்தக்காளி என்பதற்கு மனத்துக்கு+களி என்ற பொருள் விளக்கம் உள்ளது. அதாவது மனதிற்கு மகிழ்ச்சியை தரக்கூடியது என்பது தான்.

‘பிளாக் நைட்ஷேட்’ என்று வெளிநாட்டினரால் அதிகம் பயன்படுத்தப்படும் மூலிகை இந்த மணத்தக்காளி கீரை தான். இந்த கீரையில் அல்கலாய்டுகள், டேனின்கள், சப்போனின்கள், அதிக அளவில் பிளவேனாய்டுகள் உடையது குறிப்பிடத்தக்கது. அதிகப்படியான பிளவேனாய்டுகள் உள்ளதால் கல்லிக் அமிலம், கட்டிசின், ரூடின் இவைகளை போன்று அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை உடையதாக உள்ளது. அதாவது இவை புற்று நோய்க்கட்டிகள் வராமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. ஆகையால் இந்த கீரையை உணவில் சேர்த்துக்கொள்வதில் வயிற்று புண் முதல் புற்றுநோய்க்கட்டி வரை வரவிடாமல் தடுக்கும். கல்லீரலை பாதுகாக்கும் தன்மையும் உடையது.

இதில் உள்ள பாலிபீனோல்கள், கொமரின், லிக்னின், தியோபீன்கள், புரதங்கள் மற்றும் பெப்டைடுகள்,  சல்ஃபைட் வேதிப்பொருட்கள் பல்வேறு டிஎன்ஏ, ஆர்என்ஏ வைரஸ்களின் பிரதி எடுத்தலை தடுப்பதாக உள்ளது. ஆம், ஆன்டி வைரஸாக செயல்படக்கூடியது. கல்லீரல் புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக உள்ள ஹெப்படிட்டீஸ்-சி  வைரஸ்களின் செயல்பாட்டை எதிர்த்து செயல்படுவதாவும் உள்ளது என ஆய்வு முடிவில் அறிய வந்துள்ளது. மதுபிரியர்கள் அவசியம் சேர்த்துக்கொள்ள நிச்சயம் நன்மை தரும்.

வாய்ப்புண். வயிற்றுப்புண் ஏற்பட்டால், சித்த வைத்தியன் முதல் சர்ஜன் (அறுவை சிகிச்சை நிபுணர்) வரை பரிந்துரைப்பது இந்த மணத்தக்காளி கீரையை தான். ஸ்ட்ரெஸ் என்று நாம் சொல்லக்கூடிய மன அழுத்தம் பல்வேறு நாட்பட்ட நோய் நிலைகளுக்கு காரணமாகிறது. ஸ்ட்ரெஸ் (மன அழுத்தம்) உருவாக்கும் குடல் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்குண்டு. அந்த 'இலைக்கு வாய்கிரந்தி வேக்காடு தீரும்' என்று அகத்தியர் குணவாகடம் கூறுகின்றது. மணத்தக்காளி காயை உலர்த்தி வற்றலாக்கி அவ்வப்போது நெய்யில் வதக்கி பயன்படுத்த சீரணத்தை தூண்டும். மலச்சிக்கலை தீர்க்கும். கல்லீரல் பலப்படுத்தி, பித்தத்தை குறைக்கும்.

இரவுப் பணி பார்த்து களைத்தவர்களுக்கும், தூக்கமின்மையால் அவதியுற்று வயிற்றுபுண் ஏற்பட்டவர்களுக்கும், பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்தால் துவண்டு கிடப்பவர்களுக்கும் மணத்தக்காளி கீரை ஒரு வரப்பிரசாதம். தெருவில் விற்க்கின்ற கீரை தானே என்று ஏளனமாக எண்ணாமல் வாங்கி பயன்படுத்த துவங்கினால் மன அழுத்த மாத்திரைகளை தவிர்க்கலாம். 

இனி மனச் சோர்வோ, அழுத்தமோ வருவது அவரவர் உண்ணும் உணவில் தான் உள்ளது. வாரம் இரு முறையாவது இந்த மணத்தக்காளி கீரையை நெய்யிட்டு சமைத்து உண்டால் மனம் நிச்சயம் மகிழ்ச்சி அடையும். நல்ல எண்ணம், செயல்களை ஊக்குவிக்க இந்த கீரை மிகவும் உதவும். இந்த கரோனா காலத்தில், இனி மன மகிழ்வுக்கு பீச்சோ, பார்க்கோ, திரை அரங்கமோ தேடி அலைய வேண்டியதில்லை. அன்றாடம் உண்ணும் தட்டில் இந்த கீரையை  சேர்த்தாலே போதும் மனதிற்கு சுகம் சேரும்.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் ஐடி: drthillai.mdsiddha@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருவள்ளூா்: 14 வேட்புமனுக்கள் ஏற்பு, 19 நிராகரிப்பு

தேமுதிக வேட்பாளா் அறிமுக கூட்டம்

உடலில் அலகு குத்தி அம்மன் வீதியுலா சென்ற பக்தா்கள்

முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1.05 கோடி

SCROLL FOR NEXT