தற்போதைய செய்திகள்

முழு ஊரடங்கு: சங்ககிரி அருகே 250 பேருக்கு மதிய உணவு வழங்கிய இளைஞர்கள்

25th Apr 2021 02:58 PM

ADVERTISEMENT

சங்ககிரி அமுதச்சுடர் அறக்கட்டளையின் இளைஞர்களின் சார்பில் 7 ஊர்களில் சாலையோரம் வசித்து வரும் ஆதரவற்றோர்கள்,  தினசரி கூலித் தொழிலாளர்கள் உள்பட 250 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை உணவு வழங்கினர். 

கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி நிகழாண்டு அரசு முதல் முழு ஊரடங்கினை அறிவித்துள்ளது.  முழு ஊரடங்கிலும் பொதுமக்கள் உணவு விடுதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் பார்சல் வாங்கிச் செல்லலாம் அறிவித்திருந்தது. இந்நிலையில் சங்ககிரி நகர் பகுதியில் உணவு விடுதிகள் சாத்தப்பட்டிருந்தன.

இதனையடுத்து சாலையோரம் வசிக்கும்  ஆதரவற்றோர்களுக்கும், தினசரி கூலி வேலைக்கு சென்றால் தான் உணவு சாப்பிடும் நிலையில் உள்ளவர்களுக்கு சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டையில் உள்ள அமுதச்சுடர் அறக்கட்டளையின் சார்பில் அதில் உள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து  உணவு வழங்க முடிவு செய்துள்ளனர்.

இளைஞர்களின் அம்மா, சகோதரிகள் நிர்மலா, கிருஷ்ணலட்சுமி, விசாலினி, கனகவள்ளி ஆகியோர்  உதவியுடன் 50 கிலோ அரிசி, 40 கிலோ தக்காளி, 6 லிட்டர் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு உணவு பொருள்களைக்கொண்டு உணவு சமைத்துள்ளனர்.

ADVERTISEMENT

சங்ககிரியைச் சேர்ந்த தொழிலதிபர் எ.வெங்கடேஸ்வரகுப்தா 50 கிலோ அரிசி வழங்கியுள்ளார். மீதமுள்ள பொருள்களான தக்காளி, எண்ணெய் உள்ளிட்ட சமையலுக்கு தேவையான செலவுகளை அறக்கட்டளையில் உள்ள இளைஞர்களே ஏற்றுக்கொண்டு அப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உணவுகளை தயாரித்த பின்னர் நான்கு இருசக்கர வாகனங்களில் அறக்கட்டளைத் தலைவர் வி.சத்யபிரகாஸ் தலைமையில்  துணைத்தலைவர் எஸ்.மணிகண்டன், செயலர் எஸ்.மாணிக்கம், துணைச் செயலர் ஜெ.அஜித், நிர்வாகிகள் எ.நவீன்குமார், ஆர்.சிவபாலா, பிரசாத், ஏ.கௌதம், பி.வெற்றிவேந்தன் ஆகியோர் கொண்ட குழுவினர் சங்ககிரி நகர் பகுதிகள், சங்ககிரி மேற்கு, சங்ககிரி ஆர்.எஸ்., திருச்செங்கோடு, கொங்கணாபுரம், எடப்பாடி, வைகுந்தம் உள்ளிட்ட ஏழு ஊர்களில் சாலையோரம் வசித்து வரும் ஆதரவற்றோர்கள், தினசரி கூலித் தொழிலாளர்கள் 250 பேருக்கு மதிய உணவினை நேரில் கொண்டு சென்று வழங்கினர்.

முழு ஊரடங்கில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தாமல் ஆதவரற்றோர்களுக்கு உணவு அளிக்கும் பணியல் ஈடுபட்ட இளைஞர்களை பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Sangakiri
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT