ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் டேங்கர் லாரிகள் மூலம் குறைந்த விலைக்கு டீசல் விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்ட இரண்டு டேங்கர் லாரிகளை ஒரகடம் காவல்துறையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களை ஏற்றி வர ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் நூற்றுக்கணக்கான பேருந்துகள், வேன் மற்றும் கார்கள் பயன்படுத்தப்ப்டடு வருகிறது.
இந்த நிலையில், தொழிற்சாலைகளில் ஊழியர்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு, செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சில குறிப்பிட்ட டீசல் விற்பனை நிலையங்களில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் சுமார் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் லிட்டர் டீசல் தினமும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் ஸ்ரீபெரும்புதூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் பெட்ரேல் டீசல் விற்பனை நிலையங்களில் விற்பனை பெருமளவில் குறைந்துள்ளதாகவும், மீனவர்கள் பயன்படுத்தும் படகுகளுககு அரசு மானியத்துடன் வழங்கப்படும் டீசல்கள் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் முறைகேடாக குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் பெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து தினமணி இணையதளத்தில் கடந்த வியாழக்கிழமை படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக ஒரகடம் பகுதியில் தனியார் வாகனங்களுக்கு குறைந்த விலைக்கு டீசல் விற்பனை செய்ய சனிக்கிழமை வந்த இரண்டு டேங்கர் லாரிகளை ஒரகடம் காவல்துறையினர் பறிமுதல் செய்து, லாரிகளில் இருக்கும் டீசல்கள் மீனவர்களுக்காக மான்ய விலையில் வழங்கப்பட்ட டீசலா என விசாரனை நடத்தி வருகின்றனர்.