புதுதில்லி: புதுதில்லியில் கரோனா பரிசோதனை முடிவுகளில் மோசடி செய்த மருத்துவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தில்லி காவல் துணை ஆணையர் அதுல் தாக்கூர் கூறுகையில்,
கரோனா பரிசோதனை செய்து போலி முடிவுகளை வெளியிட்டதற்காக மருத்துவர் அதுல் பராஷர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அமித் சிங் மற்றும் சோனு ஆகிய 3 பேரை கைது செய்துள்ளோம்.
இவர்கள் கரோனா பரிசோதனை செய்ய வருபவர்களை ஒரு வீட்டிற்குள் பிபிஇ உடை அணிந்து அழைத்துச் சென்று மாதிரி எடுத்துள்ளனர். பின், அமித் போலி அறிக்கைகளை தயார் செய்து மருத்துவர் அதுல் மூலம் நோயாளிகளிடம் கொடுத்துள்ளார்.
இந்த சோதனை முடிவை சிலர் தில்லியில் உள்ள புகழ்பெற்ற ஆய்வகத்தில் மறுசோதனை செய்துள்ளனர். அதில், சோதனை முடிவுகள் போலி என தெரியவந்தது. இதையடுத்து பிரபல ஆய்வகம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரையடுத்து மருத்துவர் அதுலை விசாரித்ததில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து மருத்துவர் அதுல் மற்றும் 2 பேரைக் கைது செய்துள்ளோம் என கூறினார்.