தற்போதைய செய்திகள்

திருப்பூரில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

29th Oct 2020 04:36 PM

ADVERTISEMENT

திருப்பூர்: திருப்பூர், முருகம்பாளையத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் முருகம்பாளையத்தில் இருந்து பாறைக்காடு செல்லும் வழியில் கடந்த ஒரு மாதத்துக்கும் முன்பாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்தக் கடையானது குடியிருப்பு பகுதி மற்றும் பள்ளிகளுக்கு அருகில் இருப்பதால் அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்த தகவலின்பேரில் வீரபாண்டி காவல் துறையினர் மற்றும் திருப்பூர் தெற்கு காவல் உதவி ஆணையர் நவீன்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ADVERTISEMENT

இதில், வரும் திங்கள்கிழமைக்குள் உயர் அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக முருகம்பாளையம் பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Tiruppur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT