தற்போதைய செய்திகள்

அருப்புக்கோட்டை அருகே கண்மாய் நீரை எடுக்கவிடாமல் தடுப்பதாக கிராமத்தினர் புகார்

19th Oct 2020 06:58 PM

ADVERTISEMENT

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பந்தல்குடி அருகே சின்னாஞ்செட்டிப்பட்டியில் சிலர் கண்மாய் நீரை எடுத்துப் பயன்படுத்தவிடாமல் கிராமத்தினரைத் தடுப்பதாக திங்கள்கிழமை காவல்துறையிடம் புகார் அளித்ததுடன் ஆட்சியரிடமும் புகார் அளிக்க கிராமத்தினர் சென்றனர்.

பந்தல்குடி அருகே உள்ளது சின்னாஞ்செட்டிப்பட்டி கிராமம். இங்கு சுமார் 600க்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதனிடையே இங்குள்ள கண்மாயில் உள்ள நீரை நீண்ட நெடுங்காலமாக இக்கிராமத்தினர் பயன்படுத்திவரும் நிலையில்,தற்போது சிலர் கண்மாய் நீரைப் பயன்படுத்தவிடாமல் கிராமத்தினரைத் தடுப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக கிராமத்தினரின் கோரிக்கையைக் கேட்டு விசாரணை செய்ய பந்தல்குடி காவல்துறையினர் திங்கள்கிழமை நேரில் வந்திருந்தனர். அப்போது காவல்துறையிடம் புகார் செய்த பொதுமக்கள் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தியதுடன் ஆட்சியரிடம் புகார் செய்யவும் மொத்தமாக சுமார் 100க்கு மேற்பட்டோர் கிளம்பினர்.

கரோனா தடுப்புச் சட்டத்தின்படி மொத்தமாக 100க்கும் மேற்பட்டோர் விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் செல்ல காவல்துறையினர் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து தாங்கள் சென்றே தீருவோம் என கிராமத்தினர் கூறியதால், கைது செய்யப்படுவீர்கள் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

பின்னர் அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதில் கிராமத்தினரில் 10 பேர் மட்டும் ஆட்சியரிடம் மனு அளிக்கச் செல்ல அனுமதிக்கப் பட்டனர்.

Tags : virudhunagar
ADVERTISEMENT
ADVERTISEMENT