தற்போதைய செய்திகள்

அம்மாசை கொலை வழக்கு: வழக்குரைஞர் உள்பட மூவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

30th Nov 2020 08:19 PM

ADVERTISEMENT

அம்மாசை கொலை வழக்கில் வழக்குரைஞர் உள்பட மூன்று பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்து கோவை நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை சுந்தராபுரம் அருகேயுள்ள குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் ராஜவேலு(வயது52). இவரது மனைவி மோகனா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

ஒடிசா மாநிலத்தில் மோகனா நிதி நிறுவனம் நடத்தினார். இதன்மூலம் அவர் ரூ.12 கோடி வரை மோசடி செய்தார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் அளித்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஒடிசா காவல்துறை மோகனாவைத் தேடி வந்தனர். காவல்துறை தேடி வருவதை அறிந்த அவர் அங்கிருந்த தப்பி கோவை வந்து தலைமறைவானார்.

இந்நிலையில் தனது மனைவியை காப்பாற்ற முயன்ற ராஜவேலு பல்வேறு திட்டங்களைத் தீட்டினார். அதில் ஏதும் பலன் தராததையடுத்து தன் மனைவி உயிரிழந்ததாக நாடகமாடி வழக்கை முடிக்க அவர் முடிவு செய்தார்.  இந்நிலையில் தன்னிடம் வழக்கு தொடர்பாக ஆலோசனைகள் கேட்டு வந்த கோவை சிவானந்தா காலனியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மனைவி அம்மாசை(45) என்ற பெண்ணை கோவை கோபாலபுரத்தில் உள்ள தனது அலுவலகத்துக்கு வருமாறு கூறினார். இதை நம்பி அங்கு சென்ற அம்மாசையை தனது ஓட்டுநர் பழனிசாமி என்பவருடன் சேர்ந்து கழுத்தை நெறித்து ராஜவேலு கொலை செய்தார்.

ADVERTISEMENT

பின்னர் அவரது உடலை தனது மனைவி மோகனா எனக் கூறி அருகில் இருந்த மின்மயானத்தில் எரித்தனர். இதையடுத்து தனது மனைவியின் பெயரில் இறப்புச் சான்றிதழ் பெற்று அந்த சான்றிதழை ஒடிசா மாநில காவல்துறையிடம் ஒப்படைத்து வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தார். இச்சம்பவம் 2011 டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதையடுத்து ராஜவேலு குறிச்சி பகுதியில் இருந்து இடம்மாறி கோவை நகர் பகுதிக்குள் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தனது மனைவி மோகனா பெயரில் சொத்து ஒன்றைப் பதிவு செய்வதற்காக அவர் இறக்கவில்லை என்றும் தவறாக இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறி உயிரோடிருப்பதாக சான்றிதழ் பெற்று சமர்பித்தார். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் காவல்துறை ராஜவேலுவின் ஓட்டுநர் பழனிசாமியை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ராஜவேலு தனது மனைவியைக் காப்பாற்ற அம்மாசையை கொலை செய்து எரித்த தகவலை காவல்துறையிடம் தெரிவித்தார்.

இதையடுத்து காவல்துறை ராஜவேலு, மோகனா, உதவியாளர் பொன்ராஜ், ஓட்டுநர் பழனிசாமி ஆகியோரை கைது செய்தனர். அதில் பென்ராஜ் அப்ரூவராக மாறினார். இதையடுத்து அவரை காவல்துறை வழக்கில் இருந்து விடுவித்தனர்.

இந்த வழக்கின் விசாரணை கோவை ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் திங்கள்கிழமையன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இந்த வழக்கு நீதிபதி டி.ஹெச்.முகமது ஃபாரூக் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகிய ராஜவேலு, மோகனா, பழனிசாமி ஆகியோரிடம் இந்த வழக்கு குறித்து நீதிபதி கேட்டார். அப்போது ராஜவேலு, தான் இதய நோயாளி எனவும், இந்த வழக்கு தன் மீது திட்டமிட்டு சுமத்தப்பட்டது என்றும் கூறினார். இதேபோல அவரது மனைவி மோகனா, தனக்கும் தன் மீது சுமத்தப்பட்ட மோசடி வழக்கிற்கும் எந்த தொடர்புமில்லை. கொலை வழக்கில் தான் திட்டமிட்டு சேர்க்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இவற்றை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கில் தொடர்புடைய ராஜவேலு, அவரது மனைவி மோகனா, ஓட்டுநர் பழனிசாமி ஆகியோரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். மேலும், கொலை குற்றத்திற்காக மூவருக்கும் தலா ஆயுள் தண்டனையும், ராஜவேலுக்கு ரூ.80 ஆயிரம் அபராதமும், மோகனாவிற்கு ரூ.55 ஆயிரமும், பழனிசாமிக்கு ரூ.30 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் குற்றவியல் சதிக்காக மூவருக்கும் தலா ஆயுள் தண்டனையும் மீதமுள்ள மோசடி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளுக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார். இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்குமாறு தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்த அம்மாசையின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இழப்பீடு வழங்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பு குறித்து, கொலை செய்யப்பட்ட அம்மாசையின் குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Tags : coimbatore
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT